சிங்கப்பூர் உள்ளரங்கின் நாலா பக்கமும் கூடியிருந்து எட்டுத் திக்கும் ஒலித்த 'ராக்ஸ்டார்' அனிருத் ரவிச்சந்தரின் நேரடி இசையில் ஆடி, பாடி கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தனர் சிங்கப்பூர் ரசிகர்கள்.
மேஸ்ட்ரோ புரொடக்ஷன்ஸ் ஏற்பாட்டில் சனிக்கிழமை (மார்ச் 4) 12,000 பேர் கூடியிருந்த அரங்கில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் சுழன்று வந்து மேடையின் எல்லாப் பகுதியிலும் இருந்த ரசிகர்களுக்கு இசைவிருந்தளித்தார் இளம் இசையமைப்பாளர் அனிருத்.
மாலை 5.45 மணிக்குத் தொடங்கிய முன்னோட்டக் காட்சிகளுக்கு 4 மணிக்குக் கதவுகள் திறக்கப்படும் என்று அறிந்திருந்தும் காலை 10 மணியிலிருந்தே வரிசை தொடங்கியது மட்டுமல்லாமல் பிற்பகல் 2 மணிக்கெல்லாம் கிட்டத்தட்ட 2,000 பேர் சிங்கப்பூர் ஸ்போர்ட்ஸ் ஹப் வட்டாரத்தில் கூடிவிட்டனர்.
தங்களின் நுழைவுச்சீட்டுப் பிரிவுக்கு ஏற்ற வரிசையில் இடம்பிடித்து வரிசையிலேயே அமர்ந்து உணவருந்தி அரங்கிற்குள் செல்வதற்கு ரசிகர்கள் தயாராகவே இருந்தனர். கூட்டத்தைக் கட்டுப்பாட்டுடனும் சீராகவும் எந்தக் குழப்பமும் இல்லாமல் ஏற்பாட்டுக் குழுவினர் வழிநடத்தினர்.
புதுமுயற்சியாக இந்த நிகழ்வில் அமைந்த பல அம்சங்களில் 360 டிகிரி சுற்றளவில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடைக்கு அருகில் அமர்ந்து ரசிக்கக்கூடிய இருக்கைகள் இல்லாமல் நின்று ஆடியவண்ணம் கொண்டாடத் தோதாகத் தடுப்புகளும் வைக்கப்பட்டிருந்தன.
முதல் இரண்டு மணி நேரம் உள்ளூர் கலைஞர்களின் ஆடல், பாடலுடன் தொடங்கியது நிகழ்ச்சி. அதன்பின் சிங்கப்பூர் தேசிய கீதம் பாடப்பட்டு பின்னர் அனிருத்தின் பிரம்மாண்ட வருகை அரங்கத்தையே அதிரவைத்தது.
மேடையின் நடுவே கீழ்த்தளத்திலிருந்து உயர்த்தப்பட்டு மேடைக்கு வந்தார் 'ராக்ஸ்டார்'.
காது கிழிய குரலை உயர்த்தி, பலத்த கரவொலியுடன் வரவேற்ற மக்கள், அடுத்த சில மணி நேரத்துக்கு எந்தத் தொய்வுமின்றி அதே ஆரவாரத்தையும் குதூகலத்தையும் கொண்டிருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அதற்கு ஏற்ப அனிருத்தும் தாம் இசையமைத்துப் பாடிய பாடல்களை அவரே இசைத்ததுடன் மட்டுமல்லாமல் தொடர்ந்து பாடி ரசிகர்களை அசத்தினார்.
எந்த மூலையில் இருந்தாலும் மேடையையும் அதற்கு மேல் இருந்த அதிநவீன 'எல்இடி' திரையையும் மக்கள் பார்க்கக்கூடிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஆரவாரத்துக்கு மேலும் வலுசேர்த்தது பிரபல பின்னணிப் பாடகி ஜொனிதா காந்தியின் வருகை.
