பணியில் செய்யக் கூடாதவற்றையும் பட்டியலிடலாம்

2 mins read
d9e92746-ddae-4296-aacf-cf458ed75630
இருவகை ‘ஆன்டி டு டூ லிஸ்ட்’ பட்டியலும் சரியான பணிகளைச் சரியான நேரத்தில் மேற்கொள்கிறோமா என்பதைச் சரிபார்க்க உதவுவதுடன் சுய சிந்தனையையும் ஊக்குவிக்கிறது. - படம்: பிக்சாபே

ஒரு நாளை உற்பத்தித்திறன் அதிகம் கொண்ட நாளாக மாற்ற முதலில் பலரும் செய்யும் செயல், ‘அன்றைய தினம் முடிக்க வேண்டியவற்றைப் பட்டியலிடுவது’. இதனை ‘டு டூ லிஸ்ட்’ எனப் பணி உலகம் வரையறுக்கிறது.

செய்யவேண்டிய, நீண்டநாள் செய்யாமல் விட்ட பல்வேறு வேலைகளையும் அந்தப் பட்டியலில் சேர்ப்பதும் பொதுவான பழக்கம். ஒரு நாளில் உறுதியாக முடிக்க இயலாத வேலைகளைப் பட்டியலில் சேர்ப்பதும், நாள் இறுதியில் அதனை முடிக்க இயலாமல் போவதும் மூளைக்கு ஒருவித ஏமாற்றம் அளிப்பதாகவும் ஒரு சாராரது கருத்தாக உள்ளது.

அதன் விளைவாக, ‘ஆன்டி டு டூ லிஸ்ட்’ (Anti - To do list) எனும் முறை உருவானது. இதில் இருவகை பரவலாகச் செயல்பாட்டில் உள்ளது. முதல் வகை, ஒவ்வொரு பணியையும் செய்து முடிக்கும்போது அவற்றைப் பட்டியலில் சேர்ப்பது. இது, சிறு பணியைச் செய்தாலும், செய்து முடித்த மனநிறைவைத் தருவதாக நம்பப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, நீண்டநாளாக மேற்கொள்ள வேண்டியிருந்த பணி நிமித்தமான தொலைபேசி அழைப்பை மேற்கொண்டது, மின்னஞ்சல்களைப் படித்து, உரியவற்றுக்கு பதில் அனுப்பியது, பணியிட மேசையைச் சுத்தம் செய்தது போன்றவை, செய்ய வேன்டிய வேலைகள் பட்டியலில் இடம்பெறுவதில்லை. ஆனால், இவை பணியில் நேரம் எடுத்துக்கொள்வதுண்டு. ‘ஆன்டி டு டூ லிஸ்ட்’ பட்டியலில் இவை சேர்க்கப்படும்.

செய்ய வேண்டியவை பட்டியல், செய்து முடித்தவை குறித்த மகிழ்ச்சியை ஏற்படுத்தாமல், செய்யாமல் விட்டவை குறித்த சிந்தனையை அதிகரித்து, வேலை நேரம் முடிந்த பின்னரும் மனப்பதற்றத்தைத் தருகிறது. இவ்வகை ‘ஆன்டி டு டூ லிஸ்ட்’, சிறு சாதனைகளைக் கொண்டாடுவதுடன், தன்னம்பிக்கையை அதிகரிப்பதாகவும் நம்பப்படுகிறது.

இரண்டாவது வகை, கண்டிப்பாக செய்யக்கூடாதவற்றைப் பட்டியலிடுவது. சில நாள்களில் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விடுவதைவிட, தேவையற்ற பணிகளிலும், சிந்தனைகளிலும் ஈடுபடுவது உற்பத்தித்திறனைக் குறைக்க வாய்ப்புள்ளது.

இதனைத் தடுக்க, ஒரு நினைவூட்டல்போல பட்டியல் செயல்படும். எடுத்துக்காட்டாக, ஒரு நாளில் தொடக்கத்திலோ முடிவிலோ மின்னஞ்சல்களில் நேரம் செலவிடக் கூடாது, இடையிடையே சமூக ஊடகத்தில் நேரம் செலவிடக்கூடாது, தேவையற்ற தொலைபேசி அழைப்புகளை சில மணி நேரங்களுக்கு ஏற்கக்கூடாது உள்ளிட்டவற்றைப் பட்டியலிடலாம்.

இந்தப் பட்டியல் ஒருவருக்கொருவர் மாறுபடலாம். ஆனால், இவ்வாறு பட்டியலிடுவது, சுய வெளிப்பாடாக அமைவதுடன், நாளடைவில் சுய முன்னேற்றத்துக்கும் வழிவகை செய்யும்.

குறிப்புச் சொற்கள்