சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பழந்தமிழர்க் கலைகளில் கோலம் போடுவதும் ஒன்றாகும்.
பாரம்பரிய முறையில் அரிசி மாவில் இடப்படும் கோலங்கள், இன்று கண்ணைக் கவரும் வண்ணங்களில் மிளிர்கின்றன. மங்கல நிகழ்ச்சிகளின்போது இடப்படும் அரிசி மாவுக் கோலம் எறும்புகள், பறவைகள் போன்ற உயிரினங்களுக்கு உணவாகவும் அமைகிறது.
கோலம் இடுவதால் ஏற்படும் நன்மைகள் பல. மரபு, பண்பாட்டைப் பறைசாற்றும் இந்த எளிமையான கலை, ஆழ்ந்த மன அமைதியை ஏற்படுத்துகிறது. நினைவாற்றல், படைப்பாற்றல், கலாசார ஒருங்கிணைப்பு ஆகியவற்றைக் கோலமிடுதல் ஊக்குவிக்கிறது.
மேலும், காலையில் எழுந்து முழுக் கவனத்துடன் கோலமிடுவது மனத்தை ஒருநிலைப்படுத்தி, அன்றைய நாளை நன்முறையில் தொடங்க உதவுகிறது.
மன அழுத்தம் நீங்கும்
கோலம் போடுவது போன்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் உடலில் சுரக்கும் கார்டிசோலின் (cortisol) அளவு குறைகிறது. இதனால் மனம் உடனடியாக அமைதி பெறும் என்றும் மன அழுத்தம் நீங்கும் என்றும் கூறப்படுகிறது.
முழுக் கவனத்தை அளிக்கும் திறன்
அவரவர் கற்பனைக்கேற்ப கோலங்களை உருவாக்குவதற்கு மிகுந்த கவனம் தேவை. கோலம் இடுகையில் ஒருவரின் முழுக் கவனமும் அதன் வடிவமைப்பின்மீது செல்லும். மனமும் சிந்தனையும் ஒருநிலைப்படுவதால் தேவையற்ற நினைவுகள், கவலைகளைப் பற்றி யோசிக்கமாட்டார்கள்.
உணர்வுகளைக் கட்டுப்படுத்துதல்
அமைதியான நிலையில் இருக்கும்போது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடிகிறது. கோலமிடும்போது ஏற்படும் அமைதி, உணர்வுகளைச் சரிவரக் கையாள உதவுகிறது. மேலும், அமைதியான மனம் சிறந்த படைப்பாற்றலுக்கு வழிவகுக்கிறது.
சொந்தத் திறன் மீது பிறக்கும் மதிப்பு, நம்பிக்கை
கோலம் இடுவது பெரும்பாலும் ஒரு சாதனை உணர்வைத் தூண்டும். ஒருவரின் படைப்பாற்றல், முயற்சி போன்றவற்றுக்குச் சான்றாக அவர் வரைந்த கோலம் அமைவதால் அவருக்குத் தனது திறன் மீதான மதிப்பும் தன்னம்பிக்கையும் ஏற்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
கலாசாரத்துடன் இணைப்பு
பன்னெடுங்காலமாய்த் தொடர்ந்துவரும் கோலமிடும் கலையில் ஈடுபடுவதால் சமூகம், கலாசாரம், பாரம்பரியத்துடன் ஒருங்கிணையும் உணர்வு ஏற்படும்.

