பதக்க வேட்டையில் மாணவ விளையாட்டு வீரர்கள்

2 mins read
7ae3e620-1c00-4136-8f6a-a10993b7e209
புருணையில் நடைபெறவுள்ள ஆசியான் பள்ளி விளையாட்டுகளில் மாணவ விளையாட்டு வீரர்கள் 130 பேர் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கவுள்ளனர். படத்தில், கூடைப்பந்து அணி. - படம்: ரவி சிங்காரம்

தன் 15வது பிறந்தநாளன்று (நவம்பர் 19) புருணைக்குச் செல்லவுள்ளார் சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளியின் பூப்பந்து வீராங்கனை அபியார்த்தனா.

சிங்கப்பூருக்குப் பதக்கம் தேடித் தருவதைவிட வேறு எந்தப் பிறந்தநாள் பரிசையும் அவர் பெரிதாகக் கருதவில்லை.

புருணையில் நவம்பர் 20 முதல் 29ஆம் தேதிவரை 14வது ஆசியான் பள்ளி விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்த ஆண்டு, 39 பள்ளிகளைச் சார்ந்த மாணவ விளையாட்டு வீரர்கள் 130 பேர், ஏழு விளையாட்டுகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கவுள்ளனர்.

அவர்களை வழியனுப்பும் விழா வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) செயின்ட் ஜோசஃப் கல்வி நிலையத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு, கலாசார, சமூக, இளையர்துறைத் தற்காலிக அமைச்சரும் கல்விக்கான மூத்த துணையமைச்சருமான திரு டேவிட் நியோ வருகையளித்தார்.

“திடலிலும் திடலுக்கு அப்பாலும் சிங்கப்பூரை நன்றாகப் பிரதிநிதியுங்கள்,” என்று மாணவர்களிடம் அவர் கூறினார்.

பூப்பந்தில் கொடிகட்டிப் பறக்கும் சிங்கப்பூர்

சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளியின் பூப்பந்து வீராங்கனை அபியார்த்தனா.
சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளியின் பூப்பந்து வீராங்கனை அபியார்த்தனா. - படம: அபியார்த்தனா
ஆசியான் பள்ளி விளையாட்டுகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கவுள்ள ரதுல் ராமச்சந்திரன் (இடம்), அபியார்த்தனா.
ஆசியான் பள்ளி விளையாட்டுகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கவுள்ள ரதுல் ராமச்சந்திரன் (இடம்), அபியார்த்தனா. - படம்: ரவி சிங்காரம்

அபியார்த்தனாவைப்போல, ஆண்டர்சன்-சிராங்கூன் தொடக்கக்கல்லூரி மாணவர் ரதுல் ராமச்சந்திரனும் சிங்கப்பூரைப் பூப்பந்தில் பிரதிநிக்கவுள்ளார்.

அபியார்த்தனா ஒற்றையர் பிரிவிலும் ரதுல், 17, இரட்டையர் பிரிவிலும் விளையாடுவர்.

சென்ற ஆண்டு பூப்பந்தில் பெண்கள் மற்றும் இருபாலர் இரட்டையர் பிரிவுகளில் சிங்கப்பூர் வெண்கலப் பதக்கங்களை வென்றது.

கிழக்குப் பூப்பந்து அகாடமி போட்டிகளில் அபியார்த்தனா ஒற்றையர் பிரிவில் வெண்கலமும், இரட்டையர் பிரிவில் வெள்ளியும் வென்றார். சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகப் போட்டியில் அவர் வெண்கலம் வென்றார். அனைத்துலகப் போட்டிகளின்போது தெரிவுச் சுற்றுகளில் சிறந்த 16 பேர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

இந்த ஆண்டின் தேசியப் பள்ளி விளையாட்டுகளில் ரதுல்லின் அணி நான்காம் நிலையைப் பிடித்தது. “என்னைப்போல் பலரும் இதே இலட்சியத்துடன் இருப்பார்கள். அவர்களைவிட நான் அதிகமாகப் பயிற்சிசெய்து அவர்களிடமும் கற்றுக்கொண்டு விளையாட வேண்டும்,” என்றார் ரதுல்.

கூடைப்பந்தில் உயர் இலக்‌‌குடன் ஷப்பீர்

சென்ற ஆண்டும் ஆசியான் பள்ளி விளையாட்டுகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்த ‌‌ஷப்பீர் அஹ்மது, 17, இவ்வாண்டு அணியின் துணைத் தலைவராகக் கூடுதல் பொறுப்பு ஏற்றுள்ளார்.

சென்ற ஆண்டு அரையிறுதிச் சுற்றில் சிங்கப்பூர் அணி இந்தோனீசியாவிடம் குறைவான புள்ளி வித்தியாசத்தில் தோற்றாலும் பின்பு வியட்னாமை வென்றதால் வெண்கலம் கிட்டியது. இவ்வாண்டு தங்கத்தைக் குறிவைத்துள்ளார் ‌‌ஷப்பீர்.

சென்ற ஆண்டு கூடைப்பந்து போட்டியில் சிங்கப்பூரின் பெண்கள், ஆண்கள் என இரு பிரிவுகளும் வெண்கலம் வென்றன.
சென்ற ஆண்டு கூடைப்பந்து போட்டியில் சிங்கப்பூரின் பெண்கள், ஆண்கள் என இரு பிரிவுகளும் வெண்கலம் வென்றன. - படம்: ‌‌ஷப்பீர் அஹ்மது

அண்மையில் சிங்கப்பூர்க் கூடைப்பந்துச் சங்க இளையர் போட்டிகளில் (U18), அவரது ‘சிக்லேப்’ அணி முதல் பரிசு வென்றது. நீ ஆன் உயர்நிலைப்பள்ளி, ‘சிக்லேப்’ U18 அணிகளுக்கும் அவர் தலைவராக உள்ளார்.

“மற்ற நாட்டு விளையாட்டாளர்கள்போல் நமக்கு உடல்வாகு இல்லாவிட்டாலும், விளையாட்டு சார்ந்த நுண்ணறிவில், ஆசியானில் தலைசிறந்த அணிகளில் ஒன்று நமது அணி,” என்றார் ‌‌ஷப்பீர்.

இவ்வாண்டுக்கான ஆசியான் பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் பத்து ஆசியான் நாடுகளைச் சார்ந்த 1,000க்கும் மேற்பட்ட மாணவ விளையாட்டு வீரர்களும் அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.

ஆசியான் பள்ளி விளையாட்டுகளின் கூடைப்பந்துப் போட்டியில் தங்கப் பதக்கத்தைக் குறிவைக்கும் ‌‌ஷப்பீர்.
ஆசியான் பள்ளி விளையாட்டுகளின் கூடைப்பந்துப் போட்டியில் தங்கப் பதக்கத்தைக் குறிவைக்கும் ‌‌ஷப்பீர். - படம்: ரவி சிங்காரம்
ஆசியான் பள்ளி விளையாட்டுகளின் கூடைப்பந்துப் போட்டியில் தங்கப் பதக்கத்தைக் குறிவைக்கும் ‌‌ஷப்பீர்.
ஆசியான் பள்ளி விளையாட்டுகளின் கூடைப்பந்துப் போட்டியில் தங்கப் பதக்கத்தைக் குறிவைக்கும் ‌‌ஷப்பீர். - படம்: ரவி சிங்காரம்
குறிப்புச் சொற்கள்