பலூன் அருங்காட்சியகம் படைக்கும் ‘பாப் ஏர் - ஆர்ட் இஸ் இன்ஃப்ளேட்டபிள்’ (Pop Air - Art is Inflatable) எனும் இருவழித் தொடர்புக் கண்காட்சி முதன்முறையாக சிங்கப்பூருக்கு வருகிறது.
உலகின் முன்னணி நவீன கலைஞர்களின் 17 கலைப்படைப்புகள் அந்தரத்தில் மிதப்பதை மக்கள் அணுக்கமாகக் காணலாம்.
‘லக்ஸ் என்டர்டெயின்மென்ட்’ படைப்புக் குழுவால் உருவாக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இவ்வாண்டு ஜூன் 7 முதல் ஆகஸ்ட் 31 வரை மரினா பே சேண்ட்ஸ் வளாகத்தில் இடம்பெறும்.
ஏறத்தாழ 6,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் இந்தக் கண்காட்சி விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கலை, நிஜ உலகிற்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைத்து பார்வையாளர்களுக்கிடையே உணர்ச்சிகள், கற்பனையைத் தூண்டும் ஒரு முயற்சியாக இந்த கண்காட்சி இடம்பெறும்.
காற்று என்ற கருப்பொருளை ஒட்டிய படைப்புகளின் லேசான தன்மையினால் பார்வையாளர்கள் படைப்புகளுடன் ஈடுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல ‘பாப்’ கலாசாரத்தைக் கருத்தியல் ஆராய்ச்சியுடன் இணைக்கும் இந்தப் படைப்புகள் அருங்காட்சியகங்களைப் பார்வையிடாதவர்களைக் கூட ஈர்த்து ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கும் என்று தெரிவித்தார் ‘லக்ஸ் என்டர்டெயின்மெண்ட்’ தலைவர் ராபர்டோ ஃபேன்டௌஸி.
‘பாப் ஏர் - ஆர்ட் இஸ் இன்ஃப்ளேட்டபிள்’ ‘ கண்காட்சிக்கான நுழைவுச்சீட்டுகள் திங்கட்கிழமை (மே 5) தொடங்கியது. மேல் விவரங்களுக்கு https://singapore.balloonmuseum.world/en/Shop/biglietti என்ற இணையப்பக்கத்தை பொதுமக்கள் நாடலாம்.


