சென்னையில் அமைந்துள்ள பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசன்ட் அறிவியல், தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம் (சிங்கப்பூர்ப் பிரிவு) அதன் வருடாந்தரக் குடும்ப தினத்தையும் பொதுக் கூட்டத்தையும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) நடத்தியது.
சிவில் சர்விஸ் கிளப் - லோயாங்கில் காலை 10 முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், அவர்களுடைய குடும்பத்தினர் என கிட்டத்தட்ட 170 பேர் பங்கேற்றனர்.
சிறுவர் விளையாட்டுகள், போட்டிகள், கதைசொல்லுதல், நாடகம் என பல நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ரமலான் அன்பளிப்புகளும் அதிர்ஷ்டக் குலுக்கல் பரிசுகளும் வழங்கப்பட்டன.
1984ல் நிறுவப்பட்ட பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசன்ட் அறிவியல், தொழில்நுட்பக் கல்லூரி, 12 துறைகளில் 32 இளநிலைப் பட்டப்படிப்புகளையும் 25 முதுநிலைப் பட்டப்படிப்புகளையும் வழங்குகிறது. பல்வேறு துறைகளில் முனைவர் பட்டக் கல்வியையும் அது வழங்கிவருகிறது.
அங்கு படித்தோரில் பலரும் சிங்கப்பூரில் பணியாற்றுகின்றனர். பெரும்பாலோர் இன்று பொறியியல், தொழில்நுட்பம், வங்கித் துறைகளில் பணியாற்றுகிறார்கள் அல்லது சொந்தமாகத் தொழில் புரிகின்றனர்.
அவர்கள் 2012ல் நிறுவிய முன்னாள் மாணவர் சங்க சிங்கப்பூர்ப் பிரிவில், தற்போது 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
“யார் யார் இப்பொழுது என்ன செய்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள குடும்ப தினம் நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது,” என்றார் பிரிவின் உறுப்பினர் ஹாஜா மொஹிதீன்.
“சிங்கப்பூர் சமூகத்துக்குப் பங்காற்ற விரும்புகிறோம். அதனால், பள்ளிவாசல்கள், ஜாமியா, ஸ்ரீ நாராயண மிஷன், சிண்டா போன்ற அமைப்புகளுடன் இணைந்து தொண்டாற்றிவருகிறோம்,” என்றார் முன்னாள் மாணவர் சங்க சிங்கப்பூர்ப் பிரிவின் தலைவர் காமில் ஃபரீத், 47.
தொடர்புடைய செய்திகள்
ஒமர் சல்மா பள்ளிவாசலில் மார்ச் 15ஆம் தேதி சங்கம், இஃப்தார் நிகழ்விற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
“அண்மையில் ஈசூனில் வடமேற்குச் சமூக மேம்பாட்டு மன்றம் குறைந்த வருமானக் குடும்பங்களுக்காக ஏற்பாடு செய்த உணவு விநியோகத்திலும் உதவினோம்,” என்றார் செயற்குழு உறுப்பினர் இப்ராஹிம் இர்ஃபான்.
இவ்வாண்டுமுதல் கூடுதலாகச் சமூகத் தொண்டாற்றவும் தமது சங்கம் இலக்கு கொண்டுள்ளதாகத் திரு காமில் கூறினார்.
“நன்கொடை, தொண்டூழியர்கள் இரண்டையும் பல அறநிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. எங்களால் இயன்றவரை அத்தேவைகளைப் பூர்த்திசெய்ய விரும்புகிறோம். எங்கள் சங்க உறுப்பினர்களை மட்டுமல்லாமல், இல்லத்தரசிகளையும் இளையர்களையும் தொண்டாற்ற ஊக்குவிக்கிறோம். அப்பொழுதுதான் அவர்கள் சிங்கப்பூர் எதிர்நோக்கும் சவால்களைப் புரிந்துகொள்ளலாம்,” என்றார் திரு காமில்.

