அரும்பொருளகம் என்றால் பழைய பொருள்களைக் கொண்ட சலிப்பூட்டும் இடமாக இல்லாமல் குழந்தைகளையும் குடும்பங்களையும் கவரும் இடமாகவும் திகழலாம் என்று அதன் புதிய ‘ஏசிஎம் & மீ’ (ACM & ME) தளத்தின் மூலம் ஆசிய நாகரிக அரும்பொருளகம் உணர்த்துகிறது.
பிள்ளைகளை ஈர்க்கும் அதேநேரத்தில், அவர்களிடையே சுய அடையாளம், சுய ஆய்வு, படைப்பாற்றல் ஆகியவற்றை ஊக்குவிப்பதையும் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே கலந்துரையாடல்களை வளர்ப்பதையும் முக்கிய நோக்கங்களாகக் கொண்டு இப்புதிய இடம் அமைக்கப்பட்டுள்ளது.
ஜூன் பள்ளி விடுமுறையை முன்னிட்டு ஆசிய நாகரிக அரும்பொருளகத்தின் சமகாலக் கலைக்கூடத்தில் மே 23ஆம் தேதி முதல் அன்றாடம் காலை 10 மணியிலிருந்து இரவு 7 மணிவரை இத்தளம் திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளில் மட்டும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
இத்தளத்திற்குச் செல்லத் தனிக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
‘அர்டெர்லி ஆப்செஸ்டு’ (Arterly Obsessed) என்ற நிறுவனத்தின் பங்களிப்போடு பல வண்ணங்களையும் வடிவங்களையும் கொண்டு சித்திரிக்கப்பட்ட இத்தளத்தின் முதல் அங்கத்தில் ‘நான் யார்?’ என்ற கேள்விக்குப் பங்கேற்பாளர்கள் விடை தேடுவர்.
அங்கு அமைக்கப்பட்டிருக்கும் கண்ணாடியைப் பல்வேறு வடிவங்களைக் கொண்ட காந்தங்களை வைத்து அலங்கரித்துத் தங்கள் பெற்றோரோடு பிள்ளைகள் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம்.
‘என் கதை என்ன?’ என்ற கேள்விக்கு விடை தேடி, தங்கள் கதையைச் சொல்ல பிள்ளைகளைத் தூண்டும் வகையில் இரண்டாவது அங்கம் அமைந்துள்ளது.
முத்திரைகளைப் பயன்படுத்தி தங்கள் சுய உருவப்படத்தை வடிவமைத்தல், சுழலும் கண்ணாடி வழியாக வரைபடங்களை உயிரோவியங்களாகப் பார்த்தல் என இரண்டாவது அங்கத்தில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.
தொடர்புடைய செய்திகள்
‘என்னால் என்ன உருவாக்க முடியும்?’ என்ற கேள்வியை மையமாகக் கொண்டு, ஆடல், பாடலின் மூலம் படைப்பாற்றலையும் சுய வெளிப்பாட்டையும் ஊக்குவிக்கும் விதத்தில் மூன்றாவது தளம் அமைக்கப்பட்டுள்ளது.
அதோடு, ‘ஏசிஎம் & மீ முழுவதும் மனநலத்தைப் பற்றிய வெளிப்படையான கலந்துரையாடலை வலியுறுத்தும் பல உரையாடல் தூண்டுதல்களையும் கண்டறியலாம். சிறுவர்கள் மட்டுமன்றி, அனைத்து வயதினரும் விளையாட்டின் மூலம் தங்கள் மனவுளைச்சலைத் துறந்து மனத்தளவில் ஓய்வு பெறவும் இத்தளம் உதவும்.
“இத்தளத்தை வினையூக்கியாக்கி, ஆசிய கலைகளைப் பற்றிய ஆர்வத்தைப் பிள்ளைகளிடத்திலும் அவர்களின் பெற்றோரிடத்திலும் தூண்டுவதன் மூலம் எங்கள் அரும்பொருளகத்தின் மற்ற காட்சிக்கூடங்களையும் அவர்கள் பார்வையிட வழிவகுப்பதே எங்கள் இலக்கு,” என்றார் ஆசிய நாகரிக அரும்பொருளகத்தின் கற்றல் பிரிவின் துணை இயக்குநர் மெலிசா விஸ்வாணி, 42.
கல்வி அமைச்சு, பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பின் ஆரம்பகாலக் கற்றல் கட்டமைப்புக்கு ஏற்றவாறு இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளதால், சாதாரண விளையாட்டு இடமாக மட்டுமன்றி, பிள்ளைகள் மதிப்புமிக்க கற்றலை தங்களோடு எடுத்துச்செல்லவும் இத்தளம் உதவுகிறது.
12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெரியவர்களின் கண்காணிப்புடன் விளையாட வேண்டும். பெரியவர், சிறியவர் அனைவரும் அந்த இடத்திற்குள் நுழையக் காலுறை அணிவது கட்டாயம். சுத்தம் செய்வதற்காக அன்றாடம் அந்த இடம் பிற்பகல் 12.30 மணி முதல் 2.00 மணி வரை மூடப்படும்.