நமது உடல்நலத்தைப் பேணுவதில் உணவுக்கே பெரும்பங்கு என்பதால்தான் பலரும் சத்துள்ள உணவுகளை தேடிப்பிடித்து உண்கின்றனர்.
அதே நேரம், தங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய உணவுவகைகளிடமிருந்து விலகியே இருக்கின்றனர்.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் உணவு ஒவ்வாமைகளால் உடனடி விளைவுகள் ஏற்படக்கூடும்.
சில உணவுவகைகள் சிலருக்கு ஒத்துக்கொள்ளாதபோது, அவற்றைச் சிறிதளவு உண்பதால் பெரும்பாலும் எந்தப் பிரச்சினையும் ஏற்படுவதில்லை. மேலும், அவ்வளவு தீவிரமான விளைவுகளையும் அவர்கள் எதிர்கொள்வதில்லை.
‘தி பெரீஸ் (The Berries)‘ ஊட்டச்சத்து ஆலோசனை நிறுவனத்தில் ஊட்டச்சத்து ஆலோசகராக இருக்கும் திருவாட்டி கோகிலா கோவிந்தராஜு வெவ்வேறு உணவு ஒவ்வாமைகளைப் பற்றி தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டார்.
ஓட்டுமீன், பால், முட்டை, வேர்க்கடலை, சோயாபீன், கோதுமை, பார்லி, ஓட்ஸ், மீன் ஆகியவை சிலருக்கு ஒத்துக்கொள்ளாமல் போகலாம்; சிலரிடத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
சாக்லேட், கொக்கோ, கஃபைன் போன்றவற்றாலும் ஒவ்வாமை ஏற்படலாம்.
சாக்லேட் என்றாலே பலருக்குக் கொள்ளை ப் பிரியம். ஆனாலும், சாக்லேட் தின்றால் ஒவ்வாமை ஏற்படுவதால் அதனைத் தொடாதவர்களும் இருக்கிறார்கள்.
தொடர்புடைய செய்திகள்
சாக்லேட் தின்றால் ஒவ்வாமை ஏற்படுவதற்கு, அதில் கொக்கோ, பால், கடலைகள், கஃபைன் போன்ற மற்ற உணவுப்பொருள்கள் காரணமாக அமைகின்றன.
இவற்றுக்கான அறிகுறிகளை அடையாளம் காண்பது மிக முக்கியம். ஒவ்வோர் உணவு ஒவ்வாமைக்குமான அறிகுறிகள் வேறுபடக்கூடும்.
ஆனால், உணவு உண்ட 30 நிமிடம் முதல் இரண்டு மணி நேரத்திற்குள் ஏற்படக்கூடிய பொதுவான சில அறிகுறிகளைக் கொண்டு, உணவு ஒவ்வாமையைக் கண்டுகொள்ளலாம்.
உதடு, நாக்குப் பகுதிகளில் வீக்கம், தடிப்பு, தும்மல், வயிற்றுவலி, சில சமயங்களில் உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய ஒவ்வாமைகளால் மூச்சுத் திணறல், தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் காணப்படலாம்.
உணவு ஒவ்வாமைகளை எவ்விதத்திலும் முழுமையாகக் குணப்படுத்த முடியாது.
ஆனால், அந்த குறிப்பிட்ட உணவு வகைகளைத் தவிர்ப்பதால் பாதிப்பைக் குறைக்க முடியும்.
கோதுமை ஒத்துக்கொள்ளாதோர் அரிசி, தீட்டப்படாத அரிசி, குயினோவா, மரவள்ளிக்கிழங்கு, ஓட்ஸ், சோளம், சோயா போன்ற உணவுவகைகளை உட்கொள்ளலாம்.
லாக்டோஸ் ஒத்துக்கொள்ளாதோர் மீன், பாதாம் பருப்பு, முட்டை, காளான் போன்ற கால்சியம், உயிர்ச்சத்து ‘டி’ அதிகமாக இருக்கும் உணவுவகைகளைச் சாப்பிடலாம்.
இவ்வாறு ஒவ்வோர் உணவு ஒவ்வாமை உள்ளோரும் பிற மாற்று உணவுவகைகளை உட்கொண்டு நலத்துடன் வாழலாம்.
dhurga@sph.com.sg

