கலைகளின்வழி வாழ்விடங்களுக்குப் புத்துயிரூட்டவும் சமகால வாழ்க்கை, எதிர்காலம் குறித்த வெளிப்பாடுகளாக விளங்கும் வகையிலும் அமையும் ‘சிங்கப்பூர் பியானேல்’ எனும் கலைத் திருவிழா இவ்வாண்டு ‘தூய எண்ணம்’ (pure intention) எனும் கருப்பொருளில் இடம்பெறவிருக்கிறது.
தேசியக் கலை மன்றத்தின் ஆதரவில் சிங்கப்பூர்க் கலை அரும்பொருளகம் ஏற்பாடு செய்துள்ள இவ்விழா, 2025 அக்டோபர் 31 முதல் 2026 மார்ச் 29 வரை நடைபெறும். இம்முறை 30 புதிய படைப்புகளுடன் நூற்றுக்கும் மேற்பட்ட கலைப்படைப்புகள் நகரை அலங்கரிக்கவுள்ளன. இதற்காகப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 80 கலைஞர்கள் பங்காற்றவுள்ளனர்.
சிங்கப்பூரின் அறுபதாவது ஆண்டையொட்டி நாட்டின் நகர, சமூகச் சூழலின் பரிணாமத்தைக் காட்டும் வண்ணம் இவை அமையவுள்ளன. இந்தக் கலை நிறுவல்கள்மூலம் சிங்கப்பூரர்கள், சுற்றுப்பயணிகள் என அனைவரும் சமகாலக் கலையின்வழி நாட்டின் பயணம் குறித்து அறிய முடியும் என்றும் சிங்கப்பூரர்கள் தங்கள் வசிப்பிடம், பணியிடங்களுக்கு அருகே கலைகளை அனுபவிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலைவிழா, நகர் முழுதும் பல கலைப்படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு கலைகளை அன்றாட வாழ்வில் ஒன்றிணைக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மக்களையும் இடங்களையும் இணைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட கலைப் படைப்புகள் பல இடங்களில் நிறுவப்படும்.
சிங்கப்பூரின் பல்வேறு நினைவுகளை உள்ளடக்கிய 24 கிலோமீட்டர் ரயில் பசுமைப்பாதை, வெளிப்புறங்களில் நிறுவப்படும் இயங்குபடைப்புகளுடன் (kinetic outdoor installation) புத்துயிர் பெறும்.
தங்ளின் ஹால்ட் சந்தைப் பகுதி உள்ளடக்கிய அனுபவம் தரும் நிறுவலுடனும் பல்வேறு நாடுகளின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த சமூகங்களின் வரலாறுகள் கொண்ட நிறுவல்களுடனும் சிங்கப்பூர் மத்திய குடிமை வட்டாரம் களைகட்டவுள்ளது.