கட்டட வேலைக்குப் போன கணவர் காலிழந்தார்; கடல்தாண்டிய மகன் சக்கரநாற்காலியில் வந்தார்

கட்டட வேலைக்குப் போன கணவர் காலிழந்தார்; கடல்தாண்டிய மகன் சக்கரநாற்காலியில் வந்தார்

1 mins read
0f3ab01d-8cae-4e92-8a1b-e1ef13bea61e
படம்: சமூக ஊடகம் -

கட்டட வேலை பார்த்து வந்த சுப்பையா, 55, என்ற தன் கணவர் வேலையில் அடிபட்டு காலை இழந்துவிட்டதை அடுத்து தன் இரண்டு மகன்களுடன் மிகவும் வறுமையில் வாடிய அழகி, 50, என்ற ஒரு தாய், வேலை பார்த்து சம்பாதிக்க தன் மூத்த மகனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தார்.

ஆனால் கடல் தாண்டி மத்திய கிழக்கு நாடான பக்ரேனுக்கு வேலைக்குச் சென்ற வீரபாண்டி, 25, என்ற அந்த மகனும் அந்நாட்டில் விபத்தில் சிக்கி சக்கர நாற்காலியில் நடமாடும் நிலை ஏற்பட்டுவிட்டது.

தன் மகனை உயிரோடு பார்த்தாலே போதும் என்று தவியாய்த் தவித்த அந்த தாய், மகனைச் சொந்த ஊருக்குக் கொண்டுவர நான்கு மாத காலமாக படாதபாடுபட்டார்.

சமூக ஆர்வலர் மூலம் மாநில அமைச்சர் உதவியதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய தன் மகனை விமான நிலையத்தில் காத்திருந்து சந்தித்து அந்தத் தாய் கண்ணீர் சிந்தி கதறியதைக் கண்டு அங்கிருந்த பலரும் கலங்கிவிட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன. பிறகு வீரபாண்டி, சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சுப்பையா-அழகி தம்பதியர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியைச் சேர்ந்தவர்கள்.

அவர்களுக்கு பெருமாள், 22, என்ற மற்றொரு மகனும் இருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்