தம்மால் காண முடியாத உலகைத் தேனினும் இனிய குரலில் வர்ணித்து, தம் உலகினுள் 750 பேரை அழைத்துச் சென்றார் 13 வயது நூர் அனிசா டானிஸ்.
காதுகேளாத இசை ஆசிரியர் லில்லி கோ, சைகை மொழியாலேயே இசையைப் பார்வையாளர்களிடம் கொண்டுசென்றார்.
அனிசாவுடன் இணைந்து பாடியவருக்கும் பார்வைக் குறைபாடு உள்ளது. வாத்தியங்களை இசைத்தவர்களில் சிலருக்கு உடற்குறை, சிலருக்கு மதியிறுக்கம், சிலருக்குக் கற்றல் குறைபாடு உண்டு.
அவர்களோடு தொண்டூழியர்களும் சேர்ந்து மொத்தம் 110க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் ஜூன் 14ஆம் தேதி இரவும் ஜூன் 15ஆம் தேதி பிற்பகலிலும் சிங்கப்பூர் மாநாட்டு மண்டப அரங்கை இசைமழையில் நனைத்தனர்.
உடற்குறை, சிறப்புத் தேவைகள் கொண்டவர்களின் தனித்துவமான இசை ஆற்றல்களை மேடையேற்றுகிறது, மத்திய வட்டார சமூக மேம்பாட்டு மன்றம் 2015ல் தொடங்கிய ‘பர்ப்பிள் சிம்ஃபனி’.
சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டுநிறைவு, ஊதா சிம்ஃபனியின் 11வது ஆண்டுத் தொடக்கம் இரண்டையும் கொண்டாடும் விதமாக இந்த ஆண்டின் நிகழ்ச்சி அமைந்தது.
கலைஞர்கள் சிலரால் மக்களின் புன்னகையைக் காண முடியாவிட்டாலும், கைதட்டலைக் கேட்க முடியாவிட்டாலும் அவர்களின் அன்பும் பாராட்டும் அனைத்துக் கலைஞர்களையும் சென்றடைந்தன.
அமைச்சர்கள் சீ ஹொங் டாட், ஜோசஃபின் டியோ, டேவிட் நியோ, முன்னாள் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் ஆகியோரோடு 10க்கும் மேற்பட்ட அடித்தள ஆலோசகர்களும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
வியக்கவைத்த அம்சங்கள்
இசையைக் கேட்டபோது கிடைத்த அதே வியப்பு இசைக் கலைஞர்களின் வாழ்க்கைக் கதையைக் கேட்டபோதும் கிடைத்தது.
மூன்று வயதிலேயே அனிசா டானிசுக்கும் அவருடைய தம்பிக்கும் ரெட்டினல் டிஸ்டிரஃபி (retinal dystrophy) எனப்படும் பார்வைக் குறைபாடு கண்டறியப்பட்டது.
தான் காண்பது நிழல்களே என்றாலும் துவண்டுவிடாமல் தன் செவித்திறனை வளர்த்தார் அனிசா. யூடியூப் பாடல்களைத் தொடர்ந்து கேட்டு, தாமாகப் பியானோ வாசிக்கக் கற்றுக்கொண்டார்.
“நான் சிறுவயதிலிருந்தே பிறர் பாடுவதை விரும்பிக் கேட்பேன். அவர்கள் எப்படி இவ்வளவு நன்றாகப் பாடுகிறார்கள் எனச் சிந்திப்பேன்,” என்றார் அவர்.
ஏழு வயதில் அவர் லைட்ஹவுஸ் பள்ளியின் பாடகர் குழுவில் சேர்ந்து முறையான பயிற்சி பெற்றார். அக்குழுவின் பயிற்றுவிப்பாளரே ‘பர்ப்பிள் சிம்ஃபனி’யின் பயிற்றுவிப்பாளராகவும் இருந்ததால் அதிலும் அனிசா சேர்ந்தார்.
இசை ஒருங்கிணைப்பாளரின் (conductor) கை அசைவுகளைக் காணமுடியாதபோதும் எப்படி வாத்தியங்களுடன் இணைந்து பாடமுடிந்தது?
“ஒருங்கிணைப்பாளர் மூச்சு இழுத்து விடுவதைக் கேட்டதும் நான் பாடத் தொடங்குவேன். தாளத்துக்கேற்ப பயிற்றுவிப்பாளர் எங்கள் முதுகில் தட்டுவதும் உண்டு. சரியான தருணத்தில் பாடத் தொடங்குவது சவால்மிக்கதே,” என்றார் அனிசா.
2023 முதல், ‘பர்ப்பிள் சிம்ஃபனி’யின் வருடாந்தர இசைநிகழ்ச்சியில் பாடிவரும் அனிசா, இவ்வாண்டு ‘ஒருவேளை அன்பாக இருக்குமோ’ (Perhaps Love), ‘ஒன்றுபட்டு’ (Together) உள்ளிட்ட ஆறு பாடல்களைப் பாடினார்.
பல மேடைகளில் தொடர்ந்து பாடுவதே அனிசாவின் கனவு.
கலைஞர்களின் திறன்களுக்குத் தகுந்த அங்கீகாரம்
அனிசாவின் ஆற்றலை அங்கீகரிக்கும் விதமாக, ஜிஐசியின் நிதியாதரவில் ‘பர்ப்பிள் சிம்ஃபனி’ வழங்கும் பயிற்சி நிதித் திட்டத்தின் (Training Award Programme) மானியம் அவருக்கு வழங்கப்பட்டது.
உடற்குறையுள்ளோரும் குறைந்த வருமானக் குடும்பத்தினரும் இசை பயிலவும் படைக்கவும் அந்த மானியம் உதவுகிறது. அதன் உதவியோடு அனிசா இசை வகுப்புகளுக்குச் செல்கிறார். அவர் வாய்ப்பாட்டில் 6ஆம் நிலையை எட்டியுள்ளார். அவரைப்போல் பர்ப்பிள் சிம்ஃபனியின் மானியத்தைப் பெற்ற மற்றொருவர் மதியிறுக்கம் கொண்ட குவெக் மிங் யி. தாளக் கருவியில் (drums) அவர் எட்டாம் நிலையை அடைந்துள்ளார். கடந்த ஒன்பது ஆண்டுகளாக அவர் பர்ப்பிள் சிம்ஃபனியில் ‘பர்கஷன்’ வாத்தியங்களை வாசித்து வந்துள்ளார்.
எதிர்காலத்தில் தன் சொந்தப் பாடலை உருவாக்கி சிம்ஃபனியில் வாசிக்க வேண்டும் என்பதே அவருடைய கனவு.
“சவால்களைச் சந்திக்கும்போது இலக்கைவிடப் பயணம்தான் முக்கியம் என்பதை நினைவுபடுத்துவேன்,” என்றார் மிங் யி.
“பர்ப்பிள் சிம்ஃபனி இனி தன் இசையையும் கொள்கைகளையும் மேடைக்கு அப்பால் பொதுவான சிங்கப்பூர்ச் சமூகத்துக்கும் கொண்டுசெல்லவுள்ளது. வரும் ஆண்டுகளில் முதியோர், சிறைக் கைதிகள், ராணுவத்தினர், சுகாதாரத் துறையினர் எனப் பலரையும் சென்றடைவோம்,” என்றார் மத்திய சமூக மேம்பாட்டு மன்ற மேயரும் பர்ப்பிள் சிம்ஃபனி ஆலோசகருமான டெனிஸ் புவா.

