தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிரிக்கெட் போட்டியில் தோற்றதால் ஆத்திரம்; மட்டையால் அடித்து சிறுவன் கொலை

2 mins read
ba1af659-dac7-449d-9031-0cc1c39d50e0
மாதிரிப்படம்: - ஊடகம்

ஜெய்ப்பூர்: கிரிக்கெட் போட்டி முடிந்தபின் 15 வயதுச் சிறுவன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், ஜாலாவார் மாவட்டம், பவானி மண்டி நகரில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 6) பிற்பகலில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

எதிரணியைச் சேர்ந்த ஒருவர், தமது அணி தோற்ற ஆத்திரத்தில் மட்டையால் அச்சிறுவனின் தலையில் அடித்ததாகக் கூறப்பட்டது.

இதனையடுத்து, மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட பிரகாஷ் சாஹு என்ற அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி அன்றிரவே உயிரிழந்துவிட்டார்.

உடற்கூறாய்விற்குப் பிறகு பிரகாஷின் உடல், அவருடைய குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிரகாஷை அடித்துக் கொன்றதாகக் கூறப்படும் முகேஷ் மீனா, 20, என்ற ஆடவரைக் காவல்துறைக் கைதுசெய்தது.

ஒரே குடியிருப்புப் பகுதியில் வசித்துவரும் பிரகாஷும் முகேஷும் நண்பர்கள். பிரகாஷ் பத்தாம் வகுப்பும் முகேஷ் பி.ஏ. பட்டப் படிப்பும் பயின்று வந்தனர்.

தங்களது வட்டாரத்திலுள்ள ஒரு திடலில் அவ்விருவரும் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவது வழக்கம்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடந்த போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து, பிரகாஷ் சக அணியினருடன் இணைந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். அப்போது, முகேஷ் பின்னாலிருந்து பிரகாஷைத் தலையில் தாக்கியதாகக் கூறப்பட்டது.

உடனே பிரகாஷ் உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆயினும், அருகிலுள்ள பெருநகரமான கோட்டாவிற்கு அவரைக் கொண்டுசெல்லும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

அப்படியே செய்தபோதும், கோட்டா மருத்துவமனையில் சிகிச்சையின்போது பிரகாஷ் இறந்துவிட்டார்.

முன்னதாக, பிரகாஷைத் தாக்கிய முகேஷின் மோட்டார்சைக்கிளை உள்ளூர்வாசிகள் அடித்து நொறுக்கியதாகவும் முகேஷை அவனுடைய குடும்பத்தார் ஓர் அறைக்குள் பூட்டிவைத்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.

அத்துடன், அக்குடியிருப்புப் பகுதியில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்