இறுக்கமான சூழலில் பணி செய்தாலும் எப்போதும் கனிவான முகத்துடனும் பொறுமையுடனும் இருக்க வேண்டியது தாதியரின் கடமை எனும் எண்ணத்துடன் 25 ஆண்டுகளாகச் செவ்வனே செயல்பட்டுவருகிறார் தாதி சீதா சின்னதம்பி, 55.
சிங்கப்பூர் தேசியப் புற்றுநோய் சிகிச்சை நிலையத்தில் முதன்மைத் தாதியாகப் (Principal Enrolled Nurse) பணியாற்றும் இவர் 1999ஆம் ஆண்டு அங்கு நோயாளிப் பராமரிப்பு உதவியாளராகப் பணிக்குச் சேர்ந்ததை நினைவுகூர்கிறார்.
“முதலில் பாலர்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினேன். சிறு குழந்தைகள் உள்ள மகிழ்ச்சியும் குதூகலமும் நிறைந்த இடம் அது. பின் பணிமாற்றம் வேண்டி நோயாளிப் பராமரிப்புப் பணியில் சேர்ந்தேன். அது முற்றிலும் மாறுபட்ட அனுபவம்,” என்றார் சீதா.
தொடக்கத்தில் அந்நியமாகத் தோன்றினாலும் காலப்போக்கில் மூத்த தாதியரின் அர்ப்பணிப்பைக் கண்டு தனக்கும் இப்பணியின் மேல் முழு ஈடுபாடு வந்ததாகச் சொன்னார் சீதா.
“பொதுவாகவே தாதிமைப் பணி கடினமானது. குறிப்பாகப் புற்று நோயாளிகளுடன் பணியாற்றுவது மிகவும் மாறுபட்ட அனுபவம்,” என்று அவர் கூறினார்.
புற்றுநோய் அறுவை சிகிச்சைக்குப் பிறகான ‘கீமோதெரபி’ சிகிச்சைக்கு மாலையில் தாமதமாக வந்ததால் சிகிச்சை மறுநாள் மாற்றி வைக்கப்படவே கோபமடைந்த ஒரு நோயாளியுடனான உரையாடலைப் பகிர்ந்தார் சீதா.
மறுநாள் தனக்குப் பணியிலிருந்து விடுப்பு கிடைக்காது எனவும் அன்றே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோபத்தில் கத்திய அந்நோயாளியைத் தாதியரால் சமாதானம் செய்ய முடியாமல் தவித்த நிலை ஏற்பட்டதாக அவர் சொன்னார்.
“புற்றுநோயும் அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகளும் உடல், மன வலிமையைச் சோதிக்க வல்லவை. அதனால் அவர்கள் பல நேரங்களில் விரக்தியாகவும் கோபமாகவும் மனஅழுத்தத்துடனும் இருப்பார்கள் என்பதை நன்கு மனத்தில் நிறுத்திக்கொண்டுள்ளேன்,” என்றார் சீதா.
தொடர்புடைய செய்திகள்
அந்நோயாளியிடம் பேசி, ஆசுவாசப்படுத்தியதுடன் இரவில் சிகிச்சை அளித்தால் ஒருவேளை பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் அதனைச் சரி செய்வது கடினமாகிவிடும் என்றும், இந்த முடிவு அவரது நன்மைக்குத்தான் என்றும் சொல்லிப் புரியவைத்து அனுப்பியதாகக் கூறினார் சீதா.
“நாம் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்காமல் அவர்கள் பேசினால் கோபம் வரலாம்; ஆனால், அவர்களது நிலையிலிருந்து சிந்தித்துச் செயல்படுவது சூழலை இலகுவாக்குவதுடன் நோயாளியின் மனத்தையும் புண்படுத்தாமல் காக்கும்,” என்றார் அவர்.
மேலும், “தொடர்ந்து சிகிச்சைக்கு வருவதால் நெருக்கமாகிவிடும் சில நோயாளிகள் இறந்து விடுவதும் உண்டு. அது பெரும் சோகத்தை ஏற்படுத்தும்,” என்றபோது சீதாவின் குரல் தழுதழுத்தது.
“எனினும் மற்ற நோயாளிகளின் முகத்தில் புன்னகையைப் பார்க்கும்போது அந்தச் சோகம் கொஞ்சம் கொஞ்சமாக மறையும்,” என்று கூறிய அவர், அதுவே சிரமம் பாராமல் தாதிமைப் பணியில் தன்னை ஈடுபட வைப்பதாகவும் கூறினார்.
நோயாளிகளுக்குச் சிறந்த தாதியாக மட்டுமல்லாமல், தான் பணியாற்றும் பரிசோதனை நிலையத்தில் (Screening Room) உள்ள மருத்துவச் சாதனங்களை எளிதாக உபயோகிக்கும் வகையில் அவற்றை ஒழுங்குபடுத்தும் முறையை நடைமுறைப்படுத்தியுள்ளார் தாதி சீதா.
மேலும், சோதனைக்கூடத்தில் உள்ள தாதியருக்கும், உள்நோயாளிகளைப் பராமரிக்கும் தாதியருக்கும் ஒரு நோயாளியின் உடல்நலம் குறித்த தகவல் பரிமாற்றம் அவசியம் என்பதால் அதை உறுதி செய்யும் வகையில் ‘எஸ்பிஏஆர் (SBAR - Situation, Background, Assessment, and Recommendation) கோப்புகளை உருவாக்கியுள்ளார் சீதா. சக தாதியரும், மருத்துவர்களும் அது மிகவும் உதவியாக இருப்பதாகக் கருதுகின்றனர்.
எடுத்துக்கொண்ட பணியில் சிறந்து விளங்கியதால் 2024ஆம் ஆண்டின் சிறந்த தாதியர்க்கான டான் சின் துவான் விருதை (Tan chin tuan nursing award for enrolled nurses) இவர் பெற்றுள்ளார்.
இந்த விருது தனது உழைப்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் கிடைத்த அங்கீகாரம் என்றும் இது தன்னை மேலும் சிறப்பாகப் பணிபுரிய ஊக்குவிக்கிறது என்றும் சொன்னார் சீதா.
“தொடக்கத்தில் என்னால் இந்தப் பணியைச் செய்ய முடியுமா என்ற கேள்வி இருந்தது. தற்போது இதுவே நமது வாழ்வில் நிறைவை அளிக்கக்கூடிய சரியான பணி எனும் நம்பிக்கை வந்துவிட்டது,” என்று புன்னகையுடன் கூறினார் சீதா.
தாதியருக்கான டான் சின் துவான் விருது வழங்கும் விழா
தனியார், பொதுத் துறைகளைச் சேர்ந்த தாதியர் 12 பேருக்குக் கடந்த நவம்பர் 21ஆம் தேதி, சுகாதாரப் புத்தாக்கத்திற்கான இங் டெங் ஃபோங் நிலையத்தில் (Ng Teng Fong Centre for Healthcare Innovation) நடைபெற்ற விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.
அதிபர் தர்மன் சண்முகரத்னத்தின் மனைவியும் சிங்கப்பூர்த் தாதிகள் சங்கத்தின் புரவலருமான ஜேன் இத்தோகி, நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
இவ்விழாவில் முதல் மூன்று விருதுகளைப் பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கத்துடன் முறையே $3,500, $3,000, $2,500 என ரொக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டன. மற்ற தாதியர் ஒன்பது பேருக்குத் தங்கப்பதக்கமும் $800 ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டன.