குண்டூர்: ஆந்திர மாநிலம் பழநாடு மாவட்டம் நரசராவ்பேட்டையைச் சேர்ந்த தேவார பவானி பிரசாத் எனும் இளையர், பெற்றோர் தனக்கு மோட்டார்சைக்கிள் வாங்கித் தராததால் வீட்டிலிருந்த நான்கு இரும்புச் சாவிகளை விழுங்கினார்.
டிசம்பர் 12ஆம் தேதி இச்சம்பவம் நடந்தது. தனது பெற்றோரிடம் பிரசாத் மோட்டார்சைக்கிள் வாங்கித் தரும்படி கடும் வாக்குவாதம் செய்துள்ளார். அவர்கள் வாங்கித்தர மறுக்கவே இரும்புச் சாவிகளை விழுங்கினார். அவரை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
அங்கிருந்து பிரசாத்தை உயர்சிகிச்சைக்காக குண்டூர் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.
அங்கு அறுவை சிகிச்சையின்றி அதிநவீன ‘லேப்ராஸ்கோப்பி’ முறையில் அந்தச் சாவிகளை மருத்துவர்கள் அகற்றினர். தற்போது எந்தப் பிரச்சினையும் இன்றி அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
“குண்டூர் அரசு மருத்துவமனையில் அனைத்து நவீன கருவிகளும் இருப்பதால், அறுவை சிகிச்சையின்றி மருத்துவர்களால் சாவியை அகற்ற முடிந்தது. பவானியின் உடல்நிலை சீராக உள்ளது,” என மருத்துவமனை நிர்வாகம் கூறியது.