தாவரங்களுக்கும் பூச்சிகளுக்குமிடையே ஒலிப் பரிமாற்றம் இருப்பதாக அண்மைய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் பல்கலைக்கழகம் நடத்திய இயற்கையில் உள்ள ஒலித் தொடர்பு குறித்தான ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
தாவரங்கள் நெருக்கடியான சூழல்களில் நுண்ணொலிகளை வெளியிடுவதாகக் கூறிய ஓர் ஆய்வின் தொடர்ச்சியாக இது கண்டுபிடிக்கப்பட்டது. மனிதர்களின் செவித்திறன் வரம்பை மீறிய ஒலிகளைத் தாவரங்கள் வெளியிடுவதால், அவற்றைப் பூச்சிகளும், வெளவால் உள்ளிட்ட சில பாலூட்டிகளும் உணர்வதாக அந்த ஆய்வு கூறியுள்ளது.
இரு விட்டில் பூச்சிகளை (Moths) தனித்தனி தக்காளிச் செடிகளில் விட்டு, நீரின்றி வாடும் செடியிலிருந்து சத்தம் வருவதையும், மற்றொன்று அமைதியாக இருப்பதையும் கண்டறிந்தனர் ஆய்வுக் குழுவினர்.
மேலும், அந்த ஒலியைப் பொறுத்து ஒரு செடியில் முட்டையிடலாமா வேண்டாமா எனும் முடிவையும் அப்பூச்சிகள் எடுப்பது தெரியவந்தது.
தாவரங்களுக்குப் புலன் உணர்வுகள் இல்லை என்றும் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாகவே அந்த ஒலிகளைத் தாவரங்கள் ஏற்படுத்துகின்றன என்றும் ஆய்வுக் குழுவினர் கூறினர்.
இதனை உணரும் ஆற்றல் கொண்ட உயிரினங்களுக்கு இவை உதவியாக இருப்பதுடன், எதிர்காலத்தில் விவசாயத் துறையில் பயிர் ஆரோக்கியத்தைத் துல்லியமாகக் கண்டறிந்து நிர்வகிப்பதற்கான சாத்தியக்கூறுகளை உருவாக்கும் எனவும் நம்பப்படுகிறது.