இவ்வாண்டு ஏப்ரல் மாதம் தமிழ்மொழி விழாவை முன்னிட்டு கவிஞர் அ. பிரபாதேவியின் முன்னெடுப்பில் ஃபேஸ்புக்கில் ‘‘#30நாள்_30படம்_30 கவிதை’ எனும் கவிதைப் போட்டி நடத்தப்பட்டது.
சிங்கப்பூரிலிருந்து பல கவிஞர்களும் தமிழ்நாட்டிலிருந்து சில கவிஞர்களும் அந்த 30 நாள்களும் வெளியிடப்பட்ட படங்களையொட்டி ஆர்வத்துடன் கவிதை எழுதி அனுப்பினர். மொத்தம் 1,900க்கும் மேற்பட்ட கவிதைகள் வந்திருந்தன.
தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கவிதைகளுக்கான பரிசளிப்பு விழா நிகழ்ச்சி மே 26ஆம் நாள் அங் மோ கியோ நூலகத்தில் இடம்பெற்றது. பணப் பரிசும் புத்தகப் பரிசும் வழங்கப்பட்டன.
தேர்ந்தெடுக்கப்பட்ட சில கவிதைகளைப் பார்வையாளர்கள் நட்புணர்வுடன் கலந்துரையாடி, கருத்துகளைப் பகிர்ந்துகொண்டது இளங்கவிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது.
இந்நிகழ்வில் இளையர்கள் உட்பட ஐம்பதிற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அடுத்த ஆண்டு சிங்கப்பூர்த் தமிழ்மொழி விழாவைச் சிறப்புடன் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற உறுதியுடன் விழா நிறைவுற்றது.


