16,000 விளையாட்டுப் பொருள்களைக் குழந்தைகளுக்கு வழங்கிய ‘டாய் புஃபே’ நிகழ்ச்சி

2 mins read
7aeb79cb-cf0b-4056-b08b-99d252334805
நிகழ்ச்சியில் குழந்தைகள் பல்வேறு விளையாட்டு அங்கங்களில் பங்கேற்று, பரிசுகளை வென்றனர். - படம்: ஃபுட் ஃப்ரம் த ஹார்ட்
multi-img1 of 3

‘ஃபுட் ஃப்ரம் த ஹார்ட்’ (Food from the Heart) எனும் உள்ளூர் உணவு நன்கொடை நிறுவனம் ஆண்டுதோறும் நடத்திவரும் ‘டாய் புஃபே’ நிகழ்ச்சியின் வழி இவ்வாண்டு 3,000க்கும் மேற்பட்ட, குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு 16,000க்கும் மேற்பட்ட விளையாட்டுப் பொருள்களை வழங்கி மகிழ்வித்தது.

‘மான்ஸ்ட்ரஸ் மேஹெம்: பிரேவ் தி அன்னோன்!’ என்ற கருப்பொருளுடன் இந்நிகழ்ச்சி நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் லீ காங் சியான் விரிவுரை அரங்கில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) நடைபெற்றது.

கேளிக்கைச் சந்தை விளையாட்டுகள், சுவையான உணவுகள் ஆகியவற்றை வழங்கியதுடன் நன்கொடையாக வழங்கப்பட்ட பொருள்களில் இருந்து தங்களுக்‌கு விருப்பமான குறைந்தது மூன்று பொம்மைகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பையும் ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கியது.

நம் அனைவருக்கும் உணவு எவ்வளவு முக்கியமோ அதேபோல் குழந்தைகளுக்குப் பொம்மைகள் முக்கியம் என்றார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட உள்துறை, சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சர் சுன் ‌ஷுவெலிங்.

மேலும், பொம்மைகளுடன் விளையாடும்போது குழந்தைகள் தங்கள் கற்பனையைச் சுதந்திரமாகப் பயன்படுத்தி அவர்கள் விரும்பும் ஓர் உலகை அமைத்து அதில் வாழ முடியும் என்றும் அவர் சொன்னார்.

இவ்வாண்டின் நிகழ்ச்சிக்கு ‘டெல்’, ‘ஃபெரெரோ ஏஷியா பசிபிக்’, ‘ஓசிபிசி’ வங்கி, ‘சிங்கப்பூர் டல்விச் கல்லூரி’ உட்பட 25 பெருநிறுவனங்களையும் பள்ளிகளையும் சேர்ந்த கிட்டத்தட்ட 1,000 தன்னார்வலர்களின் ஆதரவுடன், விளையாட்டுப் பொருள்கள் திரட்டப்பட்டன. இதன் தொடர்பில் கடந்த சில மாதங்களில் 50 பொம்மை நன்கொடை இயக்கங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

“அதிக விளையாட்டுகளையும் பொம்மைகளையும் பரிசுகளையும் திரட்டி, இத்தகைய பெரிய நிகழ்ச்சியை நடத்த பலமான பெருநிறுவன ஆதரவு எங்களுக்கு உதவியுள்ளது. சமூகக் கூட்டமைப்புகள் ‘டாய் புஃபே’வின் முதுகெலும்பாக இயங்குவதோடு உதவிக்‌கரம் நீட்ட நினைக்‌கும் தனிநபர்களையும் நிறுவனங்களையும் ஒன்றிணைக்கிறது,” என்று ‘ஃபுட் ஃப்ரம் த ஹார்ட்’ நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்டமிடல் பிரிவுத் தலைவர் சசிகலா பு‌ஷ்பநாதன் கூறினார்.

மேலும், பொம்மை நன்கொடை இயக்கங்களை ஏற்பாடு செய்து நடத்தியது, பரிசுகளை அலங்கரித்து அடுக்‌கி வைப்பது, வெள்ளிக்‌கிழமை நிகழ்ச்சியன்று நேரடியாக உதவுவது எனத் தன்னார்வலர்கள் பல்வேறு வகைகளில் பங்காற்றினர் என்றும் அவர் கூறினார்.

“இங்கு வழங்கப்பட்ட உணவு மிகவும் சுவையாக இருந்தது. கடந்த ஆண்டும் இந்நிகழ்ச்சிக்‌கு வந்திருந்தேன். அடுத்த ஆண்டும் கண்டிப்பாக வருவேன்,” என்று பயனியர் தொடக்கப்பள்ளி மாணவி ஃபாடிலா கனி, 11, கூறினார்.

இதுபோன்ற அர்த்தமுள்ள ஒரு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி தெரிவித்தார் டெல் நிறுவனத்தைச் சேர்ந்த இந்நிகழ்ச்சியின் நீண்டகால ஆதரவாளரான தன்னார்வத் தொண்டூழியர் சுதர்‌ஷன் ஸ்ரீதர், 40.

“குழந்தைகளின் கண்களில் உற்சாகத்தைப் பார்ப்பது விலைமதிப்பற்றது என்று கருதுகிறேன். பெற்றோர் என்ற முறையில் இந்த நிகழ்ச்சிக்‌குப் பங்களிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இவ்வாண்டு நிகழ்ச்சியின் கருப்பொருள், அச்சமின்றி செயல்பட வேண்டும் என்றும் தங்களின் கனவுகளைக் கைவிடாமல் தொடர்ந்து முயல வேண்டும் என்றும் குழந்தைகளுக்கு நினைவூட்டுகிறது. எங்கள் நிறுவனம் இந்நிகழ்ச்சியில் ஈடுபட்டிருப்பதில் பெருமிதம் கொள்கிறோம்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்