உடலில் போதிய இரும்புச்சத்து இல்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகளாகச் சோர்வு, பொலிவிழந்த முகம், கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்கள் ஆகியவற்றை குறிப்பிடுகின்றனர்.
மருத்துவர்கள், தாதியர், நல்வாழ்வுப் பயிற்றுநர்கள் உள்ளிட்டோரின் சமூக ஊடகப் பதிவுகளிலும் இரும்புச் சத்துக் குறைபாடு குறித்த செய்திகள் பரவலாகப் பேசப்படும் தலைப்பாக இருந்து வருகின்றன.
இது மற்றொரு இணைய நல்வாழ்வுப் போக்கு போலத் தோன்றினாலும், உலகளவில் முதலிடத்தில் உள்ள ஊட்டச்சத்துக் குறைபாடு இரும்புச்சத்துத் தட்டுப்பாடே ஆகும்.
மேலும், ஆக அதிக அளவில் கவனக்குறைவாகக் கையாளப்படும் குறைபாடுகளில் இதுவும் ஒன்று. அமெரிக்காவில், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு மூத்தோரை இது பாதிக்கிறது; அவர்களில் பெரும்பாலானோர் பெண்களாவர்.
மாதவிடாய் ரத்தப்போக்கு வழியாகப் பெண்கள் இழக்கும் இரும்புச் சத்து குறித்து, மிச்சிகன் மாநிலத்தின் ஆன் ஆர்பர் நகரைச் சேர்ந்த மூத்தோர் நல மருத்துவர் சௌமியா ரங்கராஜன், “20, 30 வயதுகளில் இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் இரும்புச் சத்துக் குறைபாடு போன்றவை வாழ்க்கையின் இயல்பான பகுதி என அலட்சியப்படுத்துகின்றனர் எனக் கூறினார்.
மேலும், இரும்புச்சத்துக் குறைபாடு குறித்துத் தமது சக ஊழியர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவுகளைப் பார்த்த பிறகே, தாம் இரும்புச்சத்து அளவைப் பரிசோதித்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இரும்புச்சத்துக் குறைபாடு கண்டறியும் முறை
ரத்த சிவப்பணுக்களில் உயிர்வாயுவைச் சுமந்து செல்லும் ‘ஹீமோகுளோபின்’ எனும் புரதத்தை உருவாக்குவதற்கு இரும்புச்சத்து மிகவும் முக்கியம்.
‘ஃபெரிட்டின்’ எனும் மற்றொரு புரதம், உடலில் இரும்புச்சத்தைச் சேமித்து வைக்கிறது.
ரத்த இழப்பு, போதுமான இரும்புச் சத்துள்ள உணவுகளை உட்கொள்ளாமை, உட்கொள்ளும் இரும்புச்சத்தை உடல் உறிஞ்சத் தவறுதல், கர்ப்பகாலம் போன்ற காரணங்களால் இரும்புச்சத்துத் தட்டுப்பாடு ஏற்படலாம்.
சோர்வு என்பது இரும்புச்சத்து குறைபாட்டின் முக்கிய அறிகுறியாகும்.
ஆனால், முடி உதிர்தல், தலைவலி, மூச்சுத்திணறல், தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகளுடன் சாயம், சுண்ணக்கட்டி, காகிதம் அல்லது மண் போன்ற உணவு அல்லாத பொருள்களை உண்ணும் ஆவல் ஆகியவற்றையும் மருத்துவர்கள் கவனிக்கின்றனர்.
இரும்புச்சத்து குறைபாடு தீவிரமாக இருக்கும் பட்சத்தில் நாக்கு அழற்சி, நகங்களில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவையும் அறிகுறிகளாக இருக்கலாம்.
உங்கள் ஹீமோகுளோபின் அளவைப் பரிசோதிப்பதன் மூலம் மருத்துவர்கள் இரும்புச்சத்துக் குறைபாட்டைக் கண்டறியலாம். ஆனால், அந்தப் பரிசோதனை ஃபெரிட்டின் அளவை அளவிடாததால், உங்கள் இரும்புச் சத்து சேமிப்பு கணிசமாகக் குறையும் வரை அது வழக்கமாகக் குறைபாட்டைக் காட்டாது.
இதன் விளைவாக, வழக்கமான ரத்தப் பரிசோதனை மூலம் இரும்புச்சத்துத் தட்டுப்பாடு உள்ள ஒருவரைக் கண்டறியத் தவறக்கூடும் என மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் குழந்தைகள் ரத்தவியல் நிபுணர் ஏஞ்சலா வயாண்ட் கூறினார்.
இரும்புச்சத்துக் குறைபாட்டுச் சிகிச்சை
உணவு முறையைப் பொருட்படுத்தாமல் பல நிலைகளில் இரும்புச் சத்து உறிஞ்சப்படுவதைக் குறைக்கலாம்.
உடல் எடையைக் குறைப்பதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகளுக்கு இரும்புச்சத்து உறிஞ்சப்படுவது பாதிக்கப்படலாம். ஏனெனில், இந்த நடைமுறை குடல் பகுதியை மாற்றியமைக்கிறது. நெஞ்செரிச்சல் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் சில மருந்துகளின் நீண்டகாலப் பயன்பாடும் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதைப் பாதிக்கலாம்.
இரும்புச்சத்துக் குறைபாட்டுக்கான சிகிச்சை
ஒருவருக்கு எந்த அளவுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு உள்ளது, அக்குறைபாட்டிற்கு எது காரணமாக அமைகிறது என்பதைப் பொறுத்தே சிகிச்சை அமையும்.
கூடுதல் இரும்புச்சத்துகளை வாய்வழியாகவோ அல்லது உரிமம்பெற்ற மருத்துவராலோ ரத்த நாள வழியிலோ வழங்க முடியும். உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால் இரும்புச்சத்து மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால், அவற்றை உட்கொள்ளும் கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் இரைப்பைக் குடல் பக்க விளைவுகளை அனுபவிக்கிறார்கள் என மருத்துவர் வயாண்ட் கூறினார்.
பொதுவாக, மருத்துவர்கள் 65 மிகிராம் முதல் 100 மிகிராம் வரையிலான அளவுகளில் ஒரு மாத்திரையை ஒரு நாள் விட்டு ஒரு நாள் உட்கொள்ளுமாறு பரிந்துரைக்கின்றனர்.
மூன்று மாதங்களுக்குப் பிறகும் அளவுகள் மேம்படவில்லை என்றால், நோயாளி இரும்புச்சத்தைச் செலுத்துதல் சிகிச்சை போன்ற மாற்றுச் சிகிச்சைகளுக்கு மாற வேண்டியிருக்கலாம்.
