சென்னை: கோயம்பேடு அருகே உள்ள மதுபானக் கூடம் ஒன்றில் ஏற்பட்ட கைகலப்பு 18 வயது பெண்ணின் மரணத்துக்கு இட்டுச் சென்றுள்ளது.
விடுமுறையை முன்னிட்டு மதுபானக் கூடத்தில் இடம்பெற்ற ஆடல், பாடல் நிகழ்ச்சியில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட சலசலப்பு கைகலப்பில் முடிந்தது.
அதையடுத்து மதுபானக் கூடத்திலிருந்து அந்த இரு தரப்பினரும் வெளியேற்றப்பட்டனர். அவர்களில் 18 வயது யான்சி என்ற பெண்ணும் பாலகுரு என்ற ஆடவரும் அடங்குவர்.
மதுபானக் கூடத்திற்கு வெளியிலிருந்த பாலகுருவின் கார்மீது கல் வீசிய யான்சி, மற்றொரு பெண்ணுடன் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து யான்சி சென்ற மோட்டார்சைக்கிளை ஆறு பேர் இருந்த கார் துரத்தியது.
பின்னர், மோட்டார்சைக்கிள்மீது கார் மோதியதில் யான்சி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மாண்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அவருடன் சென்ற 17 வயது பெண்ணுக்குப் படுகாயம் ஏற்பட்டது.
விபத்தை ஏற்படுத்தியவர்கள் பின்னர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றனர்.
விபத்து நேர்ந்த பகுதியில் இருந்தவர்கள் 17 வயது பெண்ணை மீட்டு காவல்துறைக்குத் தகவல் அளித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
விபத்தில் மாண்ட யான்சி இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்தவர் என்று நம்பப்படுகிறது.
காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சுமன் சக்திவேல், பாலகுரு உள்ளிட்ட ஆறு பேரை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
சுமன் சக்திவேல் ஓட்டிய காரில் கட்சிக் கொடி கட்டப்பட்டு இருந்துள்ளது.
17 வயது இளம் பெண்ணை மதுபானக் கூடத்தில் அனுமதித்தது தொடர்பில் மதுபானக் கூட நிர்வாகத்தினரிடமும் உரிமையாளரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.

