வயது ஒரு தடையன்று: 40களில் முதலீடு செய்ய உதவும் குறிப்புகள்

வயது ஒரு தடையன்று: 40களில் முதலீடு செய்ய உதவும் குறிப்புகள்

3 mins read
வாழ்க்கைச் சூழலுக்கேற்ப செலவுகளும் அதிகரிக்கின்றன. பணவீக்க அழுத்தங்களைச் சமாளிக்க சேமிப்பு மட்டும் போதாது.
0d26426b-7409-4f37-97c9-8aa38db3807e
எண்டோவசின் முதலீட்டு ஆய்வு இயக்குநர் மின் எக்ஸ்தெல்ம்.   - படம்: எண்டோவஸ்

65 வயதுக்கும் மேற்பட்ட பெற்றோரையும் 18 வயதுக்கும் குறைந்த பிள்ளைகளையும் கவனித்துக்கொள்ளும் தலைமுறையினருக்கு (Gen X) முதலீடு மிக முக்கியம். 

உங்கள் வயது எதுவாக இருந்தாலும், முதலீட்டைத் தொடங்க ஒருபோதும் தாமதிக்க வேண்டாம் என்கிறார் எண்டோவசின் முதலீட்டு ஆய்வு இயக்குநர் மின் எக்ஸ்தெல்ம்.  

நம்பிக்கையுடன் உங்கள் முதலீட்டுப் பயணத்தை எப்படித் தொடங்கலாம் என்பதற்கான சில குறிப்புகளை அவர் பகிர்கிறார். 

நாம் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

சேமிப்பால் மட்டும் பணவீக்கத்தைச் சமாளிக்க முடியாது. அதைச் சமாளிக்க முதலீடு செய்வது முக்கியம். 

முதலீடு செய்வதால் நமது வாங்கும் சக்தி அதிகரிக்கக்கூடும். மேலும், நீண்டகாலத்துக்கு வருவாய் ஈட்ட முதலீடு உதவுகிறது. சிறிய, தானியங்கு மாதாந்திர முதலீடுகளில் உங்கள் பயணத்தைத் தொடங்கலாம். 

எதற்கு முதலீடு செய்கிறீர்கள் என்பதை முதலில் புரிந்துகொள்வது சிறந்தது. உதாரணத்திற்கு, உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் அவர்களின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்க கல்வி நிதி ஒன்று அமைத்து முதலீடு செய்வது நன்று. 

வயதானால் முதலீடு செய்ய முடியுமா? 

ஒவ்வொருவரும் தம்மால் இயன்றவரை முதலீட்டை விரைவாகத் தொடங்கி நீண்டகாலத்திற்கு முதலீடு செய்ய வேண்டும் என்பது பொதுவான கருத்து. இருபது அல்லது 30களில் முதலீட்டைத் தொடங்க முடியவில்லை என்றால் 40களில் தொடங்கலாம்.

கூட்டு வட்டியின் உதவியுடன் நீண்டகாலம் முதலீடு செய்வதால் உங்கள் செல்வம் வளர வாய்ப்புள்ளது. 

சிங்கப்பூர் மக்களின் சராசரி ஆயுட்காலம் 83 ஆண்டுகள். ஓய்வுபெற்றாலும் உங்கள் வாங்கும் திறனை நீண்டகாலத்துக்கு தக்கவைக்க வேண்டும். நீங்கள் தற்போது 40, 50 வயதினராக இருந்தால் உங்களுக்குப் பல பொருத்தமான முதலீட்டு வாய்ப்புகள் உண்டு. 

நம்மில் சிலர் 85 வயதில் மட்டுமே மத்திய சேமநிதி சாதாரண கணக்கிலிருந்து செலவழிக்கத் தொடங்குவோம். ஆகையால் தற்போது உங்களுக்கு 50 வயதாக இருந்தால், உங்கள் சாதாரண கணக்கில் இருக்கும் நிதியை முதலீடு செய்ய இன்னும் 35 ஆண்டுகள் உள்ளன.

ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்யப்படும் ஒரு சிறிய தொகை கூட காலப்போக்கில் கூட்டு வட்டியுடன் கணிசமாக வளரும். எண்டோவசின் ஆய்வின்படி, மாதந்தோறும் $100 முதலீடு செய்வதால் 5% வருமான விகிதத்துடன் இன்னும் 10 ஆண்டுகளில் அது $15,499க்கு அதிகரிக்கும். 

