சிவகுமார்
கவிதை என்பது மொழிதான். ஆனாலும், அது மாபெரும் அக வெளிப்பாடு.
இயல்பான சொற்றொடர் மேம்பட்டிருப்பது கவிதை. ஒருவரது கருத்தை, பார்வையை மிகச் சிறந்த வடிவில் வெளிப்படுத்துவது கவிதை. அது காலங்காலமாக நிற்கின்ற தொடராகவும் சமூகத்தை அசைத்துப் பார்க்கின்ற தொடராகவும் விளங்குகின்றது.
கவிமாலை அமைப்பு ஏற்பாடு செய்திருந்த 'கவிதையும் இலக்கணமும்' என்ற பயிலரங்கில் கவிஞர் மகுடேசுவரன் உதிர்த்த சொற்களே இவை.
"ஒன்றை வேறொரு வடிவத்தில் சொல்வது கவிதை. அது மூன்று அடிப்படை இயல்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.
"முதலாவதாக, மனவியப்பு. கவிஞன் மாசற்ற கண்ணோடு உலகைக் காண வேண்டும்; எதனையும் வியந்துநோக்குபவனாக இருத்தல் வேண்டும்; அவ்வியப்பைத் தொடராக எழுத வேண்டும்.
"எப்பொழுதும் கேள்விகளோடு இருக்க வேண்டும். விடையிருந்தால் அவன் கவிஞன் இல்லை. தனக்குத் தெரியாததுபோல் கேட்க வேண்டும். கேள்விகள் கடும் விளைவுகளை ஏற்படுத்த வல்லவை.
"இறுதியாக, கவித்துவமான தீர்வும் பார்வையும் கொண்டிருக்க வேண்டும். இம்மூன்று அடிப்படைகளோடு எந்தவொரு வாக்கியத்தையும் பொருட்செறிவோடு எழுத வேண்டும். கவிதையை முத்தாய்ப்பாக முடிக்க வேண்டும்," என்று கவிஞர் மகுடேசுவரன் வலியுறுத்துகிறார்.
ஒரு சொல்லை ஒற்றைச் சொல்லாக நிறுத்திவிடாது, ஒன்றையொன்று உவமைப்படுத்தி, உருவகப்படுத்தி விரித்து விரித்து எழுத வேண்டும் என்பது கவிஞர் மகுடேசுவரனின் அறிவுரை.
முக்கியமாக, கவிஞன் இலக்கணப் புலமையுடையவனாக, மொழியில் தேர்ச்சி பெற்றவனாக, அதனை மிகச் சிறப்பாகக் கையாளத் தெரிந்தவனாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
"புதிது புதிதாய்ப் பெயர்ச்சொற்களையும் வினைச்சொற்களையும் பயன்படுத்த வேண்டும். அடுத்து எந்தச் சொல்லைப் பயன்படுத்துவார் என்று பிறரால் கண்டுபிடிக்க முடியாதபடி இருக்க வேண்டும். சொற்கள் வலிமையாகத் தாக்கும். இலக்கணப் பிழையின்றி செம்மையான வடிவத்தில் கவிதை அமைய வேண்டும்," என்று கவிஞர் வலியுறுத்துகிறார்.
பின்னர் தமிழ் இலக்கணம் குறித்து, பங்கேற்பாளர்களின் பல ஐயங்களையும் அவர் தீர்த்துவைத்தார்.
சிராங்கூன் சாலை, ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலுக்கு எதிரிலுள்ள சந்திர மகாலில் இம்மாதம் 1ஆம் தேதி திங்கட்கிழமை இடம்பெற்ற இப்பயிலரங்கில் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
"கவிதையைப் பற்றியும் இலக்கணத்தைப் பற்றியும் ஒரு புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இப்பயிலரங்கை ஏற்பாடு செய்திருந்தோம். அவ்வகையில், மிக எளிமையாக எல்லாருக்கும் புரியும் வகையில் கவிஞர் இலக்கணத்தைக் கற்றுத் தந்தார்," என்று கவிமாலை அமைப்பின் தலைவர் கவிஞர் இன்பா கூறினார்.
