சிங்கப்பூரிலும் உலகின் பல பகுதிகளிலும் நாட்பட்ட மனம் சார்ந்த சிக்கல், மூப்பு, உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மருந்துகளுடன், ‘சோஷியல் பிரிஸ்கிரிப்ஷன்’ எனும் உடற்பயிற்சி, சமூகத் தொடர்பு உள்ளிட்டவற்றைப் பரிந்துரைப்பது வழக்கமாகியுள்ளது.
இந்நிலையில், ஓவியம், வரைகலை, வடிவமைப்பு சார்ந்த செயல்பாடுகளையும் பரிந்துரைப்பது குறித்து வல்லுநர்கள் ஆய்வு நடத்திவருகின்றனர்.
கலை ஆர்வலர்கள், அந்நடவடிக்கைகளில் ஈடுபடுவது மன அழுத்த அளவைக் குறைப்பதாகச் சொல்லப்படுகிறது. அதற்கான சான்றுகள் குறித்தும், அவற்றின் தேவை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில் பலரும் சான்றுகளைச் சமர்ப்பித்து வருகின்றனர்.
சுவிட்சர்லாந்தின் நியூசாடெல் நகரம் கடந்த மாதம் இத்தகைய அறிமுகத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அதன்கீழ், நாட்பட்ட பிரச்சினைகளால் அவதியுறும் நோயாளிகளுக்குத் தோட்டங்கள், கலைக்கூடங்கள், அரும்பொருளகங்கள் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லப் பரிந்துரைக்கப்படுவதாக ராய்ட்டர்ஸ் நிறுவனச் செய்தி குறிப்பிட்டது.
உடல்நலனைப் பேணுவதிலும் மேம்படுத்துவதிலும் கலைகளின் பங்கை ஆராய்ந்து, உரிய முறையில் கையாள்வது குறித்த உலகச் சுகாதார நிறுவனத்தின் கருத்தை இது அடிப்படையாகக் கொண்டுள்ளதாகக் கூறப்பட்டது.
மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வுகளின் முடிவில், நீண்டகால நோய்க் கட்டுப்பாட்டு முறையில் கலைகளுக்கு முக்கியப் பங்குள்ளதாக நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது.
மனித உணர்வுகளுக்கும் கலைகளுக்கும் அடிப்படையிலேயே தொடர்பு இருப்பதால், ‘கலைச் சிகிச்சை’ எனும் சொல் வழக்கில் வந்தது.
ஒரு நோயாளியின் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, சீராக வைப்பதே நோய் கவனிப்பில் முக்கியப் படிநிலை என மருத்துவ உலகு நம்புகிறது.
தொடர்புடைய செய்திகள்
அதற்கு ஆதரவளிக்கும் வழிமுறைகள் குறித்தும் தொடர்ந்து ஆலோசித்து வருகிறது.
ஓராண்டு தொடரவுள்ள இந்தத் திட்டத்தின் முதற்கட்ட முடிவுகளை ஆராய்ந்தபின், மேடை நாடகம் உள்ளிட்ட பிற கலைகளையும் இதில் ஒன்றிணைக்கும் வழிமுறைகள் ஆராயப்படவுள்ளன.