60 நிமிடங்களில் 60 வகை பிரியாணி

2 mins read
சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற லி‌‌‌ஷா நிகழ்ச்சி
15a3dabb-2f4e-494a-af40-127663be86fb
பரபரப்புடன் 60 வகை பிரியாணி சமைக்கும் சமையற்கலைஞர் அரிஃபின். - படம்: வாங்கோ ஸ்டுடியோஸ்

இவ்வாண்டு தீபாவளிக் கொண்டாட்டங்களின் இறுதி நிகழ்ச்சியாக லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் (லி‌‌‌ஷா) சார்பில் 60 நிமிடங்களில் 60 வகை பிரியாணி சமைக்கும் சுவாரசியமான நிகழ்ச்சி நடைபெற்றது.

அக்டோபர் 25ஆம் தேதி, பொலி @ கிளைவ் ஸ்திரீட்டில் பிரபல சமையற்கலைஞர் அரிஃபின் நடத்திய இந்த நிகழ்ச்சி சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றது.

ஆண்டுதோறும் தீபாவளியையொட்டி லி‌‌‌ஷா பல்வேறு வகை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், இது எஸ்ஜி60 ஆண்டு என்பதால் 60 பிரியாணி வகையைச் சமைக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக அமைப்பினர் தெரிவித்தனர்.

இதில் ஈரான், சவூதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், குவைத், ஆப்கானிஸ்தான், சிந்தி (பாகிஸ்தான்), பங்ளாதே‌ஷ் உள்ளிட்ட பல்வேறு நாட்டு, கா‌ஷ்மீர், மும்பை, கர்நாடகா, மங்களூரு, ஹைதராபாத், தலப்பாகட்டி உள்ளிட்ட பல்வேறு வட்டாரப் பிரபல பிரியாணி வகைகளும் சமைக்கப்பட்டன. மேலும், அகத்திக்கீரை, முருங்கைக் கீரை, பூசணி, காடை முட்டை என மாறுபட்ட வகை பிரியாணிகளும் இதில் இடம்பெற்றன.

ஒரே நேரத்தில் 20 பிரியாணி என மூன்று பிரிவாகப் பிரித்து இரு உதவியாளர்களுடன் திரு அரிஃபின் இதனைச் செய்து முடித்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் குவைத்துக்கான சிங்கப்பூரின் முன்னாள் தூதருமான ஸைனுல் அபிதீன் ரஷீத் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

நிகழ்ச்சியின் முடிவில் இது சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் முடிவில் இது சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. - படம்: வாங்கோ ஸ்டுடியோஸ்

இந்த நிகழ்ச்சிக்காக 60 கிலோ அரிசி கொணரப்பட்டதாகவும் இறுதியில் 150 கிலோ பிரியாணி சமைக்கப்பட்டதாகவும் ஏற்பாட்டுக்குழு தெரிவித்தது. சமைக்கப்பட்ட பிரியாணி பார்வையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது. மொத்தம் 2 மணிநேரம் நீடித்த இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பிரியாணியைச் சுவைத்தனர்.

நிகழ்ச்சிக்காகப் புதிதாக வாங்கப்பட்ட ‘ரைஸ் குக்கர்கள்’ ஏலத்தில் விடப்பட்டு, அத்தொகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதியாக அளிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்