சிங்கப்பூரின் 60வது ஆண்டை வரவேற்கும் விதமாக ‘அகம் தியேட்டர் லேப்’ நிறுவனம் ஆறு தனித்துவமான மேடை நாடகங்களை அரங்கேற்ற உள்ளது.
இவ்வாண்டு தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்படுத்தும் சமூகக் கலாசாரச் சிக்கல், தலைமுறை இடைவெளி தரும் எதிர்பார்ப்புகள், வரலாற்றைப் புதிய கண்ணோட்டத்தில் அணுகுதல் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த நாடகங்கள் அமையவுள்ளன.
பாலர் மேடை எனும் அகம் நிறுவனத்தின் சிறுவர்கள் நாடகக் குழு, இவற்றில் பெரும்பங்காற்ற உள்ளது. நகைச்சுவை, மகிழ்ச்சி, திகில் எனப் பல்வேறு அனுபவங்களை உள்ளடக்கிய இந்நாடகங்கள் ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நடைபெறவுள்ளன.
முச்சந்தி
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆகியோரின் ஒரு நாள் வாழ்க்கையையும், நவீனக் கல்வி முறையில் அவர்கள் சந்திக்கும் சிரமங்களையும் நகைச்சுவையாகப் பேசவுள்ளது முச்சந்தி நாடகம்.
‘மோனோலாக்’ எனப்படும் தன்னுரை, வசனங்கள், இசை உள்ளிட்டவை மூலம் தொழில்நுட்பம், சமூக ஊடகம் உள்ளிட்டவற்றுடன் மனிதர்கள் எவ்வாறு இயைந்து வாழ்கின்றனர் என்பதை இந்நாடகம் விளக்கும். இது அவர்களது போராட்டம், வெற்றி, விரக்தி உள்ளிட்ட உணர்வுகளையும் பிரதிபலிக்கும்.
மேலும், மின்னிலக்க யுகத்தில் தமிழ் மொழி, கலாசார வளமையின் பொருத்தம் உள்ளிட்டவற்றையும் கோடிட்டுக் காட்டும் வண்ணம் அமையும். இந்நாடகம் ஏப்ரல் 11,12ஆம் தேதிகளில் நடைபெறும்.
சார்லி
‘சார்லி அன்ட் சாக்லேட் ஃபேக்டரி’ எனும் திரைப்படத்தை மையமாகக் கொண்டு கற்பனை, கருணை, நேர்மை உள்ளிட்ட கருப்பொருள்களைப் பேசும் நாடகம் இது. சிறுவர்கள் பெரியவர்களுடன் இணைந்து படைக்கவுள்ள இந்நாடகம், இளம் கலைஞர்களின் திறனை வெளிப்படுத்துவதுடன் கதைக்குப் புதிய கண்ணோட்டத்தையும் வழங்கும்.
இந்த நாடகம் மே 24ஆம் தேதி அரங்கேறவுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சாவடி
திகில் கலந்த நகைச்சுவை நாடகமான ‘சாவடி’, இரு நபர்கள், கண்ணுக்குத் தெரியாத ஒரு சத்தம், அது தரும் கட்டளைகள் என எதிர்பாராத தருணங்கள் நிறைந்ததாக இருக்கும். இந்த நாடகம் ஜூலை 4-6 தேதிகளில் நடைபெறவுள்ளது.
நாடகவாதி 7.0
இளைய தலைமுறையினரைக் கலாசாரக் கூறுகளில் ஈடுபடுத்துவதில் நிலவும் சவால்களை எதிர்கொள்ளும் வழிகள் குறித்த விவாதம், அதையொட்டிய செயலுக்கான ஒரு தளமாக அமைகிறது ‘நாடகவாதி 7.0’.
இது கல்வியாளர்கள், கலைஞர்கள், சமூகத் தலைவர்கள் உள்ளிட்டோரை ஒன்றிணைத்து, தமிழ் மொழி நாடகக்கலையின் நிலைத்தன்மையை உறுதி செய்யும் கூட்டு உத்திகளை வகுக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
தியேட்டர் லேப் ‘வுகா’ (VUCA)
வளர்ந்து வரும் நாடகக் கலைஞர்களின் படைப்பாற்றலை ஊக்குவிப்பதுடன் அவர்களது எண்ணங்களை, நேர்மறைத் தாக்கம் ஏற்படுத்தும் மேடை நாடகங்களாக மாற்றும் நோக்கம் கொண்டுள்ளது ‘தியேட்டர் லேப்’.
தொடர்ந்து ஐந்தாண்டுகளாகச் செயல்படும் இந்த ‘லேப்’ இவ்வாண்டு இயக்குநர்களின் பங்களிப்பைப் பாராட்டுகிறது.
‘மிஷன்’ மல்லிகப்பூ
ஜப்பானிய ஆக்கிரமிப்பின்போது சிங்கப்பூரின் சைனாடவுன் பகுதியில் அடக்குமுறைக்கு எதிராக ஒன்றுபடும் கற்பனைக் குழுவின் கதை ‘மிஷன்’ மல்லிகப்பூ’ என்ற நகைச்சுவை நாடகம்.
பல்வேறு சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமை, மீள்திறன், துணிச்சல் உள்ளிட்டவற்றைப் பேசும் இந்த நாடகம், நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
இவை அனைத்தையும் காண விரும்புவோருக்கு ‘சீசன்’ நுழைவுச்சீட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.