பெங்களூரு: கேரள மாநிலத்தைச் சேர்ந்த ‘கொச்சின் ஷிப்யார்ட்’ கப்பல் கட்டும் நிறுவனத்தின் கிளை அலுவலகம் கர்நாடகாவில் உள்ள உடுப்பி மல்பே கடற்கரையில் செயல்பட்டு வருகிறது.
அங்கு இந்திய நாட்டின் கடற்படைக்குச் சொந்தமான கப்பல் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அந்தக் கப்பல் கட்டும் தளம் குறித்த தகவல்கள், படங்கள் மற்றும் காணொளிகள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புக்கு அனுப்பப்படுவதாக கடந்த ஆண்டு நவம்பரில் தகவல் வெளியானது.
இதுகுறித்து, ‘கொச்சின் ஷிப்யார்ட்’ நிறுவனம் அளித்த புகாரின்பேரில் உடுப்பி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், நிறுவனத்தில் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றும் சிலர் உளவாளிகளாகச் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களின் கைப்பேசி எண்கள், சமூக ஊடகக் கணக்குகளைக் காவல்துறையினர் ஆய்வுசெய்தனர்.
அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கடந்த நவம்பரில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரோஹித், 23, சான்ட்ரி, 26, என்ற இருவரைக் கைதுசெய்தனர்.
விசாரணையில், குஜராத்தை சேர்ந்த ஹிரேந்திர குமார் சந்தேக நபர்களுக்கு ‘சிம்’ அட்டை வாங்கி கொடுத்து போலி ‘வாட்ஸ்அப்’ கணக்குகளை உருவாக்கி கொடுத்தது அம்பலமானது.
அதையடுத்து, ஹிரேந்திர குமாரை அதிகாரிகள் கைதுசெய்தனர். அவரிடம் நடத்திய விசாரணைக்குப் பின் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அலிப் இஸ்லாம், 21, என்ற இளையர் கேரளாவில் உள்ள இடுக்கியில் கைதுசெய்யப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அலிப் இஸ்லாம் மேற்கு வங்க முகவரியில் அடையாள அட்டை வைத்துள்ள போதும், அவர் பங்ளாதேஷைச் சேர்ந்தவராக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். எனவே அவரை ஏழு நாள்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

