தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெங்களூரில் புதிய மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்

2 mins read
பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்
5b4b1c28-abcb-4c4e-8caa-00a6c6c92d8b
மெட்ரோ ரயிலில் பயணம் செய்தபோது மாணவர்களுடன் உரையாடி மகிழ்ந்த பிரதமர் நரேந்திர மோடி. - படம்: ஊடகம்
multi-img1 of 2

பெங்களூரு: கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் மூன்று புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளையும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஞ்சள் வழித்தட மெட்ரோ ரயில் சேவையையும் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 10) தொடங்கிவைத்தார்.

கேஎஸ்ஆர் ரயில் நிலையத்திலிருந்து பெங்களூர் - பெலகாவி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையைப் பிரதமர் தொடங்கிவைத்தார். அமிர்தசரஸ் - ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கத்ரா, நாக்பூர் (அஜ்னி) - புனே ஆகிய நிலையங்களுக்கு இடையே மற்ற இரு ரயில் சேவைகளும் காணொளி வழியாகத் தொடங்கி வைக்கப்பட்டன.

பெங்களூரு நகரில் ‘நம்ம மெட்ரோ’ சேவை மூலம் ஊதா, பச்சை வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், புதிதாக மஞ்சள் வழித்தடம் திறக்கப்பட்டுள்ளது. ஆர்வி ரோடு (ராகிகுட்டா) - பொம்மசந்திரா இடையிலான அத்தடமானது நெரிசல்மிக்க சில தகவல் தொழில்நுட்ப வட்டாரப் பாதைகளை இணைக்கும் என்பதால் பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் இடம்பெற்றுள்ள இந்த வழித்தடமானது 19 கிலோமீட்டர் நீளம் கொண்டது; அதில் 16 நிலையங்கள் அமைந்துள்ளன.

மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கிவைத்த திரு மோடி, ராகிகுட்டா நிலையத்திலிருந்து எலக்ட்ரானிக் சிட்டிவரை அதில் பயணம் செய்தார். அப்போது, பள்ளி மாணவர்கள் சிலருடனும் அவர் உரையாடி மகிழ்ந்தார்.

அத்துடன், ரூ.15,610 கோடி மதிப்பிலான மெட்ரோ ரயில் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், “ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றிக்கு நமது தொழில்நுட்பமும் ‘மேக் இன் இந்தியா’ மூலம் நாம் உருவாக்கிய தற்காப்புக் கருவிகளுமே காரணம். அதற்கு கர்நாடக, பெங்களூரு இளையர்கள் பெரும்பங்கு அளித்துள்ளனர்,” என்றார்.

கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், மாநில முதல்வர் சித்தராமையா, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோரும் அந்நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

இதனிடையே, பிரதமரின் வருகையை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்க உறுப்பினர்களைக் காவல்துறை கைதுசெய்தது.

குறிப்புச் சொற்கள்