சிங்கப்பூரர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்துக்குத் தயாராகிவரும் நிலையில், சிறந்த தள்ளுபடிகளைப் பெறவும் சரியான நேரத்தில் பொருள்களின் விநியோகத்தை உறுதி செய்யவும், இணையவழி பொருள் வாங்கும் போக்கு அண்மைய காலத்தில் அதிகரித்துள்ளது. இவ்வேளையில், இணைய மோசடி செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
மோசடிகளைத் தடுப்பதற்கான உலகளாவிய முயற்சிகளின் ஒரு பகுதியாக சிங்கப்பூரில் 9,000 ‘ஃபிஷிங்’ இணையத்தளங்களை அகற்றியதாக மெட்டா நிறுவனம் அண்மையில் தெரிவித்தது. அதிகரித்து வரும் மோசடிகளை இது வெளிக்காட்டுகிறது.
இணையப் பாதுகாப்பு நிறுவனமான ட்ரெண்ட் மைக்ரோ, 1,026 சிங்கப்பூரர்களை உள்ளடக்கி நடத்திய ஆய்வு, விடுமுறைக்கால மோசடிகளின் பரவலை எடுத்துக்காட்டுகிறது.
ஆய்வில் பங்கெடுத்தவர்களில் கிட்டத்தட்ட 59 விழுக்காட்டினர் விடுமுறை தொடர்பான இணைய மோசடிகளைக் கண்டறிந்ததாகக் கூறியுள்ளனர். இவர்களில் 12 விழுக்காட்டினர் மட்டுமே பாதிக்கப்பட்டதாக புகார் அளித்ததாகவும் 31 விழுக்காட்டினர் மோசடிகளுக்கு ஆளாகிய ஒருவரை தாங்கள் அறிந்திருப்பதாகவும் கண்டறியப்பட்டது.
ஒருவரின் தனிப்பட்ட தகவல்களைக் கேட்கும் அஞ்சல் துறை பெயரில் அனுப்பப்படும் குறுஞ்செய்திகள், பொதுவான மோசடி உத்திகளில் ஒன்று.
அதுமட்டுமல்லாமல், இணையம் வழி வாங்கிய பொருள்கள் ஒருபோதும் வந்துசேராததாக 45 விழுக்காட்டினர் கூறினர். விடுமுறைக் காலத்தில் இணையக் கொள்முதல் தொடர்பான பிரச்சினைகளை இது சுட்டிக்காட்டுகிறது.
மோசடிக்காரர்களால் குறிவைக்கப்படுவது பற்றி 64 விழுக்காட்டினர் கவலை தெரிவித்தனர். அதேவேளையில், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் இலக்காகக் கூடும் என்று 70 விழுக்காட்டினர் கவலை கொள்வதையும் இந்த ஆய்வு வெளிப்படுத்தியது. செயற்கை நுண்ணறிவின் முன்னேற்றங்கள், மோசடிகளைக் கண்டறிவதைக் கடினமாக்கும் என்று 65 விழுக்காட்டினர் நம்புகிறார்கள்.
இதுபோன்ற மோசடிகளில் சிக்காமலிருக்க, வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்குமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
அதிகாரபூர்வ இணையத்தளங்கள் அல்லது செயலிகளைப் பயன்படுத்தி ஒன்றுக்கு இரண்டு முறை சோதனை செய்வதன்மூலம் இணைய விளம்பரங்கள், விநியோக அறிவிப்புகள் ஆகியவற்றின் உண்மைத்தன்மையை எப்போதும் சரிபார்க்கவும்.
மின்னஞ்சல்கள் அல்லது குறுஞ்செய்திகள் வழியாக அனுப்பப்படும் சந்தேகத்திற்கிடமான இணையத்தளங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும், முன்பின் தெரியாத பரிவர்த்தனைகளுக்கான வங்கி அறிக்கைகளைக் கண்காணிக்கவும், பாதுகாப்பான கட்டண முறைகளையும் வங்கிக் கணக்குகளுக்கு ஈரடுக்கு சரிபார்ப்பு முறையையும் (2FA) பயன்படுத்தி கூடுதல் பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம்.
பண்டிகைக் காலம், கொண்டாட்டத்திற்கான நேரமாக இருந்தாலும், விழிப்புணர்வுடன் இருந்தால் அனைவரும் மோசடிகளுக்கு இலக்கு ஆகாமல் இருப்பதை உறுதிசெய்யலாம்.