வங்கிச் சேமிப்பிலிருந்து பணம் எடுப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை காசோலைகளை நிரப்ப வேண்டும்; வங்கிக்குச் செல்ல வேண்டும்; வரிசையில் காத்திருக்க வேண்டும்.
‘‘ஆனால் இப்போது? நம்மில் யாரும் பணம் எடுப்பதற்கு வங்கிகளுக்குச் சென்றதாகவோ காசோலைகளை எழுதியதாகவோ தெரியவில்லை,’’ என்று கூறினார் டாடா கன்சல்டன்சி சர்விசஸ் (TCS) நிறுவனத்தின் சிங்கப்பூர்ப் பிரிவுத் தலைவர் புனித் அகர்வால்.
அதேபோல, சமூகம் சந்தித்த பல சவால்களுள் மொழி சார்ந்த சவால்கள், அதன் வழியாக நடைபெற்ற தொலைத்தொடர்பு ஆகியவற்றையும் நினைவுகூர்ந்தார் அவர்.
பல்வேறு மொழிகளைப் பேசும் வாடிக்கையாளர்கள் இருந்தால் அவர்களுடன் உரையாட, குறிப்பிட்ட அந்த மொழி பேசும் ஒருவர் பணியில் இருப்பது அவசியம்.
‘‘ஆனால் தற்போது தொழில்நுட்பத்தின் மூலம் 120 மொழிகளில் வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்க முடியும். உங்கள் கேள்விகளை ஆங்கிலம், ஸ்பானிஷ் என எந்தவொரு மொழியில் பதிவு செய்தாலும் ‘ஏஐ’ அதனைப் புரிந்துகொண்டு பதிலளிக்கும். சொல்லப்போனால் வாடிக்கையாளர் சேவைக்கான தனிப்பிரிவு தேவையில்லை என்ற நிலையை நோக்கிச் செல்கிறோம் என்பதையும் மறுப்பதற்கியலாது,’’ என்று விவரித்தார் திரு புனித்.
மிகப்பெரிய தொழில்நுட்பச் சேவை வழங்குநரான ‘டிசிஎஸ்’ சிங்கப்பூரில் தன் உயர் ஆற்றல்மிக்க ஆய்வு, புத்தாக்க நிலையத்தைக் கடந்த ஆண்டு நிறுவியது.
அதன் தொடர்பில், சிங்கப்பூரைத் தெரிவு செய்ததற்கான காரணங்கள், ‘ஏஐ’ வளங்களை நல்கி வாழ்வை மேம்படுத்த ‘டிசிஎஸ்‘ கொண்ட கடப்பாடு ஆகியவை குறித்துத் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார் திரு புனித்.
அறிவார்ந்த தேசம் நோக்கிய சிங்கப்பூரின் பயணத்தை மேலும் வளமாக்கி, வலுவடையச் செய்வதற்கு ஏதுவாக இந்த ஒருங்கிணைப்பை நாடியதாகக் குறிப்பிட்டார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
தொழில்நுட்பம், புத்தாக்கம், நிதிக்கட்டமைப்பு எனப் பல்வேறு தூண்களின் அனைத்துலக மையமாகச் சிங்கப்பூர் திகழ்கிறது என்பதால்தான் இந்த நிலையம் இங்கே நிறுவப்பட்டது என்றும் திரு புனித் தெரிவித்தார்.
‘‘போட்டித்தன்மை மிகுந்த இச்சூழலில், சீரிய மின்னிலக்கத் தொழில்நுட்ப ஆதரவு வழங்கிச் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கும், (எஸ்எம்இ) புதிய நிறுவனங்களுக்கும் அவற்றின் வர்த்தகம் முன்னேற்றம் அடைவதை உறுதிசெய்வதைக் குறிக்கோளாகக் கொண்டு ‘டிசிஎஸ்‘ செயல்பட்டு வருகிறது என்றார் அவர்.
கடந்த 2025ல் ‘டிசிஎஸ்’ சிங்கப்பூரில் கால்பதித்து 40 ஆண்டுகள் நிறைவுபெற்றதை நினைவுகூர்ந்த திரு புனித், ‘‘மணிக்கொருமுறை மாறிவரும் சந்தைச் சூழல்களால் ‘எஸ்எம்இ’ நிறுவனங்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றன. அவற்றுள் குறிப்பிடத்தகுந்தது திறனாளர்கள் சார்ந்தது.
அடுத்து எந்தச் சந்தைத் துறையில் நுழையலாம்? பொருத்தமான வணிகக் கொள்கைகளை எப்படி மாற்றியமைக்கலாம்? இவற்றிற்கான சரியான தொழில்நுட்பங்கள் என்ன? என்பதன் தொடர்பில் உடனடி ஆலோசனை தரும் திறனாளர்கள் மிகுதியாகத் தேவைப்படுகின்றனர். எனவே இதனைப் பூர்த்தி செய்ய ‘டிசிஎஸ்’ ஆலோசகர்கள் பணியாற்றி வருவதாகத் திரு புனித் கூறினார்.
அறிவார்ந்த மறுமலர்ச்சியை நிலைக்கச் செய்யவும் தரவு சார்ந்த அறிவியல், இணையப் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளில் பணியாற்ற உள்ளூர் பல்கலைக்கழகங்களில் பயின்ற பற்பல பட்டதாரிகளுக்குப் பணி வாய்ப்பு அளித்திடவும் ‘டிசிஎஸ்’ இலக்கு கொண்டு திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது என்றார் அவர்.
‘ஏஐ’ என்று சொன்னாலே புத்தாக்கம் எனும் சொல்லும் சேர்ந்தே வருகிறது. அவ்வகையில், மூப்படைந்து வரும் சிங்கப்பூர்ச் சமுதாயத்தில் தனியாக இருக்கும் மூத்தோருக்கு நல்ல பராமரிப்பு வழங்க உதவும் ஒருங்கிணைப்புத் திறன்சாதனங்கள், எச்சரிக்கை ஒலி எழுப்பும் உணர்கருவிகள், ஒருவரின் கற்றல் பயணங்களை வண்ணமயமாக்கும் தளங்கள் என எல்லாமே புத்தாக்கம் ஈந்த நன்கொடைதான்.
‘‘எனவே எது நம் வாழ்வை எளிதாக்குகிறதோ, எது மேம்பட்ட விதத்தில் செயல்பட வகைசெய்கிறதோ அதுவே புத்தாக்கம்,’’ என்றார் அவர்.
‘ஏஐ’ என்று சொல்லும்போது இத்தொழில்நுட்பத்தைத் தீச்செயல்களுக்காகப் பயன்படுத்துவதையும் கணிசமாகக் காண முடிகிறது. எனினும் சமூகம் சந்திக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான திறவுகோலாக ‘ஏஐ’ பயன்படுத்தப்பட வேண்டும் என்றார் திரு புனித்.

