தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அறிமுகமானது ஐஃபோன் 15

2 mins read
3117ef3c-24b8-43cd-9ba2-7d1954a270b3
அமெரிக்காவில் அமைந்திருக்கும் ஆப்பிள் நிறுவனத் தலைமையகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் புதிய ஐஃபோன் 15, ஐஃபோன் 15 பிளஸ் ரகக் கைத்தொலைபேசிகள். - படம்: ராய்ட்டர்ஸ்

கூபடினோ, கலிஃபோர்னியா: ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய ஐஃபோன் 15 புரோ கைத்தொலைபேசியை அமெரிக்காவில் அமைந்திருக்கும் அதன் தலைமையகத்தில் அறிமுகம் செய்துள்ளது.

மேம்பட்ட திறனுடைய கேமராக்கள், டைட்டானியம் உறை போன்ற, பயனாளர்களை ஈர்க்கக்கூடிய அம்சங்களுடன் அது அறிமுகம் கண்டுள்ளது.

புதிய ஐஃபோன் 15 ரகக் கைத்தொலைபேசியின் தொடக்க விலை 799 அமெரிக்க டாலர் என்றும் ஐஃபோன் 15 பிளஸ் ரகக் கைத்தொலைபேசியின் விலை 899 அமெரிக்க டாலர் என்றும் கூறப்பட்டது.

சிங்கப்பூரில் அவை முறையே 1,299 வெள்ளிக்கும் 1,449 வெள்ளிக்கும் விற்கப்படும்.

உலகளாவிய நிலையில் திறன்பேசிகளின் விற்பனை சரிந்துள்ளதால் விலையை உயர்த்த வேண்டாம் என முடிவெடுத்ததாக ஆப்பிள் நிறுவனம் கூறியது.

ஐஃபோன் 15 ரகக் கைத்தொலைபேசியில் திரை கூடுதல் ஒளிமிக்கதாய் இருக்கும். 48 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டிருக்கும். அதன் மின்கலன் 100 விழுக்காடு மறுசுழற்சி செய்யப்பட்ட கோபால்ட் உலோகத்தில் தயாரிக்கப்பட்டிருக்கும்.

மேலும், யுஎஸ்பி-சி மின்னேற்றும் கம்பியைக் கொண்டிருக்கும். இதை ஐபேட், மேக் ஆகியவற்றுக்கும் பயன்படுத்த முடியும்.

இந்த ரகக் கைத்தொலைபேசியைப் பயன்படுத்தி, தொழில்முறை புகைப்படக் கலைஞரைப்போல் முப்பரிமாணக் காணொளிகளைப் பதிவுசெய்ய இயலும் என்கிறது நிறுவனம்.

புதிய ஆப்பிள் கைக்கடிகாரம்-தொகுப்பு 9ஐயும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய ஆப்பிள் கைக்கடிகாரம்-தொகுப்பு 9.
புதிய ஆப்பிள் கைக்கடிகாரம்-தொகுப்பு 9. - படம்: ஏஎஃப்பி

இதில் இருமுறை தட்டும் அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. பயனாளர் தொலைபேசி அழைப்பை ஏற்க, தனது கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் இருமுறை இணைக்க வேண்டும். கைக்கடிகாரத்தைத் தொடத் தேவையில்லை.

பயனாளரின் ரத்த ஓட்டத்தில் உள்ள மிகச் சிறிய மாற்றத்தையும் அடையாளம் காணும் தொழில்நுட்பம் இந்தக் கைக்கடிகாரத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

வேறு வேலைக்குக் கையைப் பயன்படுத்தும்போது, இரு விரல்களை இணைப்பதன் மூலம் தொலைபேசி அழைப்பை ஏற்க இது உதவுவதை நிறுவனம் சுட்டியது.

இந்தக் கைக்கடிகாரத்தின் தொடக்க விலை 399 அமெரிக்க டாலர். அல்ட்ரா 2 ரகக் கைக்கடிகாரத்தின் விலை 799 அமெரிக்க டாலர். செப்டம்பர் 22ஆம் தேதி இவை விற்பனைக்கு வரும் எனக் கூறப்பட்டது.

ஆப்பிள் நிறுவனம் இனி அதன் தயாரிப்புகளில் தோல் பொருள்களைப் பயன்படுத்தப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்