மக்கள் நலன்பெற, பிறப்பு விகிதம் வலுப்பட 15 புதிய திட்டங்கள்

மக்கள் நலன்பெற, பிறப்பு விகிதம் வலுப்பட 15 புதிய திட்டங்கள்

3 mins read
b0b616ca-55b6-4659-9cd1-1fb74acbc5c1
கேகே மகளிர், சிறார் மருத்துவமனையின் நூற்றாண்டுக் கொண்டாட்ட விருந்து உபசரிப்பு விழாவில் உரையாற்றினார்  அதிபர் தர்மன் சண்முகரத்னம். - படம்: சாவ்பாவ்

நிபுணத்துவம் வாய்ந்த மகப்பேறு மருத்துவமனையாக நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் கேகே மகளிர் சிறார், மருத்துவமனை மக்கள்தொகை நலனுக்கும் சிங்கப்பூரின் பிறப்பு விகிதத்திற்கும் வலுச்சேர்க்கும் இலக்குடன் 15 புத்தாக்கமிக்கத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

வளர்சிதை மாற்றம் தொடர்பான ஆரோக்கியம் (metabolic health), குறைப்பிரசவம் (pre-term birth), மனநலம் உள்ளிட்ட சுகாதாரப் பிரச்சினைகளைக் களைவதற்கான நோய்த்தடுப்பு அணுகுமுறைகளில் தலைசிறந்து விளங்கும் நோக்கத்துடன் கொடையாளர்களின் பங்காளித்துவ ஆதரவுடன் சுமார் $30 மில்லியன் மதிப்பிலான திட்டங்கள் அறிமுகம் காணவுள்ளன.

அக்டோபர் 5ஆம் தேதி மாலை நடைபெற்ற கேகே மருத்துவமனையின் நூற்றாண்டுக் கொண்டாட்ட விருந்து உபசரிப்பு விழாவில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

மகப்பேறு பராமரிப்பு, பாதுகாப்பான குழந்தைப் பிறப்பை உறுதிசெய்தல் ஆகியவற்றைத் தாண்டி, தலைமுறைகளின் வாழ்வை வடிவமைத்துள்ள இடம் என்பதற்குப் பெயர்பெற்றது கேகே மருத்துவமனை என்று அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அதிபர் தர்மன், நோய்த்தடுப்பு சுகாதாரப் பராமரிப்புச் சேவையில் கேகே மருத்துவமனை அறிமுகப்படுத்தவிருக்கும் முக்கியத் திட்டங்கள் குறித்தும் விவரித்தார்.

நீடித்த தாய் சேய் நல்வாழ்விற்கு அடிப்படையாகத் திகழும் வகையில், கேகே மருத்துவமனை புதிய முக்கியத் திட்டங்களை நிறுவுகிறது. “குறைப்பிரசவம் உலகளாவிய அளவில் கவலைக்குரிய பிரச்சினையாக இருந்து வருகிறது.

“இவ்வாறு பிறக்கும் குழந்தைகள் நீண்டகால சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடலாம். இதன் தொடர்பில் ‘தி ஃபார் ஈஸ்ட்’ நிறுவன (The Far East Organisation) ஆதரவுடன் குறைப்பிரசவத் தடுப்புத் திட்டம் (Pre-term Pregnancy Prevention Programme) நடப்புக்கு வருகிறது.

“குறைப்பிரசவத்திற்கான காரணங்கள், சுகாதார நிபுணர்களுக்குப் பயிற்சி வழங்குதல், தனிப்பயன்பாட்டு பரிசோதனை கருவிகளின் உருவாக்கம், இத்தகைய பிறப்புகளைத் தவிர்க்கும் வகையிலான உத்திகளின் மேம்பாடு உள்ளிட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்வது ஆகியவை மேற்கூறிய திட்டத்தின் நோக்கம்,” என்றார் திரு தர்மன்.

வளர்சிதை மாற்றம் தொடர்பான ஆரோக்கியம் மிக முக்கியம் என்று குறிப்பிட்ட அவர், வளர்சிதை மாற்றக் குறைபாடுகளின் தொடர்பில் ‘பெலிக்கன்’ எனும் குழந்தை மருத்துவம் மற்றும் நாளமில்லா சுரப்பியல் தொடர்பான நோய்த்தடுப்புத் திட்டமும் (Paediatrics and Endocrinology Life-Course Action Network or ‘PELiCAN’) அறிமுகம் காணவுள்ளது என்று கூறினார்.

“நலமுடன் இருக்கும் சிறார்களின் வளர்சிதை நலனைப் பேணுதல் மற்றும் மரபுவழி வளர்சிதை குறைபாடுகளுடன் இருக்கும் சிறார்களுக்குப் புதிய அபாயங்கள் வராமல் பாதுகாத்தல் ஆகிய இரண்டு அம்சங்களில் இத்திட்டம் கவனம் செலுத்தும். சுகாதாரப் பராமரிப்பில் தேசத்தின் விரிவான அணுகுமுறைக்கான முன்னுதாரணம் இத்திட்டம்,” என்று தெரிவித்தார் திரு தர்மன்.

மருத்துவமனையைத் தாண்டி, சுகாதாரப் பராமரிப்பை இல்லம் வரை கொண்டுசேர்க்கும் இலக்குடன் கேகே மருத்துவமனை புதிய சமூக பேறுகால மருத்துவ ஊழியர் திட்டத்தையும் (The new Community Midwifery Programme) 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் அமைக்கவிருக்கிறது.

குழந்தைப் பிறப்பிற்கு பிந்தைய முதல் ஆறு வாரத்தில் தாயாரின் நலத்திற்கும் புதிதாகப் பிறந்த பிள்ளைகளின் உடல்நல மேம்பாட்டிற்கும் ஆதரவு நல்கும் வகையில் செயல்படவுள்ள இத்திட்டத்தின் வாயிலாக வடகிழக்குப் பகுதியில் குறிப்பாக அங் மோ கியோ, ஹவ்காங், சிராங்கூன், செங்காங், பொங்கோல் ஆகிய பகுதிகளில் வசிக்கும் தாய்-சேய் இருவரும் பயனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் குறித்து பேசிய திரு தர்மன், “எந்தவொரு தாயும் தனிமைப்படுத்தப்பட்டதாகவோ மனஉளைச்சலுக்கு ஆளானாதாகவோ இருக்கக்கூடாது. இந்தச் சமூக பேறுகால மருத்துவ ஊழியர் திட்டம் பயனுள்ளதாகத் திகழும். குழந்தைகளைக் கவனிப்பதன் தொடர்பில், தந்தையர்களும் தங்களுக்கான பங்கைச் செய்ய வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்