தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கை தானம் செய்தவரின் சகோதரருக்கு ‘ராக்கி’ கயிறு கட்டி நன்றி தெரிவித்த சிறுமி

2 mins read
812f341d-0076-45e3-be52-b490d368ae47
‘ரக்‌ஷா பந்தன்’ பண்டிகை வேளை என்பதால் 14 வயான சிவம் மிஸ்திரிக்கு, தாம் கொண்டு வந்த ‘ராக்கி’ கயிற்றைக் கட்டிவிட்டார் அனம்தா. - படம்: ஊடகம்
multi-img1 of 3

சூரத்: மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, விபத்தில் தனது வலது கையை இழந்த 16 வயதுச் சிறுமிக்கு கை மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் வாழ்க்கையில் ஒளி வீசியது.

இதையடுத்து, தனக்கு கை தானம் செய்தவரின் சகோதரருக்கு அந்தப் பெண், சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், ‘ராக்கி’ கயிறு கட்டி தன் பாசத்தையும் நன்றியும் காட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம், அலிகார் பகுதியைச் சேர்ந்தவர் அனம்தா அஹ்மத். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தனது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, அங்கு மின்சாரக் கம்பி அறுந்து விழுந்த விபத்தில் சிக்கிய அனம்தாவின் வலது கை துண்டிக்கப்பட்டது. இதனால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டார் அச்சிறுமி.

இந்நிலையில், மூளை ரத்தக்கசிவு காரணமாக இறந்துபோன ரியா என்ற இளம் பெண்ணின் உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தார் தானமாக அளிக்க முன்வந்தனர்.

ரியாவின் சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல், கார்னியா, கைகள் ஆகியவற்றை அவரது குடும்பத்தார் தானமாக வழங்கியது மூலம் எட்டு பேரின் உயிர் காப்பாற்றப்பட்டது.

இந்த உடல் உறுப்பு தானத்தின் மூலம் பெறப்பட்ட வலது கை, ரியாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.

இதையடுத்து, ரியாவின் குடும்பத்தாருக்கு நன்றி தெரிவிக்க, குஜராத்தில் உள்ள வால்சாத் பகுதிக்கு பயணம் மேற்கொண்ட அனம்தா, அங்கு ரியாவின் சகோதரர் சிவம் மிஸ்திரியை நேரில் சந்தித்தார். அப்போது, இருவருக்குமே கண்களில் கண்ணீர் தளும்பியது.

‘ரக்‌ஷா பந்தன்’ பண்டிகை வேளை என்பதால் 14 வயதான சிவம் மிஸ்திரிக்கு, தாம் கொண்டு வந்த ‘ராக்கி’ கயிற்றைக் கட்டிவிட்டார் அனம்தா.

அப்போது, தனது சகோதரி ரியா, இறக்கும் வரை தனது கைகளில் பலமுறை முத்தமிட்டு தனது அன்பை வெளிப்படுத்தியதாக சிவம் மிஸ்த்ரி நினைவுகூர்ந்தபோது, அங்கிருந்த அனைவரும் உணர்ச்சிவசப்பட்டனர்.

பின்னர் இரு குடும்பத்தாரும் ‘ரக்‌ஷா பந்தன்’ பண்டிகையைக் கொண்டாடினர்.

“இந்த முறை என் சகோதரி அனம்தா என்னைப் பார்க்க வந்தார். அடுத்த ஆண்டு நான் அவரைப் பார்க்கச் செல்வேன். இந்தப் பாரம்பரியம் எங்கள் வாழ்நாள் முழுவதும் தொடரும்,” என்றும் சிவம் மிஸ்திரி மேலும் கூறினார்.

“என் ரியா மீண்டும் உயிர்பெற்றது போல் உணர்ந்தேன்,” என்று அனம்தாவை அரவணைத்த ரியாவின் தாயார் திரிஷ்ணா கூறினார்.

குறிப்புச் சொற்கள்