பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூரில் மரத்தின் கிளை உடைந்து தலையில் விழுந்து படுகாயமடைந்த இளைஞர் பரிதமாக உயிரிழந்தார்.
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) பிற்பகல் பனசங்கரி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த 29 வயது இளைஞர் அக்ஷய் தலையின் மீது மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்தது.
இதில் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயங்களுடன் ஜெயநகர் அப்போலோ மருத்துவமனையில் ஐந்து நாள்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வியாழக்கிழமை (ஜூன் 19) பிற்பகல் அவர் உயிர் பிரிந்தது.
அவர் ஒருவரே வேலை பார்த்து தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்த நிலையில், அவரின் மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு மாநகராட்சி அவரின் ரூ.4 லட்சம் மருத்துவச் செலவை ஏற்றதுடன், குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.
மரங்களைப் பராமரிக்காத மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியமே இந்த விபத்துக்குக் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விபத்து தொடர்பான காணொளி வெளியாகி உள்ள நிலையில், ஒரு வேளை தலைக்கவசம் அணிந்திருந்தால் அக்ஷய் பெரிய காயங்களிலிருந்து தப்பித்திருக்கலாம் என்றும் இணையவாசிகள் தெரிவித்து வருகின்றனர்.