பெங்களூரு: மண்ணுக்குள் புதைக்கப்பட்ட யோகா ஆசிரியை மூச்சுப்பயிற்சி மூலம் உயிர்பிழைத்த சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது.
கடந்த 2003ல் வெளிவந்த ஹாலிவுட் படம் ‘கில் பில்’ (Kill Bill). இதில், நாயகியை சிலர் உயிருடன் மண்ணுக்குள் புதைப்பது போலவும் அவர் தனக்குத் தெரிந்த தற்காப்புக் கலையைப் பயன்படுத்தி மண்ணுக்குள் இருந்து வெளியேறி உயிர்தப்புவது போலவும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.
இந்தக் காட்சிகளை உண்மையாக்கும் வகையில் உண்மைச் சம்பவம் ஒன்று கர்நாடக மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த பிந்து என்ற பெண்ணுக்கு, தன் கணவருக்கும் யோகா ஆசிரியை ஒருவருக்கும் தொடர்பு இருப்பதுபோல் சந்தேகம் எழுந்தது.
இதுகுறித்து தன் நண்பரான சதீஷ் ரெட்டி என்பவரிடம் பிந்து கூறியுள்ளார்.
பெங்களூரில் துப்பறியும் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் சதீஷ் ரெட்டி, சம்பந்தப்பட்ட 34 வயது யோகா ஆசிரியையை சந்தித்து யோகா கற்றுக்கொள்வதாகக் கூறி நட்பை வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 23ஆம் தேதியன்று, திபுரஹல்லி பகுதியில் வசிக்கும் யோகா ஆசிரியையின் வீட்டுக்குச் சென்ற சதீஷ், அவரைத் தனது காரில் ஏற்றிக் கொண்டு ஊருக்கு வெளியே இருக்கும் புறநகர்ப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
போகும் வழியில் சதீஷின் நண்பர்கள் மூவர், பிந்து ஆகிய நால்வரும் ஏறியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இவர்கள் ஐவரும் சேர்ந்து யோகா ஆசிரியையை காருக்குள்ளேயே வைத்து கடுமையாகத் தாக்கி, அவரை ஒரு காட்டுப் பகுதிக்கு கூட்டிச் சென்று, அவரது ஆடைகளைக் களைந்து, கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றுள்ளனர்.
அப்போது அறிவுக்கூர்மையுடன் செயல்பட்ட யோகா ஆசிரியை, தனது மூச்சைச் சிறிது நேரம் கட்டுப்படுத்தி மயக்கமடைந்தது போல் நடித்தார்.
யோகா ஆசிரியை உயிரிழந்துவிட்டதாக நினைத்த கும்பல், அவரை அங்கேயே அவசர அவசரமாக குழி தோண்டிப் புதைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது.
யோகா ஆசிரியை தனக்குத் தெரிந்த மூச்சுப்பயிற்சி மூலம், தனது மூச்சை கட்டுப்படுத்தி மண்ணுக்குள் இருந்து வெளியேறி உயிர்தப்பினார்.
இதைத்தொடர்ந்து அருகில் இருந்த கிராம மக்களிடம் சென்று உதவி கேட்டு ஆடைகளை வாங்கி அணிந்து கொண்டு, நடந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்த காவலர்கள், கொலை முயற்சியில் ஈடுபட்ட புகார் தொடர்பாக பிந்து, சதீஷ் உட்பட ஐவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.