போலி ‘நீட்’ தேர்வு வினாத்தாளை விற்ற இளையர் கைது

போலி ‘நீட்’ தேர்வு வினாத்தாளை விற்ற இளையர் கைது

1 mins read
883d102d-3f45-4a91-aa51-ede71c52d6ef
‘நீட்’ மறுதேர்வுக்கானது எனக் கூறி, போலியான வினாத்தாளை விற்றதாகக் கைதுசெய்யப்பட்டுள்ள ஆகாஷ் சௌதரி, 19. - படம்: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

ஜெய்ப்பூர்: இந்தியாவில் இளநிலை மருத்துவக் கல்விக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிந்ததை அடுத்து, ஜூன் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மறுதேர்வு நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில், ‘நீட்’ மறுதேர்வுக்கானது எனக் கூறி, சமூக ஊடகங்கள் வழியாகப் போலியான வினாத்தாளை விற்றதாகக் கூறி, 19 வயது இளையர் ஒருவர் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) ராஜஸ்தான் மாநிலத்தில் கைதுசெய்யப்பட்டார்.

ஆகாஷ் சௌதரி என்ற அந்த இளையர், டெலிகிராம் செயலி வழியாக அம்முயற்சியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இந்தியாவில் ஜூன் 22ஆம் தேதிவரை ‘டெலிகிராம்’ செயலிக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ‘விபிஎன்’ தொழில்நுட்பம் மூலமாக அவர் டெலிகிராம் செயலியைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.

போலி வினாத்தாளை விற்பதற்காக அவர் ‘பேப்பர் மாஃபியா’ என்ற குழுவை டெலிகிராமில் உருவாக்கியதாகக் கூறப்பட்டது.

ஆகாஷிடமிருந்து ஒரு கைப்பேசி, ‘நீட்’ கையேடு, பிற ஆவணங்கள் ஆகியவற்றைக் காவல்துறை பறிமுதல் செய்தது. இந்த விவகாரத்தில் மற்றவர்களுடன் அவருக்குள்ள தொடர்புகள், அவரது வங்கிக் கணக்குகள், அவரால் ஏமாற்றப்பட்ட மாணவர்கள் ஆகியன குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அவர் போலி ‘நீட்’ வினாத்தாளை 4,000 ரூபாய்க்கு விற்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது. ராஜஸ்தானின் சூரு மாவட்டத்தைச் சேர்ந்த அவர் 12ஆம் வகுப்புவரை படித்தவர் என்றும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிவந்தார் என்றும் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்