கைப்பேசிப் பயன்பாடு நேரத்தை விழுங்கி வருவதாகக் கவலை எழுந்துள்ள நிலையில், இப்போது கழிவறையிலும் அதனைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது.
நண்பர்களுக்குக் குறுஞ்செய்திகள் அனுப்புவது, காணொளி பார்ப்பது, செய்திகள் படிப்பது என கழிவறையிலும் சிலர் அதிக நேரம் கைப்பேசியில் மூழ்கி விடுகின்றனர்.
இது ஆபத்தான பழக்கம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இவ்வாண்டு செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பெருங்குடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 125 நோயாளிகள், தங்களது கழிவறை பழக்கவழக்கங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டனர்.
அவர்களில் பெரும்பான்மையோர், கழிவறையில் தங்களின் கைப்பேசியை வாரம் ஒருமுறையேனும் பயன்படுத்துவதாகக் கூறினர்.
அத்தகைய முறையில் கைப்பேசி பயன்படுத்துபவர்களுக்கு மலக்குடல் அழற்சி, மூல நோய் வருவதற்கான ஆபத்து 46 விழுக்காடு அதிகம் எனக் கூறப்படுகிறது.
“சமூக ஊடகத் தளங்களில் வரும் காணொளிகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும்போது பலர் கழிவறையில் நீண்ட நேரம் இருக்க வேண்டியிருக்கும். இது அவர்களின் மலக்குடல் திசுக்கள்மீது அதிக அழுத்தத்தை உண்டாக்கும்,” என்றார் பாஸ்டனில் உள்ள இரைப்பைக் குடல் நிபுணர் திரிஷா பஸ்ரிச்சா.
மூல நோயால் பாதிக்கப்படும் அபாயத்துடன், பொதுவாகவே இந்தப் பழக்கம் தீங்கிழைக்கக்கூடியது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
கழிவறையில் கைப்பேசி பயன்படுத்துவோர் ஐந்து நிமிடங்களுக்கு மேல் கழிவறையில் நேரம் செலவிட வாய்ப்புள்ளது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
மேலும், தொடர்ந்து ஐந்து நிமிடங்களுக்கு மேலாகக் கழிவறையில் அமர்ந்திருப்பது இடுப்புப் பகுதி நரம்புகளையும் தசைகளையும் பாதிக்கலாம் என்று டாக்டர் திரிஷா எச்சரித்தார்.
மலக்குடல் ரத்த நாளங்களைத் தாங்கும் இணைப்புத் திசுக்கள் காலப்போக்கில் வலு குன்றி, அவை வீங்கி, ரத்தத்தால் நிரம்ப காரணமாகலாம் என்றும் டாக்டர் திரிஷா தெரிவித்தார்.
இதற்கும் மலச்சிக்கலுக்கும் இடையிலான தொடர்பு குறித்து எந்த ஆராய்ச்சியும் கண்டறியப்படவில்லை என்றாலும் அந்தத் தொடர்பு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
நீண்ட நேரம் கழிவறையில் அமர்ந்திருப்பது மலக்குடல் உள்மடிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். இதனால் மலக்குடல் சரிந்து அது ஆசனவாய் வழியாக வெளியேறும் நிலை ஏற்படும்.
இது ஏற்படுவது அரிது என்றாலும் பெரும்பாலும் பெண்கள்தான் இதனால் பாதிக்கப்படுவதாக நம்பப்படுகிறது.
கைப்பேசியை கழிவறைக்கு எடுத்துச்செல்வதும் சுகாதாரமற்ற பழக்கம். கழிவைத் துடைக்கும்போது அதில் உள்ள நுண்ணுயிரிகள் கைகளில் ஒட்டிக்கொண்டு அதன்மூலம் கைப்பேசியில் படலாம்.
கழிவறையின் மூடியைத் திறந்த நிலையில் ‘ஃபிளஷ்’ செய்வதால் கழிவு காற்றில் தெறித்து கைப்பேசியில் படியவும் வாய்ப்புள்ளது.
கைகளைக் கழுவினாலும் அதன்பிறகு மீண்டும் கைப்பேசியைத் தொடும்போது அந்த நுண்ணுயிரிகள் கைகளின்மேல் ஒட்டிக்கொள்ளலாம்.
இது எந்த அளவிற்கு ஒரு நோயை ஏற்படுத்தும் என்பது குறித்து ஆய்வு முடிவுகள் இல்லை.
ஆயினும், ஐந்து நிமிடங்களுக்குமேல் கழிவறையில் இருக்கும் பழக்கத்தைக் கைவிடச் சொல்கிறார் டாக்டர் திரிஷா.
அதன்பின்னரும் கழிவை வெளியேற்றுவது சிரமமாக இருந்தால் மருத்துவரைப் பார்ப்பது நல்லது.

