மனிதர்களால் மட்டும்தான் கலைப்படைப்புகளை உருவாக்க முடியுமா என்று சிலர் நினைக்கக்கூடும்.
கூடு கட்டும் பறவை, வலை உருவாக்கும் சிலந்தி, புற்று கட்டும் எறும்பு என ஏராளமான விலங்குகள், பூச்சிகளின் படைப்புகளை ஏன் கலைப்பொருள்களாகக் கருதக்கூடாது என்ற கேள்வி எழலாம்.
திறமையுடனும் சுய உணர்வுடனும் உருவாக்கப்படுவதே கலை என்று பிரிட்டானிக்கா தகவல் களஞ்சியம் கொண்டுள்ள கண்ணோட்டத்தைக் கவனித்தோமானால், விலங்குகள் எந்த உணர்வுகளால் படைப்புகளை உருவாக்குகின்றன என உறுதியாகக் கூற இயலாது. விலங்குகளுக்கு சுய உணர்வு உள்ளதா என்ற அறிவியல் சார்ந்த கேள்வி இந்நேரத்தில் எழுகிறது.
கலைநயம் கொண்டவை என மனிதர்களால் பாராட்டப்படும் படைப்புகளை விலங்குகள் உருவாக்கியவை இவை:
1910ல் ‘சன்செட் ஓவர் த ஏட்ரியட்டிக்’ ஓவியத்தின் ஒரு பகுதியை ‘லோலோ’ என்ற கழுதை, தூரிகை பிடித்து வண்ணம் தீட்டியது.
கழுதை செய்து முடித்தது சிறிய பகுதிதான். ‘ஜெனோவா’ படத்தின் பெரும்பகுதியை எழுத்தாளரும் விமர்சகருமான ரோலேந்து டோர்ஜெலிஸ் முடித்து படத்தை விற்றார். விற்கப்பட்ட படத்திலிருந்து பெறப்பட்ட லாபம், கலைகளுக்கான அற அமைப்புக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
பிக்காசோவின் கவனத்தை ஈர்த்த குரங்கு
1950களில் உயிரியல் நிபுணர்களின் கலைகளைப் பற்றி ஆய்வு செய்த டெஸ்மண்ட் மொர்ரிஸ், குரங்குகள் தூரிகைகளையும் எழுதுகோல்களையும் கொண்டு தாள்களில் வரையும் கிறுக்கல்களைச் சேகரித்தார்.
‘எப்ஸ்ட்ரேக்ட் ஆர்ட்’ எனப்படும் சுருக்க ஓவியங்களைச் சில குரங்குகள் வரைவதைத் திரு மொர்ரிஸ் கவனித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அவற்றில் காங்கோ என்ற குரங்கு, மிகச் சிறந்த படைப்புகளை உருவாக்கியது. 1954ல் பிறந்து 10 ஆண்டுகளுக்கு வாழ்ந்த அக்குரங்கு, நான்கு வயதிலேயே ஏறத்தாழ 400 படங்களைத் தீட்டியது.
காங்கோவின் படங்களை ரசித்ததாகக் கூறிய புகழ்பெற்ற நவீன பாணி ஓவியர் பப்லோ பிக்காசோ, அப்படங்களில் ஒன்றைத் தமது ஓவிய அரங்கில் வைத்ததாகக் கூறினார்.
பயிற்சி கொடுக்கப்பட்டால் வரையும் யானைகள், டால்ஃபின்கள்
மனிதர்களால் வளர்க்கப்படும் யானைகள், தூரிகையைத் துதிக்கையால் பிடித்து ஒரு சில வடிவங்களை வரைகின்றன.
அமெரிக்காவின் ஃபீனிக்ஸ் விலங்கியல் தோட்டத்தில் ரூபி என்ற ஒரு யானை, தனது ஆயுள்காலத்தின்போது பல்வேறு படங்களை வரைந்து காட்டியது.
அதுபோல, தாய்லாந்தில் ஒரு சில இடங்களில் யானைகள் படங்கள் வரைவதை சில யானை முகாம்கள் காண்பிக்கின்றன.
அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்திலுள்ள கடல்வாழ் பாலூட்டி ஆய்வு நிலையத்தில் சில டால்ஃபின்களுக்கு வரைய கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
அதிசய முயல் ஓவியர்
2012ல் பிறந்த ‘பின்னி’ என்ற முயல், அக்ரிலிக் வகை சுருக்க ஓவியங்களை வரைந்ததற்காக பிரபலமடைந்தது. லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் வசிக்கும் இந்த முயல், 60க்கும் மேற்பட்ட காணொளிகளிலும் இடம்பெற்றுள்ளது.
விலங்குகளின் படைப்புகளுக்குப் பின்னால் என்ன சிந்தனைகள் உள்ளன என்ற கேள்விக்கான பதில்கள் உறுதியாக இல்லை. அத்துடன், மனிதர்கள் அல்லாதவை உருவாக்கும் படைப்புகளுக்கான காப்புரிமை குறித்தும் இன்றளவும் கேள்விகள் உள்ளன.