தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விலங்குகளுக்கிடையே நகைச்சுவை உணர்வு

2 mins read
20d204e3-73dc-486c-9f69-7d9598dacd00
ஒன்றை ஒன்று கேலி செய்து விளையாடும் குரங்குகள். - படம்: கெட்டி இமஜர்ஸ்

நகைச்சுவை செய்து விளையாடுவது மனிதர்களின் நடைமுறை வாழ்வில் மட்டும் அடங்காது; அவ்வாழ்வியல் முறை விலங்குகளுக்கும் பொருந்தும் என்று ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் இஸபெல் லாமர், தன் சக பணியாளர்களோடு, விலங்கியல் தோட்டங்களில் வசிக்கும் சிம்பன்ஸி, கொரில்லா, ஓராங் ஊத்தான் போன்ற பெரிய குரங்கு வகைகளின் நடவடிக்கைகளை ஆராய்ந்தார்.

இவ்வனைத்து வகைகளிலும் ஒரு குரங்கு மற்றொரு குரங்கைத் தொடர்பு கொள்ளும்போது கேலி செய்வதை ஆய்வாளர்கள் கவனித்தனர்.

ஒன்றை மற்றொன்று அடித்தல், உடல் பகுதிகளை இழுத்தல் எனக் குரங்குகளுக்கிடையே, தனித்துவமான கேலி செய்யும் 18 நடத்தைகள் கண்டறியப்பட்டன.

“குரங்குக்குட்டிகள் பெரிய குரங்குகளுக்குப் பின் ஒளிந்து கொண்டு அவர்களைச் சீண்டுவதும் ஆச்சரியப்படுத்துவதும் வழக்கம்,” என்றார் ஆய்வாளர் இஸபெல் லாமர்.

இந்தக் குறிப்பிட்ட நடவடிக்கை மனிதர்களின் நடத்தையைப் பிரதிபலிப்பது போலவே இருக்கிறது என்றும் குரங்குகளின் நகைச்சுவைக்கும் மனிதர்களின் நகைச்சுவைக்கும் எண்ணற்ற ஒற்றுமைகள் இருக்கின்றன என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சிரிப்பு போன்ற ஒருவித குறட்டை சத்தத்தை எழுப்பும் நாய்கள்.
சிரிப்பு போன்ற ஒருவித குறட்டை சத்தத்தை எழுப்பும் நாய்கள். - படம்: கெட்டி புகைப்படங்கள் (Getty Images)

குரங்குகள் மட்டுமின்றி, ஓநாய்களுக்கும் பிற நாய் இனங்களுக்கும் நகைச்சுவை செய்யும் இயல்பு இருக்கிறது.

நாய்கள் எழுப்பும் சிரிப்பு போன்ற ஒருவித குறட்டை சத்தத்தை ஒரு மீட்பு காப்பகத்தில் ஒலிக்கச்செய்த, நாய்களிடையே மன அழுத்தம் குறைந்ததாக விலங்கு நடத்தை நிபுணர் பேட்ரிசியா சிமோனெட் 2005ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறிந்தார்.

விசில் ஒலியை எழுப்பும் கிளிகள்.
விசில் ஒலியை எழுப்பும் கிளிகள். - படம்: இணையம்

குதூகலமாகச் சண்டை போட்டுக்கொள்ளும் நேரத்தில் மகிழ்ச்சி ஒலிகளை எழுப்பும் டால்பின்கள், உற்சாகத்தில் உறுமும் யானைகள், மற்ற விலங்குகளைக் கேலி செய்ய விசில் ஒலியையும் எழுப்பும் கிளிகள் எனப் பல விலங்குகளுக்கிடையேயும் நகைச்சுவையுடன் விளையாடும் இயல்பு உண்டு என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்