பாரபட்சமின்றி அனைத்து வயதினரும் இசையில் மூழ்கி ஆடிய வண்ணம் நிகழ்ச்சியை ரசித்தனர். வந்திருந்த அனைவருக்கும் பல வண்ணங்களை வெளிப் படுத்தும் சிறப்புக் கைவளையம் வழங்கப்பட்டிருந்தது. அதிலிருந்து வெளியேறிய வண்ண ஒளி அரங்கை
மிளிரச் செய்து கொண்டாட்டத்துக்கு ரசனை சேர்த்தது.
மூன்று பிரிவுகளாக நடந்த அனிருத்தின் இசை விருந்தின் இரண்டாம் அங்கத்தில் அனிருத் பியானோவில் இசை வழங்க ரசிகர்களைப் பாடச் செய்தார்.
இரு வரிகள் அவர் பாட, மக்கள் தொடர்ந்து பாடல் வரிகளை முடித்து வைத்த நிகழ்வு மனம் கவரும் அம்சமாக இருந்தது.
எல்லாப் பாடல்களையும் மனனம் செய்து மக்கள் பாடியது அனிருத்தையே உணர்வு மேலோங்கி கண்கலங்க வைத்து சில நொடிகள் ரசிகர்களின் அன்பு மழையால் மௌனம் காத்தார். தமது திரையிசைப் பயணம் தொடங்கி அண்மையில் வெளிவந்த பாடல்கள் வரை பலவகைப் பாடல்களையும் ரசிகர்களுக்குத் தந்தார் அனிருத்.
"இதுவரை 6,000 பேர் கொண்ட நிகழ்ச்சியையே நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம். இது இரு மடங்கு கூடுதலான எண்ணிக்கை. தொடக்கத்தில் அச்சமாக இருந்தது. ஆனால் மக்களின் அமோக வரவேற்பு எங்களுக்குத் துணை நின்றது," என்று கூறினார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த மேஸ்ட்ரோ புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான திரு பார்த்திபன் முருகையன்.
'இஸ்தாரா' நகைக்கடை உரிமையாளரான இவர், இசை மீது கொண்ட மிகுந்த ஆர்வத்தால் 2018ஆம் ஆண்டு இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யும் நிறுவனத்தைத் தொடங்கினார்.
பிரிட்டனிலும் கனடாவிலும் இயங்கும் இந்த நிறுவனம், தமிழ் நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் ஆங்கில இசை நிகழ்ச்சிகள், 'கே பாப்' எனப்படும் கொரிய இசை நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறினார் திரு பார்த்திபன்.
இவ்வாண்டு சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் ஐந்து நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ய திட்டம் உண்டு என்ற அவர், காலம் கனியும்போது தகவல்கள் வெளியிடப்படும் என்றுகூறி எதிர்பார்ப்பையும் முடுக்கிவிட்டார்.
"மக்கள் ரசிக்கவேண்டும். அவர்கள் கொடுக்கும் பணத்துக்கு ஏற்ற தரமான நிகழ்ச்சிகளை வழங்கவேண்டும். மேஸ்ட்ரோவின் நிகழ்ச்சி என்றால் அது சிறப்பாக இருக்கும் என்று அவர்களுக்குத் தோன்றவேண்டும்," என்று தமது தாரக மந்திரத்தையும் அவர் பகிர்ந்தார்.
இசைஞானி இளையராஜா 'லைவ் இன் கான்சர்ட்', மறைந்த பாடும் நிலா எஸ்.பி. பால்சுப்பிரமணியம், சின்னக்குயில் சித்ரா, யேசுதாஸ் ஆகியோரின் 'வாய்ஸ் ஆஃப் லெஜண்ட்ஸ்', சித் ஸ்ரீராமின் 'ஆல் லவ் நோ ஹேட்' ஆகிய மூன்று நிகழ்ச்சிகளுக்குப் பின் இந்நிறுவனம் நடத்தியுள்ள நான்காவது நிகழ்ச்சியே அனிருத்தின் 'ஒன்ஸ் அப்பான் எ டைம்'.