தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆசிய அளவில் விருதுபெற்ற ‘ஐயா வீடு’ நாடகம்

3 mins read
938da6b5-ee18-4908-96ca-e18fed852087
29வது ஆசிய தொலைக்காட்சி விருது விழாவில் ‘ஐயா வீடு’ நாடகத் தொடருக்காக விருது வென்ற நாடக இயக்குநர் ஜே கே சரவணா (நடுவில்), தந்தரா குழுமத் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி ஜே கே சதீஷ் (இடம்), தலைமைப் புத்தாக்க இயக்குநர் நந்தகுமார். - படம்: ஜே கே சரவணா

‌‌ஆசிய தொலைக்காட்சி விருது விழாவில் விருது வென்ற முதல் சிங்கப்பூர்த் தமிழ் நாடகத் தொடர் என்ற பெருமையை ஜே கே சரவணாவின் ‘ஐயா வீடு’ நாடகத் தொடர் பெற்றுள்ளது.

ஜகார்த்தாவில் நவம்பர் 29, 30ஆம் தேதிகளில் நடந்த 29வது ஆசிய தொலைக்காட்சி விருது விழாவில் ‘ஐயா வீடு’ நாடகம், ‘தலைசிறந்த மின்னிலக்கப் புனைகதைத் தொடர்’ என்ற விருதை வென்றது.

மீடியாகார்ப் வசந்தம், இவ்விழாவில் தமிழ் நிகழ்ச்சிக்காக வென்றுள்ள முதல் விருதும் இதுவே.

‘ஐயா வீடு’ நாடகம், ‘தலைசிறந்த மின்னிலக்கப் புனைகதைத் தொடர்’ விருதை வென்றது. 
‘ஐயா வீடு’ நாடகம், ‘தலைசிறந்த மின்னிலக்கப் புனைகதைத் தொடர்’ விருதை வென்றது.  - படம்: ஜே கே சரவணா

தந்தரா குழுமத்தால் தயாரிக்கப்பட்ட ‘ஐயா வீடு’ நாடகத் தொடர், மீடியாகார்ப் வசந்தத்திலும் meWatch-லும் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை 34 பாகங்களாக ஒளிபரப்பானது.

இத்தொடரைத் தந்தரா குழும நிறுவனர் ஜே கே சரவணா இயக்கினார். வசனங்களை மலேசிய எழுத்தாளர் யுவாஜி, சிங்கப்பூர் எழுத்தாளர் சிவ‌ஸ்ரீ எழுதினர். திறன்மிக்க உள்ளூர் நடிகர்கள், அந்தக் காலத்துக்கு ஏற்றாற்போல் உடைகள், வடிவமைப்புகள் போன்றவையும் நாடகத்துக்கு மெருகேற்றின.

‘ஐயா வீடு’ என்பது நான்கு தலைமுறைகளாக சிங்கப்பூரில் இருந்துள்ள ஜே கே சரவணாவின் உண்மையானதொரு குடும்பக் கதையிலிருந்து உருவான புனைகதை.

“மன்னார்குடியின் அருகிலுள்ள திருமக்கோட்டையிலிருந்து வந்தவர் என் தாத்தாவின் அப்பா. இந்தியாவிலிருந்து பல உறவுக்கார குடும்பங்களும் தங்கிச் செல்லும் பொதுவீடாக அமைந்தது 94 ஓவன் சாலையில் அமைந்த எங்கள் ‘ஐயா வீடு’. ஒரு காலகட்டத்தில் அங்கு 20 பேர் கூட்டுக் குடும்பமாக இருந்தனர்.

“அந்த வீட்டையும் என் தாத்தா இருவரும் கோவிந்தசாமி முத்துசாமி, கோவிந்தசாமி (ஜார்ஜ்) சுப்பையா அங்கு வளர்ந்ததையும் சார்ந்து ஒரு நாடகம் படைக்கவேண்டும் என்பது சிறுவயதிலிருந்து எனக்கிருந்த ஆசை,” என்றார் ஜே கே சரவணா, 43.

இரு காலகட்டங்களோடு பின்னிப் பிணைந்த கதை

நாடகம் இரு காலகட்டங்களை மாறி மாறிச் சித்திரிக்கிறது. 1922ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்த சிவலிங்கம், தம் மனைவியுடனும் மூன்று பிள்ளைகளுடனும் ‘ஐயா வீடு’க்குள் நுழைகின்றனர். 1990ல், ‘ஐயா வீடு’ குத்தகை முடிந்ததால் சிவலிங்கத்தின் மகன்களும் குடும்பங்களும் பெரும் வருத்தத்தோடு அவ்வீட்டைவிட்டுத் தனிக்குடித்தனத்திற்குச் சென்றனர். இரு காலகட்டங்களில் நடப்பனவற்றை ஒரே சமயத்தில் காட்டும் விதம், சுவாரசியத்தைக் கூட்டுகிறது.

ஃபிஃபா உலகக் கோப்பையின் முதல் ஆசிய ஆட்ட நடுவர் என்ற பெருமையைக் கொண்டாடிய ஜார்ஜ் சுப்பையாவை மனதில் வைத்து உருவான ‘நடராஜன்’ எனும் கதாபாத்திரம், நாடகத்தில் முக்கியப் பங்கை வகிக்கிறது.

“சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவும் ஜார்ஜ் சுப்பையாவும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். சுப்பையாவின் மனைவியின் உறவினர் முன்னாள் அதிபர் எஸ் ஆர் நாதன். அவர்களின் கதாபாத்திரங்களும் நாடகத்தில் இடம்பெற்றுள்ளன,” என்றார் ஜே கே சரவணா.

ஓவன் சாலையிலிருந்த வீட்டை மீண்டும் தத்ரூபமாகக் காட்சிப்படுத்த, தமிழ்த் திரைப்படக் கலை இயக்குநர் ராஜீவன் தம் இரு பிள்ளைகளோடு, 1920களின் சாயலில் 6,000 சதுர அடி பரப்பளவு கொண்ட இரண்டு மாடிக் கடைவீடு போன்ற படப்பிடிப்பு அரங்கத்தை அமைத்தார்.

2013ல் இவ்விருதுகளுக்காக முதன்முறையாக நியமனம் பெற்ற ஜே கே சரவணாவுக்கு, 11 ஆண்டுகள் கழித்துக் கிடைத்த வெற்றி பெரும் மகிழ்ச்சியளித்துள்ளது.

விருதை வென்ற களிப்பில் ‘ஐயா வீடு’ இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் தந்தரா குழுமத் தலைவர் ஜே கே சரவணா.
விருதை வென்ற களிப்பில் ‘ஐயா வீடு’ இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் தந்தரா குழுமத் தலைவர் ஜே கே சரவணா. - படம்: ஜே கே சரவணா

நாடகத்தின் அடுத்த சீசன் பற்றிய திட்டங்களும் தமக்கு உள்ளதாகக் கூறினார் ஜே கே சரவணா.

இதற்கு முன்பு, சங் நீல உத்தமா காலத்தில் அமைந்த ‘அரட்டை அரண்மனை’, 1970களில் அமைந்த ‘லிங்கம் ஸ்டோர்ஸ்’ ஆகிய நாடகத் தொடர்களையும் ஜே கே சரவணா வழங்கியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்