கொச்சி: கேரளாவில் 19 ஆண்டுகளுக்குமுன் இளம்பெண்ணையும் பிறந்து 17 நாள்களேயான அவரது இரட்டைப் பிள்ளைகளையும் கொன்றுவிட்டுத் தலைமறைவான முன்னாள் ராணுவ ஊழியர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மத்தியப் புலனாய்வுப் பிரிவின் (CBI) சென்னைப் பிரிவு அதிகாரிகள், கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) அவ்விருவரையும் கைதுசெய்து கொச்சி நகருக்குக் கொண்டுசென்றனர்.
திபில் குமார், ராஜேஷ் இருவரும் 2006ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி, 24 வயது ரஞ்சினி எனும் பெண்ணையும் அவருக்குப் பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகளையும் கொன்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது திபில் குமாருக்கு வயது 28. ரஞ்சினியுடன் திருமணம் செய்துகொள்ளாமலே தொடர்பிலிருந்த அவர், 2006 ஜனவரி 24ஆம் தேதி பெண் பிள்ளைகள் பிறந்ததும் விலகிச்சென்றதாகவும் அதனால் ரஞ்சினி கேரள மாநில மகளிர் ஆணையத்திடம் புகாரளித்ததாகவும் கூறப்பட்டது.
குமார்தான் அப்பிள்ளைகளுக்குத் தந்தை என்பதை உறுதிசெய்ய மரபணுச் சோதனைக்கு ஆணையம் உத்தரவிட்டது. இதனால் சினமடைந்த குமார் ரஞ்சினியைக் கொல்லச் சதித்திட்டம் தீட்டினார்.
அவ்வேளையில் ரஞ்சினியுடனும் அவரது தாயாருடனும் நட்பு பூண்ட ராஜேஷ் (அப்போது 33 வயது), குமாரைச் சமாதானப்படுத்தி ரஞ்சினிக்குத் திருமணம் செய்துவைப்பதாகக் கூறினார். ஆனால், இறுதியில் குமாருடன் சேர்ந்து ரஞ்சினியையும் சிசுக்களையும் அவர் கொன்றதாக ‘சிபிஐ’ அதிகாரிகள் கூறினர்.
தலைமறைவான குமாரும் ராஜேஷும் பாண்டிச்சேரியில் இருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டதில் இருவரும் பிடிபட்டனர். இடைப்பட்ட காலத்தில் இருவரும் பெயர்களை மாற்றிக்கொண்டு, ஆசிரியைகள் இருவரைத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. அவர்களுக்குப் பிள்ளைகளும் உள்ளனர்.
குமாரும் ராஜேஷும் சனிக்கிழமை (ஜனவரி 4) எர்ணாகுளம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். ஜனவரி 18ஆம் தேதி வரை அவர்களைத் தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.