புதுடெல்லி: இந்திய ஆயுதப்படை வரலாற்றில் முதன்முறையாக ராணுவத்தின் மருத்துவப் பிரிவு அல்லாத வழக்கமான பணிப்பிரிவில் இருந்து ஒரு பெண் இரண்டு நட்சத்திர அந்தஸ்து கொண்ட அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.
விமானப் படை ஏர் வைஸ் மார்ஷல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ள சக்தி சர்மா, செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 1) அன்று விமானப்படைத் தலைமையகத்தில் கல்விப் பிரிவின் உதவி தலைமை அதிகாரியாக முறைப்படி பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
இந்திய ராணுவ வரலாற்றில் கடந்த காலங்களில் பல பெண்கள் உயர்பதவிகளை வகித்து வந்தபோதிலும் அவை அனைத்தும் மருத்துவ, தாதியர் பிரிவுகளை மட்டுமே சார்ந்தவையாக இருந்தன.
கடந்த 1992ஆம் ஆண்டில்தான் பெண்கள் வழக்கமான படைப்பிரிவுகளில் சேர்க்கப்படத் தொடங்கினர். 1994ல் விமானப்படையின் கல்விப் பிரிவில் இணைந்த ஏவிஎம் சக்தி சர்மா, தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகிய மூன்று படைகளிலும் மருத்துவத்துறை அல்லாத பிரிவிலிருந்து இரண்டு நட்சத்திர அந்தஸ்தைப் பெறும் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
முன்னதாக, மருத்துவப் பிரிவு அல்லாத பிரிவில் முதல் பெண் குரூப் கேப்டனாகவும், கபூர்தலா சைனிக் பள்ளியின் முதல் பெண் முதல்வராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.


