செயற்கை நுண்ணறிவு முதல் லேடி காகா வரை: 2025ல் சிங்கப்பூரர்கள் அதிகம் தேடிய தலைப்புகள்

2 mins read
ae59a1dd-ed0d-4b5e-a597-97530d18eabf
உலகின் அனைத்து நாடுகளிலும்,பொதுவான தேடல்கள் தொடங்கி, பிரபலங்கள், உள்ளூர், அனைத்துலகச் செய்திகள், திரைப்படங்கள், பொருளியல் என ஒன்பது பிரிவுகளில் தேடப்பட்ட முதல் பத்து தலைப்புகளை கூகல் வெளியிட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செயற்கை நுண்ணறிவுக் கருவியான ‘டீப் சீக்’, புதிதாகத் திறக்கப்பட்ட ‘ரெயின் ஃபாரஸ்ட் வைல்டு ஏ‌ஷியா’ தொடங்கி அமெரிக்காவின் வரிவிதிப்புகள் வரை பல்வேறு செய்திகளைச் சிங்கப்பூர் மக்கள் இணையத்தில் இந்த ஆண்டு தேடியுள்ளனர்.

ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் மக்கள் அதிகம் தேடும் பத்து தலைப்புகளை கூகல் நிறுவனம் வெளியிடும்.

அவ்வகையில், இந்த ஆண்டு சிங்கப்பூரர்கள் அதிகம் தேடிய பட்டியலில் சிடிசி பற்றுச்சீட்டு, எஸ்ஜி60, எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகள், எஸ்ஜி கலாசார சிறப்புத்தொகை ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த ஆண்டு அதிகம் கவனம்பெற்ற சிங்கப்பூர்ப் பொதுத் தேர்தல், செய்திகள் பிரிவில் பத்தாமிடம் பெற்றது. உள்ளூர்ப் பிரபலங்களைப் பொறுத்தமட்டில், தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) தலைமைச் செயலாளர் இங் சீ மெங் முதலிடம் பெற்றார்.

இப்பட்டியலில், சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலாளர் சீ சூன் ஜுவான் நான்காமிடமும் துணைப் பிரதமர் கான் கிம் யோங் ஐந்தாமிடமும் பெற்றனர்.

அனைத்துலகப் பிரபலங்களில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், லேடி காகா, போப் லியோ உள்ளிட்டோர் இடம்பெற்றனர். செப்டம்பரில் அறிமுகம் கண்ட ஐஃபோன் 17, கடன் அட்டைகள், இஸ்ரேல்-ஈரான் பூசல், இந்தியா-பாகிஸ்தான் சச்சரவு, சிங்கப்பூர் ஓ‌ஷனேரியம், கேஸ்ட்ரோ பீட்ஸ் 2025, மண்டாய் ரெயின்ஃபாரஸ்ட் ரிசார்ட் ஆகியவையும் கூகல் தேடல் பட்டியலில் இடம்பெற்றன.

‘ஸ்குவிட் கேம்’, ‘வென் லைஃப் கிவ்ஸ் யூ டேஞ்சரீன்ஸ்’ உள்ளிட்ட பிரபல நிகழ்ச்சிகள், சிங்கப்பூரர்கள் அதிகம் தேடிய பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்தப் பட்டியல்கள், அது தொடர்பான பகுப்பாய்வுகள், கூகலின் புதிய செயற்கை நுண்ணறிவு அம்சங்களை மேம்படுத்த உதவும் என்றும் நிறுவனம் கூறியது.

குறிப்புச் சொற்கள்