தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பணியிடப் போக்குகளில் ஆதிக்கம் செலுத்தும் செயற்கை நுண்ணறிவு

3 mins read
418ab5f7-c003-47d4-aed1-ad45c7ba963e
செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு, பணி மட்டுமின்றி பணியிட எதிர்பார்ப்புகள், நிறுவனங்களின் பயிற்சித் தேவைகள் எனப் பல்வேறு நிலைகளிலும் ஆதிக்கம் செலுத்துவதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. - படம்: பிக்சாபே

செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு அதிகரித்துவரும் நிலையில் சிங்கப்பூர் ஊழியர்களில் 45 விழுக்காட்டினர் அதைப் பயன்படுத்துவதை மேலாளர்களிடம் ஒப்புக்கொள்வதில்லை என்று அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகெங்கிலும் உற்பத்தித் திறனை அதிகரிக்க செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டாலும், பணியிடத்தில் அதனைப் பயன்படுத்துவது தெரிந்தால் தாங்கள் சோம்பேறி என்றோ திறமையற்றவர் என்றோ கருதப்படும் வாய்ப்புள்ளதாக ஊழியர்கள் கருத்துரைத்துள்ளனர்.

சிலர், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பணியைச் சுலபமாக்குவது ஏமாற்று வேலை என மேலாளர் கருதலாம் என்று அஞ்சுவதாகக் கூறியுள்ளனர்.

சிங்கப்பூர் ஊழியர்கள் 1,008 பேர் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 17,372 பேர் பங்கேற்ற இந்த ஆய்வு, செயற்கை நுண்ணறிவுப் போக்கு, பயன்பாடு, அதிலுள்ள நடைமுறைச் சிரமங்கள், எதிர்பார்ப்புகள், வாய்ப்புகள் குறித்த தரவுகளை வெளியிட்டுள்ளது.

இந்தச் சங்கடம் ஒருபுறம் இருக்க, உலக அளவில் கடந்த மூன்று மாதங்களில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டின் அதிகரிப்பு விகிதம் குறைந்துவருகிறது.

‘ஸ்லாக் வொர்க்ஃபோர்ஸ்’ குறியீட்டின்படி, சிங்கப்பூரில் 52 விழுக்காட்டு ஊழியர்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்டோர், சில பணிகளை இந்தத் தொழில்நுட்பம் ஏற்றுக்கொண்டு தங்கள் சுமையைக் குறைப்பது குறித்து மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர்.

‘மெக்கின்ஸி’ (McKinsey) நிறுவனம், இந்தத் தொழில்நுட்பம் தங்கள் நிறுவனத்தின் வருமானத்தை ஆண்டுக்கு 4.4 டிரில்லியன் அதிகரிக்கக்கூடும் என்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் விற்பனைக் குழுக்களின் வருவாய், பயன்படுத்தாத குழுக்களைவிட 1.3 மடங்கு அதிகம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

நிறுவனங்கள் தொழில்நுட்பங்களின் நன்மைகளை உணர, தங்கள் ஊழியர்களை அவற்றைப் பயன்படுத்தும்படி ஊக்குவிக்கவேண்டும் என்றும் அதைத் திறம்படச் செய்யத் தேவையான பயிற்சியையும் வழிகாட்டுதலையும் அளிக்கவேண்டும் என்றும் மெக்கின்ஸி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டினால் சேமிக்கப்படும் நேரத்தைப் பயன்படுத்தும் வழிகள் குறித்து, ஊழியர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் விருப்பத்திற்குமிடையே மாறுபாடு இருப்பதாகவும் ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

ஊழியர்கள் அந்த நேரத்தைப் புதிய, பெரிய திட்டங்களில் பணியாற்றவும் பணியில் புத்தாக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கவும் சுய முன்னேற்றத்துக்கும் செலவிட விரும்புகின்றனர்.

இந்நிலையில், பணியாற்றும் அதே திட்டத்தில் மேலும் பல வேலைகளையும் இதர நிர்வாக வேலைகளையும் செய்ய நேரலாம் எனக் கருதுவதாகவும் ஆய்வு கோடிட்டுக் காட்டுகிறது.

வேலைப் பாதுகாப்பு குறித்த அச்சம் இருந்தாலும் செயற்கை நுண்ணறிவின் தேவையை உணர்ந்து ஏறத்தாழ 88 விழுக்காட்டினர் அதற்குரிய திறன்களை வளர்த்துக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் 63 விழுக்காட்டு ஊழியர்கள் ஐந்து மணி நேரத்துக்கும் குறைவாகவே செயற்கை நுண்ணறிவைக் கற்றுக்கொள்ளச் செலவிட்டதாகக் கூறிய நிலையில், அனைத்துலக அளவில் 30 விழுக்காட்டினர் தங்களுக்கு இது குறித்த பயிற்சி இல்லை என்று கூறியுள்ளனர்.

உரிய வழிகாட்டுதல் பெற்ற ஊழியர்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் விகிதம் 13 விழுக்காடும், பயிற்சியோ வழிகாட்டுதலோ இல்லாதோர் அதனைப் பயன்படுத்தும் விகிதம் 2 விழுக்காடும் அதிகரித்ததாக ஆய்வு குறிப்பிடுகிறது.

சிங்கப்பூர் ஊழியர்களில் 87 விழுக்காட்டினர் அடுத்த முறை வேலை தேடும்போது, இந்த வகைப் பயிற்சிகளை அளிக்கும் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க உள்ளதாகக் கூறினர். அனைத்துலக அளவில் ஊழியர்கள் ஐவரில் இருவர், செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டை ஊக்குவித்து, அதற்குரிய கருவிகளை வழங்கும் நிறுவனங்களில் பணியாற்ற விழைவதாகத் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்