நாட்டு நிர்மாணத்திற்கு முக்கிய பங்களிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள், பொது விடுமுறை நாள்களின்போதும் வேலை செய்வதுண்டு. அவ்வகையில், இங்குள்ள கோழிப் பண்ணை ஒன்றில் வேலை செய்யும் 50 ஊழியர்கள், தீபாவளிக் குதூகலத்தில் ஈடுபட முடியாமல் பண்டிகை நாளன்றும் வேலை செய்த இவர்களுக்கு அம்ரிதேஸ்வரி சங்கத்தைச் சேர்ந்த தொண்டூழியர்கள் பிரியாணி பொட்டலங்களையும் இனிப்புப் பலகாரங்களையும் வழங்கினர்.
சொந்த ஊரில் தங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து பண்டிகையைக் கொண்டாட முடியாத ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றினர் தொண்டூழியர்கள்.
உதவி தேவைப்படுவோருக்கு உதவிக்கரம் நீட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ள இச்சங்கம், தீபாவளி அன்று ஊழியர்களுக்கு உணவளித்து அவர்களை அரவணைத்தது.
நாம் எங்கிருந்து வந்தவராக இருந்தாலும் அல்லது எங்கு இருந்தாலும் நம்மால் முடிந்தவரை, தேவைப்படுவோருக்கு உதவுவது எங்களுக்கு திருப்தி அளிக்கிறது என்கிறார்கள் சங்கத்தின் தொண்டூழியர்கள்.
தீபாவளியின்போது ஊழியர்களின் தனிமை உணர்வையும் கவலையையும் போக்கி, அவர்களுக்கு இரக்கம் காட்ட தாங்கள் கடமைப்பட்டுள்ளதாகவும் தொண்டூழியர்கள் கூறினர்.
"நான் சிறுவயதில் இருந்தபோதே என்னுடைய பெற்றோர் தொண்டூழியத்தில் ஈடுபட்டபோது என்னை அவர்களுடன் அழைத்துச் செல்வார்கள். அதனாலேயே தொண்டூழியம் புரிவது என் வாழ்வின் ஓர் அங்கமாகிவிட்டது. தீபாவளிக்கு ஊழியர்களுக்கு உணவு அளிப்பது எனக்கு மகிச்சி அளிக்கிறது," என்றார் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயிலும் ஆதிரா, 17.
"வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவளிப்பது என் நீண்டநாள் ஆசை. இவ்வாண்டு அவர்களுக்குப் பிரியாணியையும் பலகாரங்களையும் வழங்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது," என்றார் திருவாட்டி லட்சுமி, 60.
"தீபாவளிப் பண்டிகையின்போது தொண்டூழியர்கள் எங்களுக்கு உணவளித்து உபசரித்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் குடும்பத்தினர் எங்களுடன் இருப்பதுபோன்ற ஓர் உணர்வு கிடைக்கிறது," என்றார் 'எக்ரோமேக் என்ஜினியர்ஸ்' நிறுவனத்தில் பணிபுரியும் பரமேஸ்வரன் மணி, 29.
sanush@sph.com.sg

