தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேல் வாங்கி வேலையை முடித்த ‘ஆறுமுகம்’

3 mins read
22cfffa9-b3f6-4b0c-8bd9-943e17566353
‘பார்வதி தேவி’ பிரியங்கா சாபுவிடம் வேவ் வாங்கும்  ‘முருகப்பெருமான்’ ரேஷ்மா சுப்ரமணியம். - படம்: ஸ்ரீ சாஸ்தா சங்கம்

தைப்பூசத் திருவிழா வரும் பிப்ரவரி 11ஆம் தேதியன்று சிங்கப்பூரில் களைகட்டவிருக்கும் நிலையில் விக்டோரியா அரங்கத்தில் அத்திருநாளுக்குரிய அறிகுறிகள் நிறைந்திருந்தன.

ஸ்ரீ சாஸ்தா சங்கத்தின் ஏற்பாட்டில் முருகப்பெருமானின் பிறப்பையும் சூரபத்மன் வதத்தையும் பற்றிய புராணத்தை ‘புனிதமிகு வீரன் ஆறுமுகம்’ (Arumugam The Divine Warrior) என்ற நாட்டிய நாடகம், ஜனவரி 26ஆம் தேதி சித்திரித்துக் காட்டியது.

கணபதி துதிக்குப் பிறகு முதல் நடனமாக சிவசக்தித் தாண்டவம் மேடையை அலங்கரித்தது. அதன் பிறகு, ஆறு முருக வடிவங்களாகச் சிறு குழந்தைகள், கார்த்திகைப் பெண்களாக நடித்த தாய்மார்களுடன் தத்தித் தவழ்ந்து ஆடிய காட்சி, பார்வையாளர்களையும் குதூகலம் அடையச் செய்தது.

மலைமகளாம் பார்வதி தேவியின் நடனப் பாத்திரம், ஆறு பேராக நின்ற பாலமுருகர்கள் ஒவ்வொருவரையும் கொஞ்சி மகிழ்ந்து அவர்களுடன் ஆடியது, அசப்பில் கண்ணபிரானின் ராச லீலை நடனமாகவும் காட்சியளித்தது. சைவ சமயத்தில் சிவசக்திக்கும் திருமாலுக்கும் உள்ள ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் ‘அரியல்லால் தேவியில்லை ஐயன் ஐயரனார்க்கே’ என்ற திருநாவுக்கரசரின் வரி, நாட்டிய நாடகத்தின் இந்த அங்கத்திலிருந்து காண முடிகிறது.

சூரபத்மாதி அசூரர்களைச் சித்திரிக்கும் நூதன நடனமும் அங்கமும் நினைவில் கொள்ளக்கூடியதாக உள்ளன. இறுதியில், காவடி ஆட்டங்கள் சித்திரிக்கப்பட்ட காட்சி, ‘ஸ்ரீவள்ளி’, ‘கந்தன் கருணை’ போன்ற பழைய படங்களின் காட்சிகள் போல் இருந்தன.

வெவ்வேறு வயதினரை இந்தப் படைப்பில் இடம்பெறச் செய்து, அவர்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்துவது ஸ்ரீ சாஸ்தா சங்கத்தின் நோக்கமாக இருந்ததாக நடனத்தின் வடிவமைப்பாளர் எஸ். ஹேமலதா தெரிவித்தார்.

“குறிப்பாக, தாய்மார்கள் தங்கள் மகள்களுடன் ஆடுவதற்கான வாய்ப்பை இந்த நிகழ்ச்சியில் ஏற்படுத்த விரும்பினேன். குடும்பத்தாருடன் மேடையில் ஆடும் தனித்துவமான அனுபவத்தை அவர்கள் பெறட்டும் என்பதற்காக,” என்று திருவாட்டி ஹேமலதா கூறினார்.

குறமகள்கள் சூழ நிற்கும் ‘முருகப்பெருமான்’ ரேஷ்மா சுப்ரமணியம்.
குறமகள்கள் சூழ நிற்கும் ‘முருகப்பெருமான்’ ரேஷ்மா சுப்ரமணியம். - படங்கள்: ஸ்ரீ சாஸ்தா சங்கம்

செவ்விசை மட்டுமின்றி பறை, கஞ்சிரா உள்ளிட்ட கிராமிய இசைக்கருவிகள் இந்தப் படைப்புக்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் குழலிசைக் கலைஞர் கானவினோதன் ரத்தினம் கூறினார்.

“நிகழ்ச்சியின் பல்வேறு கட்டங்களில் முருகனுக்குரிய சண்முகப்ரியா ராகம் கையாளப்பட்டது. இந்த ராகத்தைச் சரியாக இசைப்பது சவாலானது என்றாலும் இளம் கலைஞர்கள் செய்து காட்டினர்,” எனப் புகழ்ந்தார் சிங்கப்பூரின் ஆக உயரிய விருதான கலாசாரப் பதக்கத்தைக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெற்ற திரு கானவினோதன்.

மலைமகள் கதாபாத்திரத்தை ஏற்று நடனமாடிய மாணவி பிரியங்கா சாபு, 23, இந்த வாய்ப்பு தமது நற்பேற்றால் கிடைத்துள்ளதாகக் கூறினார்.

‘சூரபத்மனை’ வதம் செய்யும் ‘முருகப்பெருமான்’. சூரபத்மன் வேடத்தில் (வலது) சங்கரி மூவேந்திரன்.
‘சூரபத்மனை’ வதம் செய்யும் ‘முருகப்பெருமான்’. சூரபத்மன் வேடத்தில் (வலது) சங்கரி மூவேந்திரன். - படம்: ஸ்ரீ சாஸ்தா சங்கம்

“பராசக்தியின் உருப்பெற்றிருப்பது, சரியான நடன அசைவுகளைக் கடந்த ஒன்று. தேவியின் நளினத்தையும் ஆளுமையையும் வலிமையையும் நினைந்து அவற்றை எனக்குள் பிரதிபலிக்க வேண்டியிருந்தது,” என்றார் பிரியங்கா.

நிகழ்ச்சி மேடையில் கணபதியைக் காணவில்லையே என்ற சிறு ஏக்கம் பார்வையார்களில் சிலருக்கு இருக்கக்கூடும். நடனம் ஆடும் கணநாதன் மேடையில் சேர்க்கப்பட்டிருந்தால் பொலிவுக்கு மேலும் பொலிவு சேர்க்கப்பட்டிருக்கலாம்.

இலக்கியச் செறிவும் அதி ஆழமும் கொண்டுள்ள இத்தகைய புராணங்களைச் சித்திரிக்கும் அடுத்தடுத்த நாடகங்களில் தமிழ் இலக்கியக் கூறுகள் கூடுதலாகச் சித்திரிக்கப்படலாம். இருந்தபோதும், அனுபவமும் ஆதரவும் அதிகரிக்க ஸ்ரீ சாஸ்தா சங்கத்தின் கலைப்படைப்புகள் மேன்மேலும் புதிய உச்சத்தை எட்டும் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம்.

குறிப்புச் சொற்கள்