இதுபோக, குறுகியகால முதலீட்டு வாய்ப்புகள் ஏராளம் உள்ளன. இது, உங்கள் வாழ்க்கை இலக்குகளை சார்ந்துள்ளது. 

வீடு வாங்க முன்பணம் சேமித்தல், அவசரகாலத்துக்கு நிதியை ஒதுக்குதல், குடும்ப விடுமுறைக்காக சேமித்தல் போன்றவை குறுகியகால நிதி இலக்குகள் ஆகும். 

எனவே, நீங்கள் ஏன் முதலீடு செய்கிறீர்கள் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம். முதலீட்டால் ஏற்படும் இடர்களையும் உங்கள் நிதி இலக்குகளின் கால அவகாசத்தையும் கருத்தில் கொள்வதன் மூலம் உங்கள் முதலீட்டுத் திட்டம் மாறுபடலாம். 

நிதி, வாழ்க்கை தரத்தை கணக்கிடுங்கள்

வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் உங்கள் நிதித் தேவைகள், அவற்றின் முன்னுரிமைகள், இலக்குகள் மாறிக்கொண்டே இருக்கும்.

அதனால், உங்கள் தனிப்பட்ட, குடும்ப நிதிகளை சரிபாருங்கள். தனிப்பட்ட நிதி, முதலீடுகளுக்குத் திட்டமிடுவதன் மூலம் நீங்கள் எவ்வளவு சேமித்து, எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பது பற்றி தெளிவு கிடைக்கும். 

44 முதல் 55 வயதுப் பிரிவில் உள்ள முதலீட்டாளர்கள் பெரும்பாலும் தமது வேலை வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க காலம் செலவழித்திருப்பார்கள். அதே நேரத்தில் வயதான பெற்றோர், இளம் வயது பிள்ளைகளை கவனித்துக்கொள்ளும் பொறுப்பும் அவர்களிடம் இருக்கலாம். ஒய்வுக்கால சேமிப்புகளுக்கு அப்பாற்பட்டு பிள்ளைகளின் உயர்கல்வி, பெற்றோரின் மருத்துவத் தேவைகள் என பல செலவுகள் ஏற்படும். 

இந்த வயதுப் பிரிவில் இருக்கும் முதலீட்டாளர்களுக்கு ஓய்வுக்காலத்தை தொடுவதற்கு முன்பு அதிக வருமானம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும். 

அதனால், குறைந்த வருவாய் திறன், குறைந்த இடர் உடைய சொத்துகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, மேலும் பெரிதான முதலீட்டு முயற்சியில் ஈடுபடலாம். 

வயதாகும்போது உடல்நலப் பிரச்சினை, நாட்பட்ட நோய் போன்ற பின்னடைவுகளை சந்தித்தால் நிதித் திட்டங்கள் பாதிக்கப்படும். இதனால் சிலர் குறைந்த அளவிலான முதலீடுகளை செய்வதுண்டு.

தெளிவான நிதி இலக்குகளை அமைத்து முன்னுரிமை கொடுங்கள்

நிதி இலக்குகள் உங்கள் வாழ்க்கையில் தனிப்பயனாக்கப்பட வேண்டும். முக்கிய வாழ்க்கைத் தேவைகள், இலக்குகள், அதற்கான நேரத்தைச் சரியாக திட்டமிடுதல் அவசியம். 

ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் முதலீடு செய்யும்போது, ​​முதலீட்டுத் தொகை, சிறந்த முதலீட்டு உத்தி, கருத்தில்கொள்ள வேண்டிய இடர்கள் ஆகியவற்றைக் கண்டறியலாம்.

பிற்காலத்தில் முதலீடு செய்யத் தொடங்கினால் ஏராளமான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. நிதி இலக்குகள், பணம் தொடர்பான சூழ்நிலைகள், இடர்கள் உட்பட உங்கள் முதலீட்டு உத்தி பொருந்த வேண்டும். 

இன்றே துவங்குங்கள் 

பிற்கால வாழ்க்கையில் முதலீடு செய்வது பற்றி நினைத்து பலர் அஞ்சுவதுண்டு. ஆனால் வயது ஒரு தடையன்று. சுய நிதி இலக்குகளைப் பொறுத்து ஒவ்வொரு வயதினருக்கும் முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. 

குறிப்புச் சொற்கள்
முதலீடுபணவீக்கம்மத்திய சேம நிதிநிதி