பாகல்பூர்: பீகாரிலிருந்து மற்றொரு கிரிக்கெட் புயல் கிளம்பியுள்ளது.
15 வயதான அக்ஷரா குப்தாதான் அந்தப் புயல். பீகாரின் பாகல்பூரில் வியாழக்கிழமை (ஜூன் 18) நடைபெற்ற, 19 வயதினருக்கு உட்பட்ட பிசிஏ மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அவர் விளையாடிய விதம் கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
126 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர், 306 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அவர் குவித்த ஓட்டங்களில் 55 பவுண்டரிகளும் 6 சிக்சர்களும் அடங்கும். 16 பந்துகளில் அரை சதத்தையும் 34 பந்துகளில் சதத்தையும் பூர்த்தி செய்து அசத்தினார் அக்ஷரா.
இளம் வயதில் பீகார் யு-19 மகளிர் அணியின் தலைவராக இருந்து வருகிறார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக ஆடிய பின்னர் இந்திய அணிக்குத் தேர்வாகி இருக்கும் நிலையில் மகளிர் கிரிக்கெட்டுக்கு மகுடம் சூட்டும் வகையில் அக்ஷரா புறப்பட்டுள்ளார்.
பீகார் கிரிக்கெட்டிலிருந்து அடுத்தடுத்து இளம் வீரர்கள் தேசிய மற்றும் அனைத்துலக அரங்கில் அடியெடுத்து வைப்பது விளையாட்டு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் ஈராண்டுகளில் தொடர்ந்து நான்குமுறை பங்கேற்ற முதல் கிரிக்கெட் வீராங்கனை அக்ஷரா குப்தா என்பது குறிப்பிடத்தக்கது.

