தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தில் இலக்கியவனம் நிகழ்ச்சியில் பதினெண்கீழ்க்கணக்கு நூலான நான்மணிக்கடிகை குறித்து முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன் நூலைக் குறித்த அறிமுக உரையாற்றினார்.
தொடர்ந்து பேச்சாளர்கள் மாணிக்கவாசகம், ஹேமா சுவாமிநாதன், சௌம்யலட்சுமி, அகிலா முத்துக்குமார், உமா சங்கர் ஆகியோர் நான்மணிக்கடிகையின் பல்வேறு பாடல்களை இலக்கியச் சுவை குன்றாமல் எளிய முறையில் நகைச்சுவையுடனும் நளினத்துடனும் விளக்கினர்.
மார்ச் 2ஆம் தேதியன்று இயூ டீ சமூக மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பெருந்தொற்றுக் காலத்தில் தொடங்கப்பட்ட இலக்கியவனம் நிகழ்ச்சி கடந்த மூன்றாண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இம்முறை இயூ டீ இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ‘பாண்டியன் பேச்சாளர் மன்றம்’ அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தீவு முழுவதும் பல்வேறு இந்தியர் நற்பணிச் செயற்குழுக்களுடன் இணைந்து 16 பேச்சாளர் மன்றங்களை நிர்வகித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இயூ டீ இந்தியர் நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து பாண்டியன் பேச்சாளர் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது.
அடுத்த இலக்கியவனம் நிகழ்ச்சி ஜூன் மாதம் நடைபெறும்.