கோல்கத்தா: உலகின் ஆகப்பெரிய சமூகத்தின் கொண்டாட்டமாக யோகா உருவெடுத்துள்ளது என்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார.
நாடுகள், கலாசாரங்களைக் கடந்து யோகா கலை மக்களை ஒன்றிணைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கோல்கத்தாவில் நடைபெற்ற 12வது அனைத்துலக யோகா தினக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.
“பூமியின் மிக நீண்ட நாளாகக் கருதப்படும் ஜூன் 21, யோகா கலையினால் இப்போது உலகின் மிகப்பெரிய சமூகக் கொண்டாட்ட நாளாக மாறியுள்ளது. யோகா மக்களை ஒன்றிணைக்கிறது. இந்தத் தருணத்தில் உலக மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.
‘தூய்மை மூலம் வரவேற்பு’ என்ற திட்டத்தை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்த கோல்கத்தா மக்களுக்கும் அவர் தமது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இவ்வாண்டின் அனைத்துலக யோகா தினக் கருப்பொருளான ‘ஆரோக்கியமான முதுமைக்கு யோகா’ குறித்துப் பேசிய பிரதமர் மோடி, உடல் ஆரோக்கியம், மனநலம், சுறுசுறுப்பான முதுமையை ஊக்குவிப்பதில் இந்தத் தொன்மையான கலை முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறினார்.
“யோகா என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல. அது எந்தவொரு குறிப்பிட்ட வயதினருக்கும் உட்பட்டது அல்ல. அது மனித ஆன்மாவின் வெளிப்பாடு,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
“ஆரோக்கியமான முதுமையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திய அவர், வயது முதிர்வு என்பது மனிதனின் ஆற்றலைக் குறைத்துவிடக் கூடாது என்பதை உறுதிப்படுத்த நாம் உழைக்க வேண்டும்,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“இருபது வயதில் இருந்ததைவிட 40 வயதில் அதிக நெகிழ்வுடனும் முப்பது வயதில் இருந்ததைவிட 50 வயதில் அதிக ஆற்றலுடனும் விளங்குவதே நமது இலக்காக இருக்க வேண்டும்.
“இறுதியாக, மக்கள் யோகாவை ஏதோ ஒரு குறிப்பிட்ட நாளுக்கான கொண்டாட்டமாக மட்டும் சுருக்கிக் கொள்ளாமல், அதனைத் தங்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக் கொள்ள வேண்டும்,” என்று திரு மோடி கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே, “யோகாவை அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக மாற்றுவோம்,” என்று மத்திய தற்காப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) கூறினார்.
மேகாலயாவின் அப்பர் ஷில்லாங்கில் உள்ள இந்திய விமானப்படையின் மேம்பட்ட தரையிறங்குத் தளத்தில் அனைத்துலக யோகா நாளைக் கொண்டாடிய திரு ராஜ்நாத் சிங், “யோகா என்பது, இந்தியாவின் தொன்மையான அறிவு மரபிலிருந்து உருவானது. இது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நலனுக்கு வழிவகுக்கிறது,” என்றார்.

