தங்கள் வாழ்நாளில் ஏதோ ஒரு காலகட்டத்தில் தங்களது அலுவலகத்தைத் தவிர வீட்டிலிருந்தோ வேறோர் இடத்திலிருந்தோ வேலை செய்துள்ளதாக ‘யூகோவ்’ (YouGov) தரவுகளின்படி 36% சிங்கப்பூரர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு செய்யாதோரில் பாதிப் பேர், வேலை செய்ய இது ஒரு சாத்தியமான முறை என்று கூறினர். ஆனால், மற்றொரு சாரார் இது தங்களுக்குப் பொருந்தாது என்று கருதினர்.
எங்கிருந்தாலும் தொழில்நுட்பம், இணையம் என மின்னிலக்க உலகத்தை வலம் வரும் நபர்கள், குறுகியகாலத்திற்கு வாடகைக்குக் கிடைக்கும் தங்குமிடங்களை பெரிதும் நாடுகின்றனர்.
இத்தகைய முறையில் வேலை பார்க்கும் சிங்கப்பூரர்கள் அல்லது வேலை பார்க்க விரும்பும் சிங்கப்பூரர்களில் மூவரில் ஒருவர், ‘ஏர்பிஎன்பி’ (Airbnb) என்ற தங்குமிட முன்பதிவுத் தளத்தைப் பெரிதும் நாடியதாக ஆய்வு குறிப்பிட்டது.
“சட்டபூர்வமாகப் பதிவுச் செய்யப்பட்ட பட்டியலில் உள்ள தங்குமிடங்களை நம்பி முன்பதிவு செய்யலாம். மேலும், ஏர்பிஎன்பி முன்பதிவுச் செயல்முறை மிகவும் எளிமையானது,” என்றார் மாணவர் அரவிந்தன், 24.
“ஹோட்டல்களுடன் ஒப்பிடும்போது ஏர்பிஎன்பிவழி ஓர் இடத்தில் தங்கி வேலை பார்ப்பது சுவாரசியமான அனுபவம்,” என்றார் இன்னொரு மாணவர் கௌதம் குமார், 23.
ஆனால் ஏர்பிஎன்பி தளத்திலும் சில குறைபாடுகள் உள்ளன என்றார் தாதி விஷாலி விஸ்வாமித்திரா, 26.
“ஏர்பிஎன்பி உடனான எனது அனுபவத்தில் தூய்மை தொடர்பான சிக்கல்களை நான் எதிர்நோக்கினேன். இந்த சிக்கலைச் சரிசெய்ய நீண்டநேரம் எடுக்கலாம். அதனால், போட்டிருந்த திட்டங்களை மாற்றியமைக்க வேண்டியிருந்தது,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, 24% சிங்கப்பூரர்கள் ‘புக்கிங்.காம்’ (Booking.com) இணையத்தளத்தைத் தங்களுக்கு விருப்பமான தளம் என்று கூறியிருந்தனர்.
சுமார் 13 ஆண்டுகளாக ‘புக்கிங்.காம்’ இணையத்தளத்தைப் பயன்படுத்தி வரும் ஆசிரியர் தேவி விஜயன், 35, “பல தங்குமிடங்களின் விமர்சனங்கள், படங்கள், மதிப்பீடுகள் போன்றவை இந்த இணையத்தளத்தில் உள்ளன. அதனால், இது நம்பகமானதாக உள்ளது,” என்றார்.
பதிலளித்தவர்களில் மூன்றில் இருவர் தாங்கள் முன்பதிவுச் செய்யும் தங்குமிடத்தின் பாதுகாப்பு முக்கியமான கூறு என்றனர்.
“பாதுகாப்பு மிக முக்கியம். நமது வேலையை நிம்மதியாகச் செய்ய வேண்டும். ஏர்பிஎன்பி வழங்கும் சேவை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது,” என்றார் அபிராமி, 27.
பதிலளித்தவர்களில் 56 விழுக்காட்டினர், தங்குமிடத்துக்கான செலவுகளும் முன்னுரிமை பெறுவதாகக் கூறியிருந்தனர்.
“புக்கிங்.காம் இணையத்தளத்தில் முன்பணம் செலுத்த அவசியமில்லாததால் என்னால் என் செலவுகளைத் திட்டமிட முடிகிறது,” என்றார் லலிதா கரம்ஜித் சிங், 28.
இவ்வாறு பணிகளில் ஈடுபட ஓர் இடத்தைத் தெரிவு செய்வதற்கு முன் ஆராய்ச்சி சிறந்தது என்றனர் பல்கலைக்கழக மாணவர்கள் சுதேஷ்னா, 19, மற்றும் தேன்மொழி, 20.
“முன்பதிவுக்கான ஒவ்வொரு தளத்திற்கும் நன்மைதீமைகள் உள்ளன. இது அவ்விடத்தைப் பயன்படுத்துபவர் விருப்பத்திற்கு ஏற்ற ஒரு முடிவு,” என்றனர்.

