மறைந்த கலைஞரைக் கொண்டாடிய 'ஏகே50'

மறைந்த கலைஞரைக் கொண்டாடிய 'ஏகே50'

2 mins read

காலஞ்­சென்ற உள்­ளூர்க் கலை­ஞர் திரு ஆனந்த கண்­ண­னின் 50வது பிறந்­த­நாளை நினை­வு­கூரும் 'ஏகே50 - ஆனந்த கொண்­டாட்­டம்' நிகழ்ச்­சிக்கு ஏகே தியேட்­டர் கடந்த வியா­ழ­னன்று ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

தெம்­ப­னிஸ் ஹப்­பில் இடம்­பெற்ற இந்­நி­கழ்ச்சி, தமிழ் மொழிக்­காக திரு கண்­ண­னின் அர்ப்­ப­ணிப்பை முன்­னி­லைப்­ப­டுத்­தும் வகை­யில் அமைந்­தது.

தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழு ஆத­ர­வில் நடை­பெற்ற இந்­நி­கழ்ச்­சி­யில் பறை இசை, நாட்­டிய மணி­க­ளின் நட­னம், தொலைக்­காட்­சிக் கலை­ஞர்­க­ளின் பாடல்­கள், ரவீந்­தி­ரன் நாட­கக் குழு­வின் நாட­கப் படைப்பு ஆகிய அம்­சங்­கள் இடம்­பெற்­றன.

அவர் இல்­லை­யென்­றா­லும் அனை­வ­ரின் மனங்களிலும் அவர் வாழ்ந்­து­கொண்­டு­தான் இருக்­கிறார் என்று உள்­ளூர்க் கலை­ஞர் திரு வடி­வ­ழ­கன் குறிப்பிட்டார்.

'ஊர்க்குருவி' எனும் புகழ்­பெற்ற நிகழ்ச்­சியை திரு கண்­ணன் சுவா­ர­சி­ய­மாகப் படைத்­தது குறித்­தும் பகி­ரப்­பட்­டது.

"மரபுக் கலை­யின் மீதான காத­லால்­தான் எங்­க­ளால் இவ்­வ­ளவு தூரம் பய­ணம் செய்ய முடிந்­தது. அவர் என் அப்பா மட்­டு­மல்ல, என்­னுடைய உயிர்த்தோழன். என்­னால் அவ­ரு­டன் எதைப் பற்றி வேண்­டு­மா­னா­லும் பேச முடி­யும். என் சார்­பி­லும் அவர் தத்­தெ­டுத்த பல பிள்­ளை­க­ளின் சார்­பி­லும் உங்­க­ளுக்­குப் பிறந்­த­நாள் வாழ்த்து­கள் அப்பா," என்று நிகழ்­வின்­போது கூறி­னார் திரு கண்­ணனின் மகளான அவா கண்­ணன்.

"எதை­யும் தைரி­ய­மாகச் செய்­ய­வேண்­டும், புது­மை­யான வடி­வில் நம் மர­பை­யும் தமி­ழை­யும் பிள்­ளை­க­ளுக்­குக் கொண்­டு­சேர்க்க வேண்­டும் என்­பார் என் கண்­ணன்," என்று கண்­ணீ­ரு­டன் கூறி­னார் ஏகே தியேட்­டர் இயக்­கு­ந­ரும் ஆனந்த கண்­ண­னின் மனை­வி­யு­மான திரு­வாட்டி ராணி கண்ணா.

'மங்­கள அணி­யி­னர்' என்ற நட­னக் குழு­வி­லுள்ள 70 வயது பிரபா சந்­தி­ரன் சேத், திரு ஆனந்த கண்­ண­னின் ஊக்­கு­விப்­பால் 60 வய­தில் ஆடத் தொடங்­கி­னார். நிகழ்­வில் ஆடிய அவர், வயதை ஒரு தடை­யா­கக் கரு­தாமல் ஆடு­வ­தற்கு ஊக்­கு­வித்த திரு கண்­ண­னுக்கு நன்றி கூறிக்கொண்டார்.

பட்­டுக்­கோட்­டை­யைச் சேர்ந்த 26 வயது விக்­னேஷ் குமார், பறை இசை­யில் அதிக நாட்­டம் கொண்­ட­வர். கொவிட்-19 கொள்­ளை­நோய் காலத்­தில் 'ஹாய் நண்பா' திட்­டம் மூலம் தன்­னை­யும் பிற வெளி­நாட்டு ஊழி­யர் நண்­பர்­க­ளை­யும் பறை இசைக்கு ஆனந்த கண்­ணன் அறி­முகப்­ப­டுத்தி இருந்­தார். அவ­ரின் பிறந்­த­நாள் கொண்­டாட்ட விழா­வில் தம்மால் பறை இசை வாசிக்க முடிந்­ததை எண்ணி மகிழ்ந்­தார் திரு விக்னேஷ்.

நிகழ்ச்­சிப் பார்­வை­யா­ளர்­களில் ஒரு­வ­ரான 31 வயது பூஜா தேவி, சிறு வய­தி­லிருந்தே திரு கண்­ண­னின் நிகழ்ச்­சி­க­ளைக் கண்டு ரசித்­த­வர். திரு ஆனந்த கண்­ண­னைப் போல ஒவ்­வொ­ரு­வ­ரும் மொழிக்­காக ஓர் அடை­யாளத்தை ஏற்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும் என்­றார் அவர்.