கவிதை எழுதும் பலரும் மொழியைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமலேயே எழுதி வருவதாகக் குறிப்பிட்டார் பங்கேற்பாளர்களில் ஒருவரான திரு கேத்திரபாலன், 40.
"ஒரு கவிதை என்றால் எப்படி இருக்க வேண்டும், அதன் அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பன குறித்து கவிஞர் கற்றுத் தந்தார். மொழியறிவை வளர்த்துக்கொண்டு கவிதை எழுத வேண்டும் என்றார். நாம் ஆயிரம் கவிதைகளை எழுதினாலும் அவற்றுள் பத்தேனும் அடுத்தடுத்த தலைமுறைகள் சொல்லிக்கொள்ளும்படியாக விளங்க வேண்டும். சந்திப் பிழைகள், பகுபத உறுப்பிலக்கணம் போன்ற இலக்கணம் சார்ந்த பலவற்றையும் கற்றுக்கொண்டோம்," என்று மென்பொருள்துறையில் பணியாற்றும் திரு கேத்திரபாலன் சொன்னார்.
அவரைப் போலவே மென்பொருள்துறையில் பணியாற்றிவரும் திரு சரவணகுமார், 41, கடந்த ஓராண்டுகாலமாகப் புதுக்கவிதை எழுதி வருகிறார்.
"கவிதை எழுதும்போது ஒற்றுப்பிழை தவிர்க்கவும் பெயர்ச்சொல், வினைச்சொல் போன்றவை குறித்து அறிந்துகொள்ளும் நோக்கத்தில்தான் நான் இங்கு வந்தேன். இலக்கணம் பெருங்கடலாயினும் இந்த இரண்டு மணி நேரத்தில் தம்மால் முடிந்த அளவு அவர் விளக்கினார்," என்றார் திரு சரவணகுமார்.
மனத்தில் நிற்கும்படியான கவிதைகளை வரைய சொல் தேர்வு இன்றியமையாதது என்று கவிஞர் வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டார் தமிழாசிரியை பா. கங்கா.
"இலக்கணத்தை நன்கு அறிந்துகொண்டு அதன்பின்னர் கவிதையோ கட்டுரையோ எழுதும்போது மொழிப் பிழைகள் ஏற்பட வாய்ப்பில்லை. புதிய சொற்களை உருவாக்குவது நம் ஒவ்வொருவரின் கடமை என்றும் அதற்கு மொழி குறித்த ஆழ்ந்த அறிவு வேண்டும் என்றும் அவர் சொன்னார்," என்று திருவாட்டி கங்கா கூறினார்.
நிகழ்வில் கலந்துரையாடலும் இடம்பெற்றது தமக்குப் பிடித்து இருந்தது என்றும் அது இலக்கணம் சார்ந்த பல ஐயங்களைக் களைய உதவியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
"எல்லா நண்பர்களும் தங்களுடைய மனத்தில் நெடுநாளாக அரித்துக்கொண்டிருந்த மொழி ஐயங்களைக் கேட்டார்கள். எல்லாருக்கும் விடைகூற ஒரு வாய்ப்பாக இருந்தது," என்றார் கவிஞர் மகுடேசுவரன்.
ஒவ்வொருவரும் மொழி மக்களாக, மொழியின் தலைசிறந்த போர்வீரர்களாகத் திகழ்ந்து, இனியதொரு மொழிப் பங்களிப்பை ஆற்றுவர் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பயனுள்ள இப்பயிலரங்கு இன்னும் சற்று நேரம் நீடித்திருக்கக்கூடாதா என்று பங்கேற்பாளர்கள் எண்ணும்படியாகக் கவிதைப் பயிலரங்கு அமைந்திருந்தது. இதுபோன்ற பயிலரங்குகளைத் தொடர்ந்து ஏற்பாடு செய்வது தங்களைப் போன்றோருக்குப் பேருதவியாக இருக்கும் என்பது பங்கேற்பாளர்களின் கோரிக்கை.