‘விக்கல்ஸ் ஆஃப் விக்ரம்’ என்ற தனது நகைச்சுவைப் பட்டாளத்தை சிங்கப்பூரில் முதல்முறையாக சென்ற மாதம் 26 ஆம் தேதி அன்று மேடை ஏற்றினார் நகைச்சுவைக் கலைஞர் விக்ரம் அருள் வித்யாபதி.
இதுவே இவரின் முதல் வெளிநாட்டு நிகழ்ச்சி. இந்தியாவில் பல இடங்களில் தனது நிகழ்ச்சியை மேடை ஏற்றிய இவர், தொடர்ந்து சிங்கப்பூர், மலேசியா, கொழும்பு, கத்தார், ஓமான், லண்டன் போன்ற பல நாடுகளுக்கும் நகரங்களுக்கும் சென்று நிகழ்ச்சியை முதல்முறையாகப் படைப்பதில் தாம் உற்சாகமாக இருப்பதாகக் கூறினார்.
சிங்போஸ்ட் அரங்கத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோரை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தார் விக்ரம். மாஸ்க் ஸ்டீடியோஸ் தயாரிப்பில் இந்நிகழ்ச்சி நடந்தேறியது.
இனம், மதம், சாதி, ஒரு தனி மனிதனின் சிக்கல்கள், சமூக ஊடகத்தின் வளர்ச்சி, அதனால் வரும் சிக்கல்கள் போன்ற பலவிதமான சராசரி மனிதர்களின் பிரச்சினைகளைத் தனது தனித்துவமான பாணியில் நகைச்சுவையாகப் படைத்தார் விக்ரம்.
சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படும் இவரின் காணொளிகளைக் குடும்பத்தோடும் ரசித்துள்ள துர்கா லி, 24, தம் நண்பர்களுடன் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
“சமுதாயத்தில் பேசப்படாத தலைப்புகள், பிரச்சினைகள் ஆகியவை குறித்து புத்திசாலித்தனமாகவும் கிண்டலாகவும் பேசியது எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. ஒரு மனிதனின் குழப்பநிலையையும் ஆதங்கத்தையும் சுவாரசியமாக எடுத்துக் கூறி எங்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார்,” என்று நிகழ்ச்சியின் பல வேடிக்கையான அம்சங்களை நினைவுகூர்ந்தார் துர்கா.
யூடியூப், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் தனது வித்தியாசமான நகைச்சுவையால் பிரபலமடைந்த விக்ரம், திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
“சினிமாவில் நடிப்பது எனது நீண்ட நாள் ஆசை. சமூக ஊடகங்களில் என் நகைச்சுவை அங்கங்களைப் பதிவேற்றம் செய்தது என் திறனை மேம்படுத்த உதவியுள்ளது. மக்களின் விருப்பத்தையும் தெரிந்துகொள்ள உதவியுள்ளது,” என்று கூறினார் விக்ரம்.
தொடர்புடைய செய்திகள்
திரைப்படப் பாடல்களின் பாடகர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் ஆகியோரைப் போல மாறுவேடமணிந்து பாடல்களை அவர்கள் எப்படி உருவாக்கி இருப்பார்கள் என்று கற்பனை செய்து நகைச்சுவை பாணியில் விக்ரமும் அவரின் குழுவினரும் படைத்து வருகின்றனர்.
இதற்காக நடிகர் விஜய், இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் ஆகியோரிடமிருந்து பாராட்டு கிடைத்ததை நினைத்துப் பூரித்துப் போனார் விக்ரம்.
“மக்களைச் சிரிக்க வைப்பதற்கு இதுபோன்ற படைப்புகளைப் படைத்துள்ளோம். ஏ ஆர் ரகுமான் போல நடித்து ‘ராவடி’ பாடலின் பதிவின்போது என்ன நடந்திருக்கும் என்று நாங்களாகவே கற்பனை செய்தோம். ஆனால், நாங்கள் நடித்துக் காட்டி இருந்த அந்தக் காட்சியையே ஏ ஆர் ரகுமான் நடித்துப் படைத்தது நம்ப முடியவில்லை,” என்று தனது அளவற்ற மகிழ்ச்சியையும் பெருமையையும் நினைவுகூர்ந்தார் விக்ரம்.
இத்துடன் ஒரு நகைச்சுவைக் கலைஞராகப் புத்தாக்க முறையில் தமது படைப்பைப் படைக்கும் உத்திகளையும் சிரமங்களையும் திரு விக்ரம் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார்.
“2018லிருந்து என் படைப்புகளை எழுதி வந்துள்ளேன். மனம் தளராது இருப்பதே இதில் அடங்கியுள்ள பெரிய சவால். கலை உலகில் சாதனை படைப்பது ஒரு நாளில் சாத்தியமல்ல. பல ஆண்டுகளாகத் தொடர்ந்து உழைத்து வரும் நேரத்தில் பலன் கிடைக்காமலும் போகலாம். ஆனால், கனவை விட்டுக்கொடுக்காமல் மற்றவர்களின் வீண் பேச்சைப் புறக்கணித்துக் கலை மீதான ஆர்வத்தை விட்டுக்கொடுக்காமல் இருந்தால் கனவு நனவாகும்,” என்று தமது கலைப் பயணத்தைப் பற்றி குறிப்பிட்டார் விக்ரம